வெள்ளி, 21 அக்டோபர், 2016

முதல்–அமைச்சர் குறித்து பதிவை வெளியிட்ட தி.மு.க. நிர்வாகிகளின் வலைதளங்களை முடக்குவதற்கு தடை கேட்டு வழக்கு

சென்னை, தி.மு.க. நிர்வாகிகளின் சமூக வலைதளங்களை முடக்குவதற்கு
தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.< கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ஆர்.நவநீதகிருஷ்ணன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– பிரசாரம் தி.மு.க.வின் கோவை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகிக்கிறேன். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் சமூக வலைதளம் மூலமாக பிரசாரம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளேன். பிரசார யுக்தியாக முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக தி.மு.க.வினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறேன். கடந்த அக்டோபர் 11–ந்தேதி எனக்கு ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக வந்த ஒரு பாடலை முகநூலில் பதிவு செய்தேன்.
அதில் தமிழக அரசின் தற்போதைய அரசியல் நிலவரம், முதல்–அமைச்சரின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப்பதிவு என்னுடைய அசல் பதிவு அல்ல. வேறு ஒருவரிடமிருந்து வந்ததை நான் அப்படியே மற்றவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

விளக்கம் இல்லை 

எதிர்கட்சியைச் சேர்ந்தவன் என்ற முறையில் ஆளுங்கட்சியை விமர்சிப்பது எங்களது கடமை ஆகும். அதேநேரம், முதல்–அமைச்சர் நல்ல முறையில் குணமடைந்து மீண்டும் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்று கருத்து இல்லை. முதல்–அமைச்சருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி குறிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. ஆனால், அந்த அறிக்கைகள் யூகங்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் இல்லை.

இதுநாள் வரை முதல்–அமைச்சர் உடல் நலம் குறித்து, தமிழக தலைமைச் செயலாளரும் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. நான் முகநூலில் வெளியிட்ட பாடல் பதிவை, மறுநாளே அழித்து விட்டேன்.

வழக்குப்பதிவு 

இந்த நிலையில், பொள்ளாச்சி அ.தி.மு.க. நகரச் செயலாளர் வி.கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், மகாலிங்கபுரம் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்து என்னை கைது செய்யவும், என்னுடைய சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் முயற்சித்து வருகின்றனர்.

இதே போல பொள்ளாச்சி நகர 29–வது வார்டு தி.மு.க. இளைஞரணி அமைப்பாளரான எஸ்.ராஜிவ்காந்தியின் சமூக வலைதள பக்கங்களையும் முடக்க போலீசார் முயற்சிக்கின்றனர். போலீசாரின் இந்த செயல் சட்ட விரோதமானது ஆகும். எங்கள் இருவர் மீதும் ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தடை விதிக்கவேண்டும் 

ஆகவே எங்களை கைதுசெய்வதற்கும், எங்களின் சமூக வலைதளங்களை முடக்குவதற்கும் போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல எங்களின் அன்றாட பணிகளில் போலீசார் குறுக்கிடக்கூடாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நேற்று மனுதாரர் வக்கீல் ஆஜராகி கோரிக்கை விடுத்தார். ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. அதனால், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக