வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஜெயாவின் சொத்துக்கள் கைமாறுகின்றன .. சட்டப்படி சுயநினைவோடு அவர் இருக்கவேண்டும், இல்லாவிடில் அவரின் ஒப்பம் செல்லாது! இப்போ விளங்குகிறதா எது வதந்தி எது உண்மை?

மிஸ்டர் கழுகு : கையெழுத்து... பத்திரம்... ஜெயலலிதா!
ரேப்பர் ரெடி செய்யவும்’ என்று கழுகார் அனுப்பிவைத்த ‘கையெழுத்து...  பத்திரம்... ஜெயலலிதா!’ என்கிற டைட்டில் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன.    லே-அவுட்டுக்கு தலைப்பை அனுப்பிவிட்டு கழுகாருக்காகக் காத்திருந்தோம். தீபாவளி கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகப் புத்தாடையில் வந்தார் கழுகார். குறிப்பு நோட்டை புரட்டியபடியே பேச ஆரம்பித்தார ‘‘அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தைத் தாண்டிவிட்டது. அவரது உடல்நலம் தேறிவர வேண்டும் என தமிழகமே பிரார்த்திக்கிறது. லண்டன், சிங்கப்பூர், எய்ம்ஸ் என டாக்டர்கள் படையெடுத்தபடியே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் சத்தமில்லாமல் ஒரு காரியம் நடந்து கொண்டிருக்கிறதாம். அடுத்து நான் சொல்லப்போகும் தகவல் அ.தி.மு.க-வின் உள் வட்டத்தில் உள்ள முக்கியப் புள்ளி ஒருவர் சொன்னது. ‘சில சொத்துக்களைக் கை மாற்றும் காரியங்கள் ரகசியமாக நடக்க ஆரம்பித்துவிட்டன’ என்பதுதான் அவர் சொல்வது.”
‘‘அதிர்ச்சியாக இருக்கிறதே!’’
‘‘ஹைதராபாத் ஜிடிமேட்லா ஏரியாவில் சுமார் 15 ஏக்கர் விவசாய நிலத்தை 1968-ம் ஆண்டு ஜெயலலிதா வாங்கினார். அப்போது அதன் மதிப்பு 1.78 லட்சம் ரூபாய். ஜெயலலிதா மற்றும் அவருடைய தாய் பெயரில் இந்த நிலம் வாங்கப்பட்டது. இப்போது இந்த சொத்தின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டிவிட்டது.
தேர்தல் கமிஷனில் ஜெயலலிதா தாக்கல்செய்த வேட்புமனுவில்கூட இந்த சொத்தின் மதிப்பு ரூ.14.44 கோடி எனச் சொல்லியிருக்கிறார். இதே போல் ஹைதராபாத் நகர் காலனியில் ஜெயலலிதாவும் அவருடைய தாயாரும் சேர்ந்து 651.18 சதுர மீட்டர் கட்டடத்தை 1967-ல் 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார்கள். இப்போதைய மதிப்பு ரூ.5.03 கோடி.
ஜெயலலிதா தற்போது வசிக்கும் வீட்டின் பரப்பு 10 கிரவுண்ட். 1967-ம் ஆண்டு இந்த இடம் 1,32,009 ரூபாய்க்கு ஜெயலலிதா மற்றும் அவருடைய தாய் பெயரில் வாங்கப்பட்டது. இப்போது மதிப்பு ரூ.43.96 கோடி. அதே போயஸ் கார்டன் ஏரியாவில் இன்னொரு இடமும் ஜெயலலிதாவுக்கு உண்டு. 1.5 கிரவுண்ட் பரப்புகொண்ட அந்த இடத்தை 1991-ம் ஆண்டு 10.20 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார் ஜெயலலிதா. இதன் தற்போதைய மதிப்பு ரூ.7.83 கோடி. இந்த சொத்துக்களின் தற்போதைய மதிப்பு என்பது தேர்தல் கமிஷனில் காட்டிய கணக்கு. ஆனால், சந்தை மதிப்பு அதைவிட பல மடங்கு அதிகம். இந்த சொத்துகளை முன் வைத்துத்தான் காரியங்கள் நடக்க  ஆரம்பித்துள்ளதா எனத் தெரியவில்லை!”

‘‘இதெல்லாம் சாத்தியமா?”

‘‘இந்தக் கேள்வியை அந்த

அ.தி.மு.க புள்ளியிடம் கேட்டேன். ‘ஜெயலலிதா பேசினார். உணவு சாப்பிட்டார். எழுந்து உட்கார்ந்தார்’ என செய்திகள் வருவதைக் கவனித்தீரா? அப்போலோவின் லேட்டஸ்ட் அறிக்கைகளிலும் இது வெளிப்படுகிறது. இதன் பின்னணியையும் இந்த தகவலையும் வைத்துப் பார்க்கும் போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.’’

‘‘ஓஹோ!’’

‘‘மன்னார்குடி ஆட்களின் மூவ் பற்றித்தான் கட்சிக்குள் பரபரப்பாகப் பேசிக்கொள்கிறார்கள். ஜெய​லலிதாவின் உடல்நிலையை விசாரிப்பதற்காக ராஜாத்தி அம்மாள் போனார். ஆனால், இந்த செய்திக்குப் பின்னணியும் உண்டு என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். சசிகலா அழைத்துதான் ராஜாத்தி அம்மாள் போனாராம். தி.மு.க. தரப்பில் இருந்து தங்களுக்கு எந்த வகையிலும் இடைஞ்சல் தரக்கூடாது என்பதுதான் சசிகலாவுக்கும் ராஜாத்தி அம்மாளுக்கும் இடையே நடந்த ஒப்பந்தமாம் எனச் சொல்லி அதிர வைக்கிறார்கள். ஜெயலலிதாவுக்குப் பிறகு மன்னார்குடியினருக்கு எந்த அதிகாரமும் இருக்காது. அதனால், பிறகு எந்தப் பிரச்னையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை மூவ்கள் நடக்கின்றன. ராகுல் விசிட்டைக்கூட அப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள். இதற்கு தூண்டுதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவரே இருந்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.’’

‘‘ஜெயலலிதாவின் சொத்துக்களைக் குறிவைத்து காய்கள் நகர்த்தப்படுகின்றனவா?’’

‘‘அப்படித்தான் கட்சிக்குள் பேசிக்கொள்​கிறார்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது, ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக் கணக்கைக் காட்டியிருந்தார். வங்கி, நிதி நிறுவன இருப்புகளைப் பொருத்தவரை ரூ.2.50 கோடி மதிப்பு முதலீடுகள் மற்றும் பாண்டுகளும் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட 24 வங்கிக் கணக்குகளில் 9.80 கோடி ரூபாயும் இருக்கின்றன. இதுதவிர சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ரூ.2.47 கோடி உள்ளது. ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் ரூ.22.09 கோடியும் சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் ரூ.1.37 கோடியும் கொடநாடு எஸ்டேட்டில் ரூ.3.14 கோடியும் ராயல்வேலி ஃபுளோரிடெக் எக்ஸ்போர்ட்டில் ரூ.2.76 கோடியும் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. இதுதவிர மகேந்திரா ஜீப், மகேந்திரா பொலிரோ, டெம்போ டிராவலர், சுவராஜ் மஸ்டா மேக்ஸி, கான்டசா, டெம்போ ட்ராக்ஸ், இரண்டு டொயோட்டோ பிராடோ கார்கள் என 8 வாகனங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா பயன்படுத்தும் காரின் பெயர் டொயோட்டோ எல்.சி 200. இதன் விலை ரூ.1.45 கோடி. டி.என்.09 பி.ஈ 5969, டி.என்.09 பி.ஈ 6167 ஆகிய இரண்டு பதிவெண் கொண்ட டொயோட்டோ எல்.சி 200 கம்பெனி கார்கள் பயன்படுத்துகிறார். இதுதவிர டி.என்.09 பி.எக்ஸ் 3737 என்ற டொயோட்டோ எல்.சி 200 புத்தம் புது காரைப் பயன்படுத்தி வருகிறார். இது ஜெயா பப்ளிகேஷேன் பெயரில் இருக்கிறது. 21280.300 கிராம் தங்கம் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதோடு ரூ.3.12 கோடி மதிப்புகொண்ட 1,250 கிலோ வெள்ளி பொருட்களும் இருக்கின்றன. செய்யூர் கிராமத்தில் விவசாய நிலம், சென்னை பார்சன் மேனர் மற்றும் மந்தைவெளி ஏரியாக்களில் இடம் என மேலும் ஜெயலலிதாவுக்கு சொத்துக்கள் இருக்கின்றன. தேர்தல் கமிஷனில் கொடுத்த கணக்குப்படி பார்த்தால் ஜெயலலிதாவுக்கு இருக்கிற ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு 120 கோடி ரூபாய்க்கு மேல். ஆனால், சந்தை மதிப்பைக் கணக்கிட்டால் பல மடங்கு அதிகம். இந்த சொத்துக்கள் சிலரது கண்ணுக்கு முக்கியமானதாகத் தெரிய ஆரம்பித்துள்ளது என்றும் சொல்கிறார்கள்.’’

‘‘ம்!’’

‘‘அதற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல்வர் பதவி இழந்து ஜாமீனில் இருந்தபோது

ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராகப் பதவி வகித்தார். அப்போது தமிழக அரசு செயல்படவே இல்லை. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்து தொடங்கிவைக்க வேண்டும் என்பதற்காகவே அம்மா குழந்தைகள்  பெட்டகம், புதிய பஸ்கள் தொடக்கம் என நிறைய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. அவ்வளவு ஏன்... முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது வாழ்த்துக்கூட தெரிவிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் கண்ணீரோடு பதவி ஏற்றார்கள். எந்தப் புதிய அறிவிப்பும் வெளியாகவில்லை. முதலீட்டாளர்கள் மாநாடுகூட ஜெயலலிதாவுக்காகத் தள்ளிப்போனது. ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவதற்காக அரசை முடக்கி வைத்திருந்தார்கள். அன்று ஜெயலலிதா ஜாமீனில் இருந்தபோது ஏற்பட்ட நிலைதான் கிட்டத்தட்ட இப்போதும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதற்காக அரசு முடங்கிவிடவில்லை என்பதுதான் ஆச்சர்யம். மருத்துவமனையில் இருந்தபடியே அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக அறிக்கை வெளியிட்டார்கள். அவர் மருத்துவமனையில் இருந்தபோதுதான் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்தார்கள். அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தீபாவளிக்கு ஸ்பெஷல் பஸ்களும் அதற்காக நான்கு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டன. காவிரிக்காக நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை தொய்வில்லாமல் அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரிந்து நடக்கிறதா என்கிற சந்தேகம் கட்சிக்குள் நிலவுகிறது. ஜாமீனில் இருந்தபோது அரசை முடக்கியவர்கள் இப்போது மட்டும் வேகத்தைக் காட்டுவது ஏன் என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள். ‘அம்மாவை எதிர் பார்க்காமல் காரியங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன’ என்று சொல்கிறார்கள்”  vikatan,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக