வியாழன், 20 அக்டோபர், 2016

ஒரு நாள் கூத்து... படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

இந்த படம் வெளிவந்து (ஜூன் 2016) நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இறைவி போன்ற ‘பேசப்பட்ட’ படங்களின் காலத்தில் இந்தப் படம் அதிகம் பேசப்படாமல் போனது அதிசயமல்ல. அந்த பேசாமைக்கு காரணம் காதல், திருமணம் குறித்து உள்ளது உள்ளபடி உரையாடுவதற்கு நம் சமூகம் இன்னமும் தயாராக இல்லை.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கும் காவ்யா (நிவேதா); அப்பாவின் கௌரவத்தால் திருமணம் தள்ளிப் போகும் லக்ஷ்மி (மியா); நடுத்தர வர்க்கத்திற்கே உரிய நிபந்தனைகளால் திருமணத்திற்கு போராடும் சுசிலா (ரித்விகா) என மூன்று பெண்களின் திருமண – காதல் நிகழ்வுகளை எதிரும் புதிருமான வாழ்க்கை அனுபவங்களைச் சுற்றி இக்கதை பின்னப்பட்டிருக்கிறது.

கதையின் நாயகிகளான மூன்று பெண்களோடு அவர்களைச் சுற்றியும், பாதுகாத்தும், கடைத்தேற்றியும், காதலித்தும் வாழும் ஆண்களும்  கதையில் கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கின்றார்கள்.

“நீ அழகா அடக்க ஒடுக்கமா இருக்கியாம், உன்ன கல்யாணம் செய்யறவன் கொடுத்து வைச்சவனாம்” என்று திண்டுக்கல் கல்லூரி நாட்களில் நெல்லைத் தோழி “ஏம்லே” சேர்த்துச் சொல்லும் போது லக்ஷ்மி “ஆமாம்ல” என்று வெட்கத்துடன் பெருமைப்படுகிறாள். இருப்பினும் அந்தப் பெருமை சடுதியில் சோகமாய் உருமாறுகிறது. சடுதிகளாய் வரும் காட்சிகளில் பலர் அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். “உங்களைத்தான் மனசுல நினைச்சிருக்கோம்” என்று அனைவரிடமும் ஏமாற்றுகிறார், அவளது அப்பா. நிலைக் கண்ணாடியில் ஒட்டுப் பொட்டை ரசித்துக் கொண்டே பொறித்தவளுக்கு பின்னர் அந்தப் பொட்டே ஒட்டாமல் கீறுகிறது.
வந்தவர்கள் தனது சொத்து, கௌரவத்திற்கு இணையாக இல்லை என்று கருதும் லக்ஷ்மியின் அப்பாவை கடைசியில் வரும் சென்னை இளைஞனது குடும்பத்தினர் அதே விதியைச் சொல்லி (உங்களத்தான் மனசுல வச்சுருக்கோம், போய்ட்டு நல்ல சேதி சொல்லுறோம் காத்திருங்க!) நிராகரிக்கின்றனர். ஆணும் பெண்ணும் காதலித்து மணம் செய்யும் வாய்ப்பில்லாத சமூகத்தில் பெற்றோர் ஏற்பாட்டால் வரும் வாய்ப்பைக் கூட விரும்பும் நிலைமை இல்லை. சென்னை இளைஞன் லக்ஷ்மியை மனதார விரும்புகிறான். அவனது பெற்றோரோ மறுக்கின்றனர். “உன் விருப்பம் முக்கியமல்ல, உன் பெற்றோரை பேசச் சொல்” என்கிறார் லக்ஷிமியின் அப்பா. மொட்டை மாடியில் தோழியின் உந்துதலுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்னை இளைஞனோடு வாழச் செல்கிறாள் லக்ஷ்மி. கோயம்பேட்டில் அந்த இளைஞைனை பிடித்துச் செல்லும் குடும்பத்தார் அங்கே பரிதாபமாய் நிற்கும் லக்ஷ்மியை வக்கிரமாக திட்டுகிறார்கள்.
பணிவும் கனிவும் பாந்தமும் சாந்தமும் தனக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் அல்ல, வாழ்வைத் தடை செய்யும் விதிமுறைகள் என்று லக்ஷ்மி உணரும் போது கொஞ்சம் தைரியமடைகிறாள். சென்னைக்கு ‘ஓடிப்’ போன கதையை தோழியைப் பார்க்க போவதாக கூறி ஊர் – உறவு வாய்களை அடைக்கிறாள். அது இழப்பதற்கு ஏதுமற்ற நிலையில் பிறக்கும் ஒரு வைராக்கியம். பசங்கல்லாம் ரொம்ப நல்லவன்ங்கடி என்று அதிரடியாக பேசும் நெல்லைத் தோழி பிறகு மணமாகி பிரிந்து முன்னாள் காதலன் இரண்டாம் மணம் செய்ததைக் கூறும் போது பசங்களின் உண்மை முகத்தை ஒப்புக் கொள்கிறாள். எனினும் அவன் கொடுத்த இரண்டு குழந்தைகளின் பொருட்டு இனி அவளும் அடக்க ஒடுக்கமாகத்தான் வாழ வேண்டும்.
லட்சுமிகளாக அழைக்கப்பட வேண்டியவர்கள் லக்ஷ்மிகளாக விரும்பும் போது லஷ்மியின் செல்வக் குறியீடு தடை போடுகிறது. லக்ஷ்மியை ‘ஒழுக்கத்துடன்’ வளர்த்திருப்பதால், தனது சொத்து-அந்தஸ்தை திருப்பதி படுத்தும் தரமான காளை மாடு கிடைக்கும் வரை, அவளை அடிமை மகளாக நடத்துவதை எவ்வித உணர்ச்சியுமின்றி நிதானமாக செய்கிறார் தந்தை. தந்தையின் ‘அருளி’ல் உறைந்திருக்கும் வில்லத்தனத்தை, உடன்பிறப்பின் கையறு நிலை கண்டு சாடுகிறாள் லக்ஷ்மியின் அக்கா!
லக்ஷ்மியை பார்த்ததுமே அதிரடியாக காதலிக்கும் சென்னை இளைஞன், எதிர்ப்பு வரும் போது லக்ஷ்மியை ஓடி வா என்று கலகக்காரனாக அழைக்கிறான். எனினும் இந்த நாகரிகமும், அதிரடி சாகசமும் பேருந்து நிலையத்தில் இழுத்துச் செல்லும் அம்மாவின் அடியாட்களை மறுக்கும் வலிமையாக அவனிடத்தில் இருக்கவில்லை. சொத்து – அந்தஸ்தில் முளைத்து எழுந்திருக்கும் அவனது வேரில் சமூகத்தின் நீரை உரிஞ்சும் சக்தி இல்லை என்பதால் அவனது ஆசை நிராசையாக தோற்றுப் போகிறது.

திருச்சியில் அப்பா நடத்தும் வசதியான சாம்ராஜ்ஜியத்தின் உதவியுடன் சென்னை ஐ.டி துறையை தெரிவு செய்யும் காவ்யா, திண்டுக்கல் லக்ஷ்மி போல கட்டுப்பெட்டி அல்ல. “நீங்க ஃபிக்ஸடா, சிங்கிளா” என்று ராஜ்ஜுடன் அறிமுகமாகி, செல்பேசிகளின் பேச்சுக்களில் காதலாகி, நள்ளிரவு பைக் சவாரியில் அடுக்குமாடி தம்பதியினராக கனவும் நனவும் இணைந்த திட்டத்தில் கலந்து பயணிக்கிறாள்.
திண்டுக்கல் அப்பா போல திருச்சி அப்பா அமைதியாக தனது அந்தஸ்து விதிகளை வைத்திருக்கவில்லை. கன்று அலைந்தாலும் பால்மடி தேடி வரவேண்டும் என்பதால் விட்டுப் பிடிக்கிறார். இதற்கு அவர் மெனக்கெடவேண்டிய அவசியத்தை ராஜ்ஜும் வைக்கவில்லை.
ஏழ்மைப் பின்னணியிலிருந்து முதல் தலைமுறையாக பழைய மகாபலிபுரம் சாலை வாழ்க்கையை தரிசிக்கும் அவனுக்கு எங்கே எப்படி நிலை கொள்வது என்பது சிக்கலாகிறது. எனக்கு என் குடும்பத்தினரை பிடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதே என்ன செய்ய என்று காவ்யாவிடம் தடுமாற்றத்தை பகிர்கிறான். தனது பின்னணியைப் பற்றி, தந்தையைப் பற்றி, காரில்லாத தனது அந்தஸ்தைப் பற்றி காவ்யா அப்பாவிடம் எப்படி சொல்வது என்பதே அவனது தேவதாஸ் சோகத்திற்கு போதுமானது.
Oru-Naal-Koothu-Movie-posterதனது மகளின் சுதந்திரத்திற்கும், தன் மகள் விரும்பும் காதலனது தடைகளுக்கும் காரணமான “சொத்து-அந்தஸ்து” என்ற யதார்த்தமான உண்மையைக் கொண்டு இலாவகமாக விளையாடுகிறார், காவ்யாவின் அப்பா. பெர்னார்ட் ஷாவின் மேஜர் பார்பரா நாடகத்தில் வரும் பீரங்கித் தொழிற்சாலையின் முதலாளி அண்டர்ஸாப்டோடு ஒப்பிடத் தகுந்தவர் இந்த தந்தை. சுதந்திரவாதம் பேசும் தனது மகனை அவன் வாயாலேயே அது முதலாளித்துவம் அருளிய பிச்சை என்று தெளியவைக்கும் அவரது திறமையை இங்கே காவ்யாவின் அப்பாவிடமும் காண்கிறோம்.
போக்குவரத்து நெருக்கடியால் சந்திக்க வரவில்லை என்ற சால்ஜாப்பை சொந்த ஆளுமையின் நெருக்கடி என்பதாக முதல் பார்வையிலும், முதல் கேள்வியிலும் ராஜ்ஜிடம் கிண்டுகிறார் அவர். எதிர்பார்த்தபடி பதட்டமடையும் ராஜ், தனது சுயமரியாதை கேலி செய்யப்படுவதை சகிக்க முடியாததோடு, தனது கனவுக் காதலும் நிறைவேறாது என்பதை அவலத்துடன் ஏற்க வேண்டியிருக்கிறது.
மகளின் சொந்த விருப்பத்திற்கு தடை சொல்லா தந்தையாக காட்சியளிப்பவர், ராஜ் ஏன் அவளை உடன் திருமணம் செய்ய முடியாது என்பதை மறுக்க முடியாதபடி விளக்குகிறார். திருமணப் பேச்சை ஆரம்பித்தால் குடும்ப பாரங்களை கரையேற்றிவிட்டு செய்வதாக ராஜ் கண்டிப்பாக கூறுவான் என்று சரியாக கணிக்கும் அவர், காதலி பெரிதா, குடும்ப பாரம் பெரிதா என்ற போராட்டத்தில் சிக்குண்ட ராஜ்ஜை மணந்தால் அங்கே மணம் வீசாது, சோகம் வாட்டியெடுக்கும் என்கிறார். இதற்கு மேல் காவ்யாவின் காதல் நீடித்திருக்க அடிப்படையில்லை.
எனினும் தனது தந்தை தனது காதலனை நாயென பகடி செய்து துரத்தி விட்டதாக கருதும் காவ்யா, அதையே தனது காதலனது விளக்கத்தால் பின்னர் அறிந்து கொண்டாலும் அவள் காதலுக்காக எந்த அதிரடி முடிவையும் எடுக்கவில்லை. காரும், சொந்த வீடும், தனித்துவமான வாழ்க்கையும் நிபந்தனைகளாக இருக்குமளவுதான் அவளது சுதந்திரத்திற்கு மதிப்பு. இந்த பேருண்மையை அறிந்ததால்தான் அவள் தந்தை பிடித்து வந்த அமெரிக்க மாப்பிள்ளைக்கு  தலையசைக்கிறாள். பிறகு அந்த திருமணமும் மாப்பிள்ளை தந்தையின் திடீர் மரணத்தால் நிறுத்தப்படுகிறது.
மூகூர்த்தமன்று நின்று போகும் திருமணத்திற்கு பையன்கள் கிடைக்கமாட்டார்கள் என்று சுற்றம் கூறும் போது வேண்டா வெறுப்பாக என்றாலும் தயக்கத்துடன் ராஜ்ஜை அழைத்து வரவா என்று கேட்கிறார். குடித்து விட்டு மட்டையாகிக் கிடக்கும் ராஜும் நண்பனோடு திருச்சியில் நடைபெறும் காவ்யாவின் திருமணத்திற்கு விரையும் போது இதைக் கேள்விப்படுகிறான். அப்போது தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று காதல் மேலோங்க விரைகிறான்.
“நீங்கள் நினைத்த போது பயன்படுத்திக் கொள்வதற்கு ராஜ் ஒரு “Back-up option” கிடையாது என்கிறாள் காவ்யா. தனது காதலனது சுயமரியாதையை இழக்க அவள் சம்மதிக்கவில்லை என்று நமக்கும் தோன்றலாம். ஆனால் யதார்த்தம் தந்தை சொல்லும் அந்தஸ்து வகைகளோடு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பழையைவை மறுக்கும் ஒரு புதுக்குருத்து போல இளம்பெண்ணான அவளது காதல் அப்படி கற்பனை செய்வதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். அதே போன்று சுயமரியாதையை இழந்தாலும் காவ்யாவை கைப்பிடிப்போமா என்று யோசிக்கும் போது ராஜ்ஜிடமும் அந்த ஏக்கத்தை பார்க்கிறோம். ஏமாற்றங்களை எதிர்த்துப் போராட முடியாத தளைகளில் இரு இளம் மனங்கள் அலைபாய்கின்றன.

க்ஷ்மி ஒரு கட்டுப்பெட்டி, காவ்யா ஒரு சுதந்திரப் பறவை என்றால் சுசிலா யார்? அவள் எல்லாவற்றிலும் நடுவில் நின்று கொண்டு அல்லாடும் நடுத்தர வர்க்கம். அதாவது காதலிக்கும் வாய்ப்பிருந்தும், காதலின் செயற்கை வெளியை அன்றாடம் பார்ப்பவளாக இருப்பதாலும், ஒரு வானொலி பண்பலை அறிவிப்பாளராக வளவளவென்று பேசினாலும், பேச முடியாத பாலினம் மற்றும் ஒரு சராசரிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதாலும் அவள் அடங்கியே வாசிக்கிறாள். அவளது மாநிற சராசரி தோற்றம் குறை தேடுவோருக்கு ஒரு கூடுதல் அம்சம். லக்ஷ்மியைப் போன்ற கனவோ, காவ்யாவைப் போன்று தெரிவோ இல்லாமல் கிடைக்கும் வாழ்வு போதுமென்பவள் சுசிலா. ஆயினும் கிடைத்ததா?
அண்ணன் பெண் பார்த்து அலைவது போதாது என்று அவளும் இணைய மணமக்கள் தளங்களில் தேடுகிறாள். அந்த தேடலை உளவறிந்து பார்க்கும் சக அறிவிப்பாளரான சதீஷின் பார்வையில் அவள் ஒரு நெருப்பு. ஆனால் அந்த நெருப்பு தனது உள்ளுறை எரிபொருளால் எரிவதல்ல, பெண் பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள் என்று சுற்றத்தினர் ஊற்றும் சொற்களால் எரிகிறது.
ஒருவழியாக மகிழுந்து விற்கும்  நிறுவனத்தின் ஊழியன் அவளை சம்மதிக்கிறான். எப்படி? ஊடகங்களில் வேலை செய்யும் பெண்கள் மீது சந்தேகப்படும் ஊராருக்கு என்ன பதில் என்கிறான். கோவிலில் மண விசயமாக சுற்றும் நம்மை, தம்பதியினர் எனும் நினைப்போரால் அது உண்மையாகி விடாது அல்லவா, அது போல பார்ப்போரின் முன்முடிவும், தவறான எண்ணங்களுமே அப்படி தீர்மானிக்கும் என்கிறாள். இவளை மண முடிக்கலாம் என்று நண்பனது ஆலோசனையைக் கேட்டு சம்மதிக்கிறான் மகிழுந்து இளைஞன்.
அதே நண்பன் வேறு ஒரு உடன் பணியாற்றுபவனின் மணமகளைப் பார்த்து அவளைப் போன்ற அழகானவள் நமக்கில்லை என்று சொல்லும் போது மகிழுந்து இளைஞன் தடுமாற ஆரம்பிக்கிறான். அதாவது அழகிலும், நிறத்திலும், பணியிலும் தரம் குறைந்தவளை அவசரப்பட்டு ஏற்றுவிட்டோமோ என்று உள்ளே குமைகிறான். நவீன செல்பேசிகளையோ இல்லை சலவை எந்திரங்களையோ ஏன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு கூட உடன் பாணியாற்றும் விற்பன்னர்களிடம் ஆலோசனை கேட்கும் போது வாழ்க்கைத் துணை குறித்த அவர்களின் மதிப்பீடு மிக முக்கியமல்லவா?
ஆனால் அந்த மதிப்பீடு வெறுமனே கார்களை அழகென்றோ, நவீன வசதியானதென்றோ, வட்டியில்லா கடனுக்கு கிடைக்குமென்றோ, நிறுத்தும் வசதி இல்லையென்றாலும் தெருவில் நிறுத்தலாமென்றோ வாடிக்கையாளர்களை வென்றெடுக்கும் ஒரு மகிழுந்து விற்பன்னரிடம் என்னவாக இருக்கும்? காரை எப்படியாவது தள்ளுபவனின் திறமை ஒரு காரிகையை பிடிப்பதில் மட்டும் எப்படி வேறுபடும்?
திருமணத்தை நிறுத்து, அந்தப் பெண்ணின் வாழ்வோடு விளையாடாதே என்று அந்த இளைஞனின் மேலாளர் எச்சரிக்கிறார். அவர் கார்களோடு பல காலம் பழகிய அனுபவஸ்தர். சுசீலாவின் ஃபேஸ்புக் படங்களையை மணிக்கணக்கில் மாற்றி மாற்றி பார்ப்பவனுக்கு அந்த காரை வாங்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. தனது ஏமாற்றத்தை தவிர்க்கும் பொருட்டு பல சுற்று போராட்டங்களுக்குப் பிறகு சுசீலாவிடம் அதுவும் அவள் பண்பலை நிகழ்ச்சியை துவக்கும் அவசரமான நேரத்தில் சட்டென்று தெரிவிக்கிறான்.
அவன் ஆசுவாசப்பட ஆரம்பிக்கும் நேரத்தில் சுசீலாவின் வதை படலமும் துவங்குகிறது. நிச்சயதார்த்தம் முடிவாகி, நாள் குறித்து, ஆடை அணிகலன் வாங்கி, மண்டபமும் பிடித்த பிறகு இந்த திருமணம் நின்றால் அவளை சுற்றி வந்து படையெடுக்கும் “என்னாச்சு” கேள்விகளுக்கும், இப்போதாவது முடிந்ததே என்று பெருமூச்சுவிடும் அண்ணன் மற்றம் குடும்பத்தாரின் கடமை அர்ப்பணிப்புகளுக்கும் என்ன சொல்வது? என்னை மணமுடித்து விட்டாவது ரத்து செய் என்று அவலத்தின் கடைசி எல்லை வரை சென்றும் கெஞ்சுகிறாள். அவனோ அழகற்ற ஒரு பெண்ணை இப்போதாவது மறுத்து விட்டோமே என்ற சுய வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவில் மறுக்கிறான்.
அதே நேரம் அவன் கெட்டவனும் அல்ல. சுசீலாவின் அண்ணனும், மாமாவும் வீடு ஏறி வந்து காத்திருந்த போதும் அவர்களின் முகம் பார்த்து மறுக்கும் தைரியம் அவனுக்கில்லை. பேசி கழுத்தறுத்துவிட்டோமென்ற குற்ற உணர்வு அவனிடம் இல்லாமல் இல்லை. சுசீலாவிடம் அதை வெளிப்படையாக காட்டுபவன், சுற்றத்தாரிடம் ஏன் காட்ட முடியவில்லை?
சுசீலாவோ தனது அண்ணனிடம் எப்படியாவது மகிழுந்து இளைஞனை பேசி சரி செய்யுமாறு நச்சரிக்கிறாள். அவள் நச்சரிக்கவில்லை என்றாலும் கருணாகரனுக்கும் வேறு வழியில்லை. இறுதியில் சாமி மலை இறங்குவது போல மகிழுந்து இளைஞன் மனம் மாறுகிறான். தான் அழகில்லை என்று கருதிய மதிப்பீட்டின் இன்பத்தை விட, கழுத்தறுத்தவன் என்ற குற்ற உணர்வின் துன்பம் அவனை மாற்றியிருக்க கூடும்.
ஆனால் அவனது மனமாற்றம் நடந்தேறும் தருணம் சுசீலாவும் “இனி நமக்கு செட்டாகாது” என்று மனம் மாறி முறித்துக் கொள்கிறாள். அடுத்த காட்சியில் அவளும் சதீஷும் ஒரே படுக்கையில்! “சீ இதுக்குத்தான இவ்வளவும், திருமண ஏற்பாடுகளை நினைச்சாலே கேவலமாக இருக்கிறது” என்பவள் இவ்வுறவின் பொருட்டு உன்னை மணமுடிக்குமாறு கேட்கமாட்டேன் என்று சதீஷிடம் சிரிக்கிறாள். அவனோ அப்படி கல்யாணம் செய்தால்தான் என்ன? என்று புன்னகைக்கிறான்.
கலகத்தின் திளைப்பில் அநாகரீகத்தை புரிந்து கொண்டவள் மீண்டும் திருமண பந்தத்தில் பாதுகாப்பாக அடைக்கலம் தேடலாம் என தனது ஆசையை அதாவது எல்லாம் பொருந்திய உறவை கண்டடைகிறாள். கோயம்பேடு தனியார் சொகுசு பேருந்து நிலையத்தில் ஒரு வாரம் கழித்து பெற்றோரோடு வந்து பேசுவேன் என்று சதீஷ் சொல்லும் போது ஒரு வாரமா என்று மலைக்கிறாள். ஐந்தாண்டுகள் அவள் பட்ட அவதிகளுக்கு இந்த ஒரு வாரமே மிக நீண்ட காலம் என்று தோன்றியிருக்கும். அது உண்மைதான்.
திருச்சிக்குச் சென்ற சதீஷ், எதிர்பாரா விதத்தில் திருமணம் நின்று போன காவ்யாவை மணக்கிறான். சுசீலாவுக்கு அந்த தகவல் தொலைபேசி மூலம் வருகிறது. அடுத்த கணத்தில் அவளது பண்பலை நிகழ்ச்சியும் ஆரம்பிக்கிறது” வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள், மேடு பள்ளங்கள், தோல்விகள் எல்லாம் இருக்கும். என்ன ஃபிலாசபிக்கலா பேசுறேன்னு பாக்கிறீங்களா ஏதோ சொல்லணுமுன்னு தோணிச்சு அவ்வளவுதான்.” என்று முடிக்கிறாள்.

க்ஷ்மி, காவ்யா, சுசீலா ஆகிய மூவரின் கதைகளையும் ஒரு இடத்தில் முடிப்பதற்கும், பிறகு தொடர்வதற்கும் இயக்குநர் ஒரு சாலை விபத்தை சேர்த்திருக்கிறார். விபத்து, ரத்தம், மரணம், வேகமான பேருந்து போன்ற அதிரடிகளால் அல்ல, எனக்கு தரங்குறைந்த பட்டுடன் தாம்பளத்தில் அழைப்பிதழ் வைத்தான் போன்னற சில்லறை விசயங்கள் கூட ஒரு நாள் கூத்தை புரட்டி போட்டுவிடும். “காதலில் சொதப்புவது எப்படி” திரைப்படத்தில், புதுவையில் மதுவருந்தும் நண்பனை இலேசாக தூண்டி விட்டு அவனது காதலியை சந்தேகப்பட வைப்பான் அதே காதலியின் முன்னாள் காதலன். ஆகையால் அந்த விபத்து மையமில்லாமலேயே கூட இந்தப் படம் தனித்து மிளிரத்தான செய்யும்.
திருமணம் குறித்த கனவுகள், கற்பனைகளை நாம் ஒவ்வொருவரும் சில பல ஆண்டுகளை தனித்திருந்து அசை போடுவதால் செலவழிக்கிறோம். அந்த செலவால் வரவு என்ன? சில பல இன்பியல் கனவுகள், ஆசைகளைத் தாண்டி இருபாலாரையும் இணைக்கும் இந்த சமூக நிகழ்வின் சட்டதிட்டங்களையும், புரட்டிப் போடும் சதுரங்க ஆட்டத்தையும் நாம் ஒரு போதும் அறிய முடிவதில்லை. அறிவதற்கான அனுபவங்கள் கிடைத்து கனியும் போது மாற்றுவதற்கான முயற்சியோ தேடலோ இல்லை என்பதால் அதே சட்டதிட்டங்களை வாழையடி வாழையாக உபதேசிக்கும் பெரிசுகளாக மாறுகிறோம்.
திருமணம், காதலுக்கு இவ்வளவு விசித்திரமான, நுணுக்கமான, அநாகரிகமான சட்டதிட்டங்களை வைத்திருக்கும் பார்ப்பனிய சமூக அமைப்பு போல உலகில் வெறு எங்கும் இருக்குமா என்பது ஐயம். அதனால்தான் இந்த சட்டதிட்டங்களை மறைத்து திருநெல்வேலி அல்வாவை வெட்டும் திருப்பாச்சி அரிவாள் போல அவ்வளவு சுலபமாக ஆணும் பெண்ணும் பிரச்சினையே இன்றி காதலிக்கும் தமிழ்ப் படங்கள் இங்கே இளையோரின் சுய இன்ப அடையாளங்களாக மாறிவிட்டன. சமூகத்தின் பாதுகாப்பில் திளைத்திருக்க வேண்டிய இன்பம் சுயமாக எப்படி நீடிக்கும்?
வேட்டையாடும் ஆண்களும், வேட்டையாடப்படும் பெண்களும் உருவாக்கி வைத்திருக்கும் சமரசங்கள், காரியவாதங்கள், தயக்கங்கள், ஆசைகள், வேடங்கள் மற்றும் கலகங்களை மிகவும் நேர்த்தியான திரைக்கதையால் செறிவான உணர்ச்சியோட்டத்துடன் சித்தரிக்கிறது, ஒரு நாள் கூத்து திரைப்படம்.
இந்தப் படத்தில் வரும் மையப் பாத்திரங்கள் அனைவரும் அவரவர் நோக்கில வெளிப்படுத்தும் இரு துருவ வெளிப்பாடுகளை இயக்குநர் துல்லியமாக  கொண்டு வருகிறார். அதே நேரம் மூன்று பெண்கள் அவர்களைச் சுற்றி மூன்று விதமான ஆண்கள், குடும்பங்கள் அனைத்தையம் வியப்பூட்டும் விதத்தில் ஓரிழையில் இணைத்து ஒரு கதையாக அதுவும் யதார்த்தத்தோடு போட்டி போடும் அனுபவமாக கையளிப்பது சவாலான விசயம். பல காட்சிகள் சேர்ந்து கூற வேண்டிய உணர்வையும் – உணர்ச்சியையும் இப்படத்தின் கூரிய உரையாடல்கள் ஆழமாக கொண்டு வந்திருக்கின்றன. காட்சி ஊடகத்தை வாழ்க்கை குறித்த ஒரு வலுவான கண்ணோட்டம் பயன்படுத்தும் போது மட்டுமே இத்தகைய சாதனை சாத்தியம்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
  • இளநம்பி வினவு.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக