வியாழன், 20 அக்டோபர், 2016

சசிகலா புஷ்பா :எனக்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார்! அன்று ஜெ.காக ராஜீவ் .. இன்று சசிக்காக மோடி... ரிப்பீட்டு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுவிட்டாலும், கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாகவே நீடிக்கிறார் சசிகலா புஷ்பா. முதல்வருக்கு ஆதரவாகவும் சசிகலாவுக்கு எதிராகவும் அவர் வெளியிடும் கருத்துகள் அரசியல் மட்டத்தில் கவனிக்கப்படுகிறது. ராஜாத்தி அம்மாவின் சமாதானப் பேச்சு எடுபடாமல் போனதால், சசிகலா புஷ்பாவுக்கு எதிரான சுவரொட்டிகள், வழக்குகள் என விவகாரம் நீண்டுகொண்டே செல்கிறது.
சசிகலா புஷ்பாவிடம் பேசினோம்.
;தஞ்சை இடைத் தேர்தலில் முதல்வர் முன்பு தேர்வு செய்த ரங்கசாமியே நிற்கிறார். 'சசிகலா நிற்பார்' என்று வந்த செய்தி, வதந்திதானே?
" நிச்சயமாக இல்லை. அவர்களுடைய முதல் நோக்கமே, ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பிடிப்பதும் தஞ்சையில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதுதான். ' கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஆகிவிட வேண்டும்' என முனைப்போடு செயல்பட்டார் சசிகலா. ' முதல்வரின் கையெழுத்தைப் பயன்படுத்தி மோசடி நடக்கலாம்' என நான் பேச ஆரம்பித்ததும், பின்வாங்கிவிட்டார். 'அப்படியே போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது' என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார்.
அவர்களுடைய சொந்த சமூகத்திலேயே அவருக்கு ஆதரவு இல்லை என்பதுதான் உண்மை. இடைத்தேர்தலில் அவர் நின்றிருந்தால், இதுவரையில் நான் வெளியிட்ட கருத்துகள் அனைத்தும் உண்மை என்பதுபோல் ஆகிவிடும். அவர்களுடைய முயற்சிகள் பலிக்காததால்தான், தொடர்ச்சியான மிரட்டல்களுக்கும் வழக்குகளுக்கும் ஆளாகி வருகிறேன்".
உங்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ராஜாத்தி அம்மாள் ஈடுபட்டாரா? 
" சில விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக பேச முடியாது. பதில் சொல்லாமல் தவிர்ப்பதே நல்லது".
தனிப்பட்ட முறையில் உங்களை விமர்சித்து, சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை கவனித்தீர்களா? 
"முதலமைச்சர் நன்றாக இருந்தவரையில், எனக்கு எதிராக ஒரு சுவரொட்டிகூட ஒட்டப்படவில்லை. தற்போது அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. சசிகலாவுக்கு எதிராக பேட்டி கொடுத்ததும், ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். உண்மையில் இவர்கள் முதல்வரை எந்தநிலையில் வைத்திருப்பார்கள் என்ற சந்தேகம்தான் அதிகரிக்கிறது. பெண் என்றாலே ஒரு கருணைப் பார்வை இருக்கும். இப்படியொரு போஸ்டர் ஒட்டுவது நாகரிகமான செயல் அல்ல. அவர்களையும் நான் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அரசியல்ரீதியாக விமர்சிக்கவே விரும்புகிறேன்".
உங்களுக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர் வீடு தாக்கப்பட்டுள்ள வழக்கிலும் நீங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறீர்களே? 
"அதிகாரிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் என்பதை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். அந்த வழக்கறிஞர் யார் என்றே எனக்குத் தெரியாது. அவர் வீட்டின் மீதான தாக்குதலுக்கு என் மீது வழக்குப் போடுகிறார்கள். அம்மாவுக்கு ஆதரவாக இருப்பதால்தான், நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் தரக்குறைவாக எழுதுகிறார்கள். அது அம்மா உருவாக்கிய பத்திரிகை. அம்மாவுக்கு ஆதரவாக இருப்பவர்களைப் பற்றி தவறாக எழுதுகிறார்கள் என்றால், கட்சியை எந்தளவுக்கு அவர்கள் கையில் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் எண்ணங்கள் நிறைவேறவில்லை. அந்தக் கோபத்தைத்தான் இதுபோன்ற வழிகளில் காட்டுகிறார்கள். முதல்வரின் உடல்நிலைக்கு கட்டாயம் விளக்கம் வேண்டும். இப்போது வரையில் முதல்வர் எப்படி இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இப்படியொரு சூழல் எந்தவொரு முதலமைச்சருக்கும் வந்ததில்லை. எந்த மாநிலத்திலும் இதுபோல் நடந்தது இல்லை. இதற்கு யார் காரணம் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டார்கள்".
ஓ.பி.எஸ் மகிழ்ச்சியான நிலையில்தான் இருக்கிறாரா? 
"தமிழ்நாட்டின் சூழலுக்கு ஒரு முதலமைச்சர் தேவை. அதில் ஒரு சாய்ஸாக ஓ.பி.எஸ் இருந்தார். அவர் மூன்று முறை முதல்வராக இருந்தவர். மீண்டும் அவருக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதில், சசிகலாவுக்கு விருப்பமில்லை".
உங்களை இயக்குவதே பா.ஜ.க.தான் என்கிறார்களே? 
"நிச்சயமாக. மத்திய அரசின் மூலம்தான் இவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என சில வேலைகளில் இறங்கியிருக்கிறேன். என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு ஆதரவாக இருக்கிறது. பா.ஜ.க.வில் உள்ள மூத்த தலைவர்களும் எனக்குப் பக்கபலமாக இருக்கின்றனர். பிரதமரின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் அராஜகமான போக்குடன் செயல்பட்டு, முதல்வரை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று யாரும் நினைத்தால் கட்டாயம் குரல் கொடுப்பேன். எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது முதல்வர்தான். இந்த நேரத்தில் நான் தட்டிக் கேட்பதை தொண்டர்கள் விரும்புகின்றனர். முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவர்கள் உள்ளே சென்று பார்க்கும்போது, யாராவது ஓர் அரசியல்வாதி உள்ளே சென்று பார்க்க முடியாதா? முதல்வர் எப்படி இருக்கிறார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கத்தானே செய்யும்".
சரி...தமிழக அரசியல் சூழலை மோடி எப்படி கவனிக்கிறார்?
"அது போகப் போகத் தெரியும்".
- ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக