வெள்ளி, 21 அக்டோபர், 2016

ஜனநாயகம் என்பது ஒரு வதந்தி ? சந்தேக வினாக்களை தடைசெய்தால் அதுதான் ஜனநாயகத்தின் மரணம்?

தமிழ்நாட்டில் இப்போது 'வதந்தி ஒடுக்குமுறைத் தடுப்புச் சட்டம்' என்று ஓர்
அவசரச் சட்டம் மட்டும்தான் கொண்டு வரப்படவில்லை. மற்றபடி, ஒவ்வொரு நாளும் இரண்டு பேராவது, வதந்தி பரப்பினார்கள் என்னும் குற்றச்சாற்றில் கைது செய்யப்படுகின்றனர். இன்றுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 50 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் பலர் குறித்த பல வதந்திகள் தமிழ்நாட்டில் உலவி உள்ளன. அப்போதெல்லாம் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டதில்லை. இப்போது மருத்துவமனையில் உள்ள முதல்வர் பற்றி யாரேனும் ஏதோ ஒரு சிறு கருத்தை வெளியிட்டாலும் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமூக வலைத் தளங்களில் செய்த பதிவுகளுக்காக இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கேள்வி கேட்பது குற்றம் ஆனால் குழந்தைகளுக்கு இரும்பால் குத்தலாம்? 

கோவையில் நடந்தது மிகக் கொடுமையாக உள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர், காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தாராம். "நான் இன்று ஒரு வங்கிக்குச் சென்றிருந்தேன். அங்கே அந்த வங்கியின் ஊழியர்கள் இருவர் அம்மாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிக் கொண்டிருந்தனர்" என்பதுதான் அவருடைய புகார். உடனே அந்த இருவரும் கைது செய்யப்பட்டுவிட்டனர்.

என்ன நியாயம் இது? இங்கே அறிவிக்கப்படாத நெருக்கடிக் காலம் நடைபெறுகிறதா? எதற்கும் ஓர் அளவுண்டு என்பதை அதிகாரம் செய்வோர் உணர வேண்டும். இல்லையேல் மக்களின் பரிவுணர்ச்சி கூட ஒரு வெறுப்பாக மாறிவிடும். நமக்கு ஓர் ஐயம் எழுகிறது....இந்த நாட்டில் ஜனநாயகம் உள்ளது என்று கூறுவதே ஒரு வதந்திதானோ? subavee.com  by சுப.வீரபாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக