ஞாயிறு, 9 அக்டோபர், 2016

அப்போலோ அறிக்கையில் முக்கிய மாற்றம்! முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் என்ற வார்த்தையை காணவில்லை ... வதந்திகள் உண்மையாகிறது?

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் 17 நாட்கள் ஆகிறது. இதுவரை அவரை மருத்துவர்கள் தவிர யாரும் சந்திக்க வில்லை. ஆளுநர் வித்யாசாகர் ராவ் உட்பட பல தலைவர்கள் மருத்துவமனை வந்தும், மருத்துவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்களே தவிர, ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இதற்கு அப்போலோ மருத்துவமனை முற்றுப்புள்ளி வைத்து வருகிறது.

மதிமுக பொதுச் செயலாளர்கள் வைகோ, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை தெரிந்து கொள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம், மருத்துவர்கள், முதல்வரின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதா நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினர்.

இந்த நிலையில், முதல்வரின் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன. சுவாச உதவி சிகிச்சையும் தொடர்ந்து தரப்படுகிறது. முதல்வரின் உடல்நிலையை மருத்துவக்குழுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் மேலும் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சகாயராஜ் விகடன்,காம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக