செவ்வாய், 4 அக்டோபர், 2016

ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முடிவு?

ரயில்வே நிலத்தை மேம்படுத்த தனியாருக்கு வாய்ப்பு: தமிழகத்தில் முதல் முயற்சி தாம்பரம் ரயில் நிலையம் முதல், சானடோரியம் வரை உள்ள, ரயில்வே துறைக்கு சொந்தமான நிலம், வர்த்தக ரீதியான மேம்பாட்டுக்காக, தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ளது. மும்பையை போன்று, தமிழகத்திலும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும், ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்கள், பயன்பாடின்றி, காலியாக உள்ளதால், வருவாய் இழப்பு ஏற்படுவதாக, தணிக்கை துறை சுட்டிக்காட்டி வருகிறது. இதையடுத்து, எதிர்கால தேவை என்ற பெயரில், நகரங்களின் பெரிய ரயில் நிலையங்களுக்கு அருகே, பயன்பாடின்றி உள்ள நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில், ஏற்கனவே, ரயில்வே துறை காலி நிலங்கள், நிபந்தனை அடிப்படையில், தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.


அதேபோல, தமிழகத்தில்முதன்முறையாக, தாம்பரம் ரயில் நிலையம் முதல், சானடோரியம் வரை, ரயில் பாதைக்கு மேற்கே, ஜி.எஸ்டி., சாலையை ஒட்டியுள்ள நிலத்தை, தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புக்காக, இந்த இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஊழியர்கள் இதை விரும்பாததால், இந்த இடம், மேம்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி உள்ளதால், இந்த நிலத்தை, வர்த்தக ரீதியாக மேம்படுத்தினால், பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது. ஆர்வம் இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
 பயன்பாடு இல்லாத நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, தனியாருக்கு வழங்கும் நடைமுறைகள் குறித்து, ரயில்வே அதிகாரிகள், சமீபத்தில் ஆய்வு செய்தனர். இதுகுறித்த அறிக்கை, வாரிய உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தரைதள பகுதியை, ரயில்வே துறை பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும்.அதன்மேல், தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள் கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படும்.
இதற்கான நிதியை முதலீடு செய்ய, ஏராளமான தனியார் கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி உள்ளன; இது தொடர்பான இறுதி முடிவை, ரயில்வே வாரியம் விரைவில் அறிவிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக