ஞாயிறு, 2 அக்டோபர், 2016

பிரம்மபுத்திராவின் துணை நதி நீரோட்டத்தை நிறுத்தியது சீனா ..திபெத்தில் புதிய அணை கட்டுகிறது

திபெத்தில் அணை கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரம்மபுத்திரா நதியின் துணை நதியான ஜியாபகுவின் நீரோட்டத்தை சீனா நிறுத்தியது.
இதனால் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு நீர்வரத்து குறையும் அபாய நிலைக்கு வாய்ப்புள்ளது.
இத்திட்டம் குறித்து அதன் நிர்வாகத் தலைவர் ஷாங் யுன்பாவை மேற்கோள் காட்டி சீன அரசுச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்ததாவது:
திபெத்தின் ஜியாúஸ பகுதியில் ஓடும் ஜியாபகு நதியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்துக்காக, அதன் நீரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத மிகப் பெரும் தொகையான 495 கோடி யூவான் (சுமார் ரூ.4,945 கோடி) செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்தத் திட்டம், வரும் 2019-ஆம் ஆண்டு நிறைவடைகிறது.

ஜியாபகு நதி நீரோட்டம் நிறுத்தப்பட்டிருப்பது பிரம்மபுத்திரா நதியின் நீர்வரத்தில் எந்த அளவு தாக்கத்தை எற்படுத்தும் என்பதையும், அது பிரம்மபுத்திரா பாயும் இந்தியா, வங்கேதசம் போன்ற நாடுகளில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் குறித்துத் தெளிவான விவரங்கள் இல்லை என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே "ஸாம்' நீர் மின் நிலையத்தை சீனா கடந்த ஆண்டு அமைத்தது. இதனால் தங்கள் பகுதியில் நீர்வரத்து குறையும் என்று இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது. எனினும், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அந்த அணை, மின்சாரம் தயாரிப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், நீரைத் தேக்கி வைப்பதற்காக அல்ல எனவும் சீனா விளக்கமளித்தது.
சீனாவின் 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 3 நீர் மின் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், பொதுவான நதிகளின் நீரோட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்படிக்கையை இரு நாடுகளும் கடந்த 2013-ஆம் ஆண்டு மேற்கொண்டன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர்ப் பகிர்வில், பெருமளவு நீரைப் பயன்படுத்திக்கொள்ளப் போவதாக இந்தியா அறிவித்துள்ள நிலையில், பிரம்மபுத்திராவின் துணை நதி நீரோட்டத்தை சீனா நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  dinamani,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக