வியாழன், 13 அக்டோபர், 2016

நாட்டுப்புறபாடல்களின் மீட்டுருவாக்கத்தின் அவசியம்; ஜோக்கர் படப் பாடல்களை முன்வைத்து

thetimestamil.com :ஜீவா பொன்னுசாமி : கலையும்
இலக்கியமும் சமூகத்திற்கு ஆகப்பெரும் கொடை என்பதில் சந்தேகமில்லை.  நவீனப்படுத்தப்பட்ட மறு வடிவங்களாக கலைகளுக்கு புகலிடமாக ஆக்கப்பட்டு விட்ட சினிமாவும், அச்சில் ஏறி வாசகனை சென்றடைவதை விட வலைத்தளம் மூலம் இலக்கிய படைப்பு பெருவீச்சில் சென்றடைவதும் மீட்டுருவாக்கத்தின் ஒரு மறுவடிவமே!
ஜீவா பொன்னுசாமிஅவ்வகையில் பாடல்கள் என்பது, நாட்டுப்புறப்பாடல் முதல் சங்க இலக்கியம் தொட்டு நவீன கவிதைகள் வரை உலகளாவி பறந்து வேற்றுமொழி கலாச்சாரத்துடன் வார்த்தைகளோடு உறவாடி ரசிகனுக்கு கிடைக்கும் பேரானந்தமே அளப்பெரியதாக கொண்டாடப்படுகிறது.
அப்படி ஜோக்கர் எனும் திரைப்படத்தின் யுகபாரதி மற்றும் ரமேஷ் வைத்தியா அவர்களால் எழுதப்பட்ட பாடல் வரிகளுக்குள் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் கிடைத்தது அது வெறும் பாடலாக நில்லாமல் நாட்டுப்புற பாடலுக்கான உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக தோன்றியது.
அதை நாட்டுப்புற பாடலாக நான் எப்படி உணர்ந்தேன் என்பதை இங்கு ஒரு கட்டுரையாக பதிகிறேன். இதை தமிழ் நாட்டுப்புறப் பாடலின் தந்தை நா. வானமாமலை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடல்களில் நாட்டுப்புற இலக்கியத்தின் மறைமுக தாக்கம் என்கிற ரீதியில் ஒரு சிறு துரும்பை இந்த எறும்பு நகர்த்தி சென்றதாக பெருமைகொள்ளும்.
நாட்டுப்புற பாடல்கள் என்பவை நமது வாழ்வியலை அதன் அழகை பழக்கத்தை பண்பாட்டை நெறிமுறையை பொழுதுபோக்கை விழாக்களை இப்படி எல்லாத்தையுமே வாய் வழியாக என படிப்பவர் தனது சொந்த குரலில் அவருக்கு ஏற்ற பாடல் பாடும் முறைப்படி ஏற்ற இரக்கத்தோடு பாடி அதை மக்களின் மனதில் பதிய வைத்து அதன் மூலம் தங்கள் தலைமுறை பற்றிய அனைத்தையுமே அடுத்த தலைமுறைக்கு கடத்துவர் .
“நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்” என்கிறார் முனைவர் சு.சக்திவேல் (நாட்டுப்புற இயல் ஆய்வு : பக்கம் : 22)
படிக்காத பாமரரின் பாட்டு என்பதால் இதில் எதுகை மோனை இயைபு இறைத்தாக்கிழவி என ஏதுமில்லை என நினைக்க வேண்டாம் . இவை அனைத்துமே இதிலும் இருக்கும் . நாட்டுப்புற பாடல்களை யாப்பிலக்கணத்திற்கு இணையாக ஒப்பிடலாம் .
நாட்டுப்புற இலக்கியத்தின் பல பிரிவுகளில் ஒரு வகை நாட்டுப்புற பாடல்கள்.இதை காதல் பாடல்களுக்கென்று ஒரு பெரும்பங்கு உண்டு.அதில் மக்களின் வாழ்வு முறை என்பது மிகத்தெளிவாக கூறப்பட்டிருக்கும், மேலும் அதோடு பாடலில் கற்பனை ஒப்புமை உவமை உருவகம் இவற்றோடு கலந்து அவர்களது ஏக்கம் இயலாமை பிரிவு துன்பம் அதனுள்ளும் இருக்கும் அவர்களது காதல் அத்துணை ரசனையானதும் ரசிக்கக்கூடியதும் அனுபவிக்கக்கூடியதும் ஆகும்.
இப்படி இந்த ஜோக்கர் படத்தில் யுகபாரதி மற்றும் ரமேஷ் வைத்தியா ஆகிய இருவரால் எழுதப்பட்ட இந்த பாடல்கள் நாட்டுப்புற பாடல்கள் என்றே சொல்ல வேண்டும்.
ரமேஷ் வைத்தியாவின் பாடல் – செல்லம்மா, யுகபாரதியின் பாடல் – ஓல ஓல குடிசையில இவற்றை குறுக்கு வெட்டு பார்வையில் திறனாய்வு செய்யும் பொழுது இதை நாம் பரிபூரணமாக ஏற்றுக்கொள்ள முடியும்.
ரமேஷ் வைத்தியாவின் பாடல் வரிகள்:
(00:00 – 00:42)
ஆலேலும் ஆலேலும்
டூஃபான் மே ஃபூல்கா
ஆலேலும் ஆலேலோம்
ஹால் கியா ஹோகா
ஆலேலும் ஆலேலோம்
ச்சோட்டி ச்சோட்டி சி
ஆலேலும் ஆலேலும்
கோயலியா
ஆலேலும் ஆலேலும்
ஆலேலுமே… ஆலேலுமே…
அம்மா கதடிகளா ஆலேலுமே…
ஐயோ அம்மா கதடிகளா ஆலேலுமே…
(00:42 – 01:14 நொடிகள்)
சின்னாத்து மண்ணே என் பொன்னே
செறுவாட்டுக் காசா ஏன் ரோசா
செலவாகிப் போகாதே செல்லம்மா செல்லம்மா
செலவாகிப் போகாதே செல்லம்மா செல்லம்மா
செல்லம்மா ஏன் செல்லம்மா…
செல்லம்மா ஏன் செல்லம்மா…
(01:14 – 01:36)
டூஃபான் மே ஃபூல்கா
ஹால் கியா ஹோகா
ஹால் கியா ஹோகா
டூஃபான்னு மே
மித்துவா… ஓ! மேரே மித்துவா…
(01:36 – 02:20)
நட்டநடு வெய்யிலில
துட்டமுனி பொட்டலுல
குட்டியிடும் ஆட்டக் கண்டா
ஒன் நெனப்பு
வெள்ளி தலை தூக்கையில
நெட்டப் பனைச் சத்தத்துல
துள்ளிவந்து தீண்டுதடீ
ஓஞ்சிரிப்பு
பஞ்ச நில நெடுவானம்
மேகமா நெறயுது
ஒம் மொகத்த செதயாம
வேகமா வரையுது
செல்லம்மா ஏன் செல்லம்மா…
செல்லம்மா ஏன் செல்லம்மா…
(02:20 – 02:41)
கண்ணா… கண்ணா…
டூஃபான் மே ஃபூல்கா
ஹால் கியா ஹோகா
ஹால் கியா ஹோகா
டூஃபான்னு மே…
(02:41 – 03:24)
நீல மலைக் காட்டுக்குள்ள
நீயும் நானும் பாத்து வச்ச
முட்டையெல்லாம் பட்சிகளாப்
பறக்குதே
சோடி சேந்து கண்டெடுத்த
பட்டுப்புழு கூடு எல்லாம்
அம்மனுக்குப் பட்டாகிக் கெடக்குதே
காத்திருந்து கதை பேசும்
காலமும் முடியல
சேந்திருந்து பெற பாத்த ராத்திரி விடியல
செல்லம்மா என் செல்லம்மா…
செல்லம்மா ஏன் செல்லம்மா…
(03:24 – 03:58)
சின்னாத்து மண்ணே என் பொன்னே
ஆலேலும் ஆலேலோம்
செறுவாட்டுக் காசா ஏன் ரோசா
ஆலேலும் ஆலேலோம்
செலவாகிப் போகாதே செல்லம்மா செல்லம்மா
செலவாகிப் போகாதே செல்லம்மா செல்லம்மா
செல்லம்மா ஏன் செல்லம்மா…
செல்லம்மா ஏன் செல்லம்மா…
(03:58 – 04:11)
ஆலேலும் ஆலேலும்
ஆலேலும் ஆலேலோம்
ஆலேலும் ஆலேலும்
ஆலேலும் ஆலேலும்…
நாட்டுப்புற பாடல் வரிகள்
தன்னானே,சாமி, குட்டி, தாலேலோ, ஏலேலோ, ஆலேலோ, தங்கரத்தினமே, பொன்னுரத்தினமே, ராசாத்தி, இப்படியாக பல வார்த்தைகள் அடிக்கடி வந்து அப்பாடல்களுக்கு சுவை கூட்டும். அவை உடல் கூடல் இரண்டிலுமே பயன்படுத்தப்படும் பெரும்பாலும்.
இங்கு “ஆலெலும்மா” என்ற வரியையும்,”செல்லம்மா” என்கிற ரமேஷ் வைத்தியா பல முறை பயன்படுத்தி இருப்பது நாட்டுப்புற பாடலில் வருவதுதான். அதைத்தான் அவர் நிறுவ அல்லது மீட்டெடுக்க முயற்சித்துள்ளார் என்று சொல்லலாம்.
“ஆலெலும்மா” – பொதுவாக உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம், “செல்லம்மா” – என்பதை பாடல் எழுதியவரின் ஆசை நாயகியாக இருக்கலாம், அல்லது கற்பனையாக இருக்கலாம், எப்படி இருப்பினும் இந்த செல்லம்மா என்பது ஒரு பெண்ணை செல்லமாக காதலுடன் விழிக்கும் ஒரு சொல் என்று எடுத்துக் கொள்வோமேயானால், இப்படத்தில் மன்னாதி மன்னனின் காதலி பட்டு செல்லம்மா என காதலுடன் அழைக்கப்படுகிறாள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
இந்த பாடல் காதல் சார்ந்து அவர்கள் காதலை பிரிந்து இருக்கும் போது, காதலன் எங்கோ சென்றுவிட்டான்,அவன் திரும்பி வர வேண்டும். காதலி அவனை நினைத்து பார்க்கிறாள். அதே போல், காதலனும் நினைத்துப் பார்க்கிறான்.
சின்னாத்து மண்ணே என் பொன்னே
“சின்னாறு” (பம்பையில் கலந்து பின்னர் அமராவதி ஆறு என அழைக்கப்படுகிறது) ஆத்து பாசனம் பண்ணுகிற விளைநிலத்தில் அவர்கள் வசிக்கிறார்கள் என்றால் அது முல்லை நிலமாக இருக்கலாம்.அவர்களது வாழிடம் அதை சுற்றி இருத்தல் வேண்டும்.
செறுவாட்டுக் காசா ஏன் ரோசா
“சிறுவாடு” என்பது ஆடையில் பணத்தை வைத்து முடிந்து கொள்ளும் பழக்கம் நம்மிடையே பழங்காலத்தில் இருந்து வந்துள்ளது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
நட்டநடு வெய்யிலில
துட்டமுனி பொட்டலுல
குட்டியிடும் ஆட்டக் கண்டா
ஒன் நெனப்பு
ஆடு மேய்த்தல் என்பது அவர்களது தொழில் அல்லது வேலை.தகடூர் இன்றைய தருமபுரி மாவட்டத்தில் ஆடு வளர்ப்பு என்பது அதிகம் என்றே சொல்லலாம்.
ஜோக்கர் கதையில் :
குட்டியிடும் ஆட்டக்கண்டா உன் நினைப்பு – ஒப்புமை – பட்டு கர்ப்பமாக உள்ளாள். அதை மன்னாதி மன்னன் நினைத்து பார்க்கிறான்.
வெள்ளி தலை தூக்கையில
நெட்டப் பனைச் சத்தத்துல
துள்ளிவந்து தீண்டுதடீ
ஓஞ்சிரிப்பு
வெள்ளி : கிராமங்களில் வெள்ளி என்பதை நட்சத்திரத்தை குறிக்கும் ஒரு சொல் – மாலை பொழுதில் வெள்ளி தலை துக்கும் நேரத்தில்.
பஞ்ச நில நெடுவானம்
மேகமா நெறயுது
ஒம் மொகத்த செதயாம
வேகமா வரையுது
கண்ணா… கண்ணா…
கட்டையில பாடுதல் என கூறலாம்
நீல மலைக் காட்டுக்குள்ள
நீயும் நானும் பாத்து வச்ச
முட்டையெல்லாம் பட்சிகளாப்
பறக்குதே
பட்சி : பறவை
சோடி சேந்து கண்டெடுத்த
பட்டுப்புழு கூடு எல்லாம்
அம்மனுக்குப் பட்டாகிக் கெடக்குதே
கண்டெடுத்த பட்டுப்புழு கூடு : இப்போது அப்படி கண்டெடுக்க முடியுமா?
அம்மனுக்கு பட்டாகி கெடக்குதே : பெண் தெய்வ வழிபாடு /சிறு தெய்வ வழிபாடு , அம்மனுக்கு பட்டு சாத்துதல் என்பது ஒரு வழக்கம்.
காத்திருந்து கதை பேசும்
காலமும் முடியல
சேந்திருந்து பெற பாத்த ராத்திரி விடியல
பெற / பிறை : நிலா
காசா – ரோசா
மண்ணே – பொன்னே
நட்டநடு – துட்டமுனி
வெய்யிலில – பொட்டலுல
நெனப்பு – ஓஞ்சிரிப்பு
தூக்கையில – சத்தத்துல
நெறயுது – வரையுது
பறக்குதே – கெடக்குதே
காத்திருந்து – சேந்திருந்து
எதுகை மோனை இயைபு என அனைத்தும் உள்ளது .
இப்படி அடிக்கடி பாடப்படும் சொற்கள்,காதல் பாடல்,அவர்களது வாழிடம்,நிலம் சார்ந்து,தொழில்,ஒப்புமை கற்பனை வழக்கு நிறைந்து,வாழ்க்கை கதை பாடலாக உருவெடுத்துள்ளதால்,
பட்சி போன்ற நாம் வழக்கத்தில் அதிகம் பயன்படுத்த தவறிய புழக்கத்தில் அதிகம் மறந்துவிட்ட வார்த்தைகளை மீட்டு ஞியாபகப்படுத்தியமை,
சிறுதெய்வ வழிபாடு ஞாபகப்படுத்தியமை
(சிறுதெய்வ வழிபாடு என்பதை யாராலும் நம்மிடம் இருந்து அழிக்க முடியாது.
– தொ .பரமசிவன்.
(குறிப்பாக எந்த பெரு தெய்வ வழிபடு மக்கள்) அதை தொடர வேண்டும் என்கிற நினைவு படுத்துதல்,அதை நாம் விடக்கூடாது.ஏனென்றால் பெரு தெய்வங்களால் – அவை அனைத்தும் புனைவு – நம்முடையது நமது முன்னோர்கள் நினைவு – அதை சார்ந்து பண்பாட்டு வழக்கம் அழித்தொழிக்கப்படும்).
யுக பாரதியின் பாடல் வரிகள் :
இசை : (00:00 – 01:31)
ஓல ஓல குடிசையில…
ஒண்ட வந்த சீமாட்டி !
ஒண்ணா நான் வச்சுக்குவேன்
உசுருக்குள்ள தாலாட்டி ….
ஆறே காஞ்ச போதும்
அன்புல நீ நீராடு !
சோறே இல்லேன்னாலும்
சொந்தம் இருக்கும் உன்னோடு !
வா சீக்கிரம் ……
பூ வோடதான் !
நான் இப்பவே
உன் கூடத்தான்……!
வா சீக்கிரம் …..
பூ வோடதான் !
நான் இப்பவே
உன் கூடத்தான் …..!
(00:00 – 01:10)
இது ஒரு காதல் பாடல் ஆணும் பெண்ணும் தங்கள் காதல் எவ்வளவு ஆழமானது என்று வெளிப்படுத்துமிடம்,
அதுவும் வறுமை நிலவும் சுழலில் கூட மிகவும் சந்தோசமான மனநிலையில் மக்கள் வழ்ந்து வந்ததும், அவர்களுக்குள் இருந்த உறவு பிணைப்பு என்பது அவ்வளவு உறுதியானதாக இருந்துள்ளது. அதன் வெளிப்பாடே ஒல குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி, ஆறே காஞ்ச பொதும் அன்புல நீ நீறாடு சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு வரிகள். குடும்பம் என்கிற கட்டமைப்பை இங்கே உடைக்க முடியவில்லை – அதற்கான வேலைகள் நடந்தபடியேதான் இருக்கிறது. கணவனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறாள் , அவன் எப்போதும் நான் உன்னுடந்தான் என்று நம்பிக்கையளிக்கிறான்.
இசை : (01:10 – 01:34)
வாசலிலே கோலமிட
ஆசைப்பட வேணாமே……!
வாசலே இல்லா வீட்டில்
பூசணி பூ நீதானே…….!
வைரத்துல தோடு செஞ்சு
போட்டுக்கொள்ள வேணாமே…..!
வைரமா நீயும் சேர
நடிகையும் நட்டும் பொய்தானே ….!
வேர்வையில் நூல் எடுத்து
சேலை நெஞ்சு நான் தருவேன் ……
வெக்கப்பட்டு நீ சிரிச்சா
கட்டிக்குவேன் …….
கூடி கலைஞ்ச பிறகும்
என் பாசம் ஊறுதே ……
ஏறு வெயில போல
சந்தோஷம் கூடுதே …….
கோலமிடுதல் என்பது அரிசியை அரைத்து அதில் கோலமிடுதல் என்பது ஒரு வழக்கமாக இருந்து வந்துள்ளது,அரிசி என்பது அப்போது ஏழைகளுக்கு எட்டாக்கனி என்றே சொல்லலாம்.தை பொங்கல் அன்று மட்டும் அரிசி சாப்பாடை சாப்பிட்டுவந்த மக்களும் வாழ்ந்துள்ளனர் என்பதே உண்மை.அரிசி மாவில் கோலமிடுவதென்பது சிறு உயிர்கள் திண்பதற்காக என்பதுகூடவா நாமறியாமல் இருந்திருப்போம்.
பூசணீப்பூ என்பது வாசலில் கோலமிடுட்டு அதில் கண்ணேறு படக்கூடாது என்பதற்காக வைப்பது, பறவைகள் வந்து செல்ல,சாணத்தில் முற்றம் தெளிப்பது பெரும்பாலான நோய்கள் வராமல் தடுக்கும் கிருமி நாசினியாக அது தெளிக்கப்படுகிறது, மேலும் வாசனை. இப்படி எனக்கான வாசனை, அழகு,கண்ணேறு படாமல் பார்த்துக்கொள்பவள்,எனது பிணியிலிருந்து எனை காப்பவள் நீதானே.
நூற்றாண்டுகால கரி வைரமாவது போல எனக்கு வைரமா நீ இருக்க நகை எல்லாம் பொய்தானே,
கூடி கலைஞ்ச பிறகும் என் பாசம் ஊறுதே ஏறு வெயில போல சந்தோஷம் கூடுதே இங்கு இரவு கலவி முடிந்துவிட்டு சூரியன் மெல்ல கிழக்கில் ஏற ஆரம்பித்துவிட்டான் அதைபோல சந்தோசமும் கூடுதே.
(01:34 – 02:23)
ஓல ஓல குடிசையில
ஒண்ணா நான் வச்சுக்குவேன் ……!
இசை ( 02:23 – 02:43 )
மாசம் சில போனதுமே
மாணிக்கமா ரெட்ட புள்ள ….
ஒண்ணா நீ பெத்து தந்தா
மருத்துவச்சி பில்லு மிச்சம் !
பெத்தெடுத்த பிள்ளைகள
ரத்தினம் போல் ஆக்கணுமே…..
இங்கிலீஷு படிக்க வெச்சு
ஏரோபிளானில் ஏத்தணுமே …..!
துணையா சேர்ந்திருந்தா
நள்ளிரவு வெள்ளி வரும் ….
தும்மல் இடும் சத்துக்கே
சாமி வரும் ……!
வாழ வேணும் நாம
மழை காத்து பூமியா…….
ஆச தீர வாழ்ந்தா
மறு சென்ம தேவையா ……
கலவி முடிந்தபிறகு அவள் கர்ப்பமாகிறாள், மாசம் சில போனதுமே மாணிக்கமா ரெட்டப்புள்ள, அதாவது ஆண் குழந்தைகள், ஒண்ணா பெத்து தந்தா மருத்துவச்சி செலவு மிச்சம்.  மருத்துவச்சி என்பவள் கிராமங்களில் கைவைத்தியம் என்று சொல்கிற வைத்தியமுறையை கையாள்பவள் இது ஒரு வகையான சித்த மருத்துவ முறையே. இதே போல் பாட்டி வைத்தியமும் உண்டு.இவையெல்லாம் இப்போது நலிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
பில்லு – ஆங்கில வார்த்தை, அப்படியென்றால் இந்த மக்கள் வாழும் காலம் என்பது சமீபத்தியது அதாவது அன்னிய மொழி பேசுபவன் நம்மை ஆட்சி செய்தகாலம். அப்படி இருக்கும் பட்சத்தில்தான் அந்த பில்லு என்கிற ஆங்கில வார்த்தை நம் மக்களிடமும் புழக்கத்தில் பெசப்பட்டு அது நாட்டுப்புறபாடல்களிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும், இதற்கு பல பாடல்கள் உள்ளன.இப்படியாக நாட்டுப்புற பாடல்கள் காலத்திற்கேற்ப மொழி பயன்பாட்டில் பிறமொழியையும் பயன்படுத்தி வந்தமையால்தான் இத்தனை தலைமுறை கடந்தும் வாய்வழியாகவே நம்மை வந்து சேர்ந்திருக்கிறது எனலாம், அதோடு நில்லாமல் வேற்று மொழி பேசுபவரையும் ஆதரித்து வந்துள்ளோம் என்பதும்,நாட்டுப்புற பாடல்களில் இப்படியான புதுமை நிகழ்வும்தான் அது இன்னும் உயிருடன் இருந்துவந்துள்ளதற்கு காரணம் என்றே சொல்லலாம்.இங்கிலீஷு படிக்க வெச்சு ஏரோபிளானில் ஏத்தணுமே – ஏரோபிளான் என்கிற வரி வருகையினால் மிக சமீபத்திய கால்த்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகிறது. அது அவர்களுக்கு எட்டாக்கனவே.தும்மல் இடும் சத்துக்கே சாமி வரும் – குறி சொல்லுதல் என்பதும் சாமி வந்து ஆடுதல் என்பதும் சிறுதெய்வ வழிபாட்டில் முக்கியமான அம்சங்களாகும் மேலும் படையல் வைப்பது. அவர்கள் தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் என்பதும் அதற்கு பயப்படுபவர்கள் என்பதும் அதற்குள் ஒரு மூடநம்பிக்கை ஒளிந்திருப்பதும் நாமறிந்ததே.மறுசென்மம் மீது நம்பிக்கை இருந்துள்ளது மறுசென்மம் எடுத்தாலும் நாம் துன்பத்தில் உழலத்தான் வேண்டும் என்பதனால் அசைதீர வாழ்ந்துவிட்டால் மறுசென்மம் என்பதும் தெவையில்லை.
ஓல ஓல குடிசையில…
ஒண்ட வந்த சீமாட்டி !
ஒண்ணா நான் வச்சுக்குவேன்
உசுருக்குள்ள தாலாட்டி ….
ஆறே காஞ்ச போதும்
அன்புல நீ நீராடு !
சோறே இல்லேன்னாலும்
சொந்தம் இருக்கும் உன்னோடு !
வா சீக்கிரம் ……
பூ வோடதான் !
நான் இப்பவே
உன் கூடத்தான்……!
வா சீக்கிரம் …..
பூ வோடதான் !
நான் இப்பவே
உன் கூடத்தான் …..!
(02:43 – 04:15)
சீமாட்டி – தாலாட்டி
நீராடு – உன்னோடு
வோடதான் – கூடத்தான்
நான் – உன்
ஆறே – சோறே
பெத்தெடுத்த – ரத்தினம்
ஆக்கணுமே – ஏத்தணுமே
துணையா – தும்மல்
பூமியா – தேவையா
ஊறுதே – கூடுதே
இதிலும் எதுகை மோனை இயைபு என அனைத்தும் உள்ளது. இப்படியாக இந்த இரண்டு பாடல்களையும் நாட்டுப்புறபாடல் என்றே சொல்வேன். இதை கதைக்கு ஏற்றபடி சூழலுக்கு ஏற்றபடி கதைநாயகன் கதைநாயகிக்கு ஏற்றபடி எழுதியிருக்கிறார்கள். இதற்கு மேலும் அழகு சேர்ப்பது ஷான் ரோல்டன் இசை – ஒரே வரியில் சொல்வதென்றால் அவருக்கான அங்கீகாரம் என்பது மிகப்பெரியதாக கிடைக்கும் என்று நம்புகிறேன். இசைக்காக கிட்டத்தட்ட 150 முறையேனும் கேட்டிருப்பேன்.அவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குனருக்கு சொல்லாமல் எப்படி அவருக்கும் வாழ்த்துக்கள் பல. நாட்டுப்புறபாடல்களின் சிறப்பே அது பாடப்படும் போது கேட்கும் சப்தம் என்பது இசைக்கோர்வைபோல இருக்கும் என்பதே. அதை தற்போதுள்ள சினிமாவிற்கு ஏற்றபடி வரிகள் எழுதியிருப்பது பாடலாசிரியர்களின் மொழித்திறமையே. இதை நாம் நாட்டுப்புற பாடலின் மீட்டுருவாக்கத்துக்கான தொடக்கப் பாதையாக பார்க்கலாம்.
அதுவும் சினிமாவில் இம்மாதிரியான முயற்சிகள் மனமுவந்து வரவேற்கத்தக்கவையே!
ஜீவா பொன்னுசாமி, திரைக் கலைஞர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக