ஞாயிறு, 9 அக்டோபர், 2016

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு பகிர்வு.. எம்.ஜி.ஆரின் நான்காவது கால்!





அண்ணாமலை, முத்துக்குமார்,வாசன் என திரை உலகில் மின்னும்இளங்கவிஞர்களுக்கு மட்டும் காலன் சீக்கிரமே நாள் குறித்துவிடுகிறான் போல. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாய்ப் போய்ச் சேர்ந்தவர்தான் கவிஞர் கல்யாணசுந்தரம். அவருடைய நினைவுநாள் இன்று.
என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் புகழப்பட்டவர் இந்த மக்கள் கவிஞர். தமிழ்த் திரையுலகில் பாடல் புனைந்தவர்கள் பலர். அதிலும் குறுகிய காலத்திலேயே வளர்ச்சியடைந்தவர்கள் சிலர். இளம்வயதிலேயே தன்னுடைய பாடல்களில் பொதுவுடைமை கருத்துகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர் கல்யாணசுந்தரம்.


நிருபரிடம் கூறிய வாழ்க்கை வரலாறு!
‘‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில் எழுதவேண்டும்’’ என்று கேட்டநிருபர் ஒருவரை, தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம்நடந்துசென்றார் கல்யாணசுந்தரம். பிறகு, ரிக்‌ஷா ஒன்றில் அவரை அழைத்துச்சென்றார். அதன் பிறகு, பஸ்ஸில் பயணம். கடைசியில் கார் ஒன்றில் ஏறி, தன் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்க... தன்கூட பயணித்த நிருபர், ‘‘கவிஞரே, வாழ்க்கை வரலாறு’’ என்று ஞாபகப்படுத்தியுள்ளார். அதற்கு, ‘‘முதலில் நடையாய் நடந்தேன்; பிறகு, ரிக்‌ஷாவில் போனேன்; அதன் பிறகு,பஸ்ஸில் போக நேர்ந்தது; இப்போது கார். இதுதான், என் வாழ்க்கை. இதில் எங்கே இருக்கிறது வரலாறு?’’ என்று சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையைச்சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் கவிஞர்.

இளம்வயதில் பாடல் எழுதியது எப்படி?
‘‘ஒருநாள் எங்கள் ஊரில் உள்ள வயலுக்குச் சென்றுவிட்டு ஏரிக்கரையில் இருந்த வேப்பமரத்துக்குக் கீழ்வந்து அமர்ந்தேன். நல்ல நிழலும், குளிர்ந்த தென்றலும் என்னைத் தழுவியிருந்த அந்த வேளையில், ஏரியைக் கண்டு ரசித்தேன். தண்ணீர் அலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள், ‘எம்மைப் பார்... எம் அழகைப் பார்’ என்று குலுங்கின. அந்தச் சமயத்தில், ஓர் இளங்கெண்டை மீன் பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் இருந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்திவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. இதைப் பார்த்த நான்,
‘ஓடிப்போ... ஓடிப்போ கெண்டைக் குஞ்சே!
கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே...
தூண்டில்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே!’
- என்று தன்னுடைய 15-வது வயதில் கவிதை பாடிய அனுபவத்தை ஒரு நிகழ்வில் குறிப்பிட்டிருக்கிறார் கல்யாணசுந்தரம்.

ஜீவா மூலம் பாடல் எழுதும் வாய்ப்பு!
பாடல் எழுதத் தொடங்கும்போதெல்லாம், ‘வாழ்க பாரதிதாசன்’ என்ற தலைப்பில் எழுதிவிட்டுத்தான் பாடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கல்யாணசுந்தரம். பாரதிதாசன் தலைமையில்தான் அவருடைய திருமணம் நடந்தது. 1954-ம் ஆண்டு ஜீவாவுடன் நெருங்கிய நண்பராக இருந்த காலத்தில் விவசாய சங்க மாநாட்டுக்காக ‘கண்ணின் மணிகள்’ என்ற நாடகம் தயாரிக்கப்பட்டது. அதில், பாடல் எழுதும் வாய்ப்பைத் தேடித்தந்தார் ஜீவா.
‘தேனாறு பாயுது...
செங்கதிரும் பாயுது...
ஆனாலும் மக்கள்
வயிறு காயுது!’ என்று அவர் எழுதிய அந்தப் பாடல்தான் பின்னர் திரைப்படத்தில் இடம்பெற்றது.
‘‘கல்யாணசுந்தரம், அவருடைய 29 வயதுக்குள் 17 வகையான தொழில்களைச் செய்திருக்கிறார்’’ என ஜீவா சொல்லியிருக்கிறார். ‘‘இதனால்தான் அவருடைய பாடல்களில் பன்முகங்களைக் காட்ட முடிந்தது’’ என்று சொல்பவர்கள் பலர்.பல்வேறு தொழில்களைச் செய்த அனுபவமே அவருக்குக் கைகொடுத்திருக்கிறது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. கல்யாணசுந்தரத்தின் பாடல்களில் பொதுவுடைமைக் கருத்துகள் நிறைந்திருந்தன. ‘‘கல்யாணசுந்தரத்தின் பாடல்களை 12 வகைகளாகப் பிரிக்கலாம்’’ என அவருடைய பாடல்களைத் தொகுத்த பாலகிருஷ்ணன் என்பவர் கூறியுள்ளார்.
பட அதிபருக்கு எழுதிய கவிதை!
கல்யாணசுந்தரம், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். திரைப்படம் நிறுவனம் ஒன்றுக்கு அவர் பாட்டு எழுதிக்கொடுத்தார்.ஆனால், பணம் கைக்கு வந்துசேரவில்லை. பணத்தைப் பெறுவதற்காகப் பட அதிபரிடம் நேரில் சென்று கேட்டிருக்கிறார். ‘‘பணம் இன்னிக்கு இல்லே...நாளைக்கு வந்து பாருங்கோ’’ என்று பட அதிபர் பதில் சொல்ல... அதைக் கேட்ட கல்யாணசுந்தரமோ, பணம் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். ‘‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’’ என்று பட அதிபர் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். உடனே கல்யாணசுந்தரம்,சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

தாயால் வளர்ந்தேன்...
தமிழால் அறிவு பெற்றேன்...
நாயே - நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்...
நீ யார் என்னை நில் என்று சொல்ல?’ என்று அதில் இருந்ததைப் பார்த்த பட அதிபர், அடுத்தநிமிடமே பணத்தைக் கொடுத்தனுப்பினார்.
சிவப்புக்கொடி!
சென்னையில் ஒருநாள் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்கல்யாணசுந்தரம். அப்போது, வழியில் ஓர் இடத்தில் பள்ளம்தோண்டப்பட்டிருந்தது; அதோடு, பழுது பார்க்கும் வேலை நடப்பதாகச் சிவப்புக்கொடி ஒன்றும் நடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த கல்யாணசுந்தரம் தன்அருகிலிருந்தவரிடம், ‘‘எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்படவேண்டுமோ... அங்கே எல்லாம் சிவப்புக்கொடி பறந்துதான் அந்தப் பணிகள்நடக்க வேண்டும் போலும்’’ என்றார்.
‘நண்டு செய்த தொண்டு!’
கல்யாணசுந்தரம் வசித்த ஊரில் ஒரு மிராசுதார் இருந்தார். அவரிடம் ஒரு சிறுநிலத்தைக் குத்தகைக்கு விவசாயம் செய்துவந்தது   கவிஞரின் குடும்பம். ஒருநாள் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றார். அப்போது மிராசுதார், ‘‘எங்க வயலுக்குஇப்பத்தான் தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்கோம். அது, முடிஞ்சப்புறம் உங்கவயலுக்குத் தண்ணி பாய்ச்சு’’ என்று சொல்ல... வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினார் கவிஞர். மிராசுதாருக்கு பலவேலி நிலம் என்பதால், அவை அனைத்துக்கும் தண்ணீர் பாய இரவாகிவிடும். ஆகையால், மறுநாள் காலையில் தான் நம் நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியும் என்று நினைத்த கவிஞர், அப்படியே தூங்கிப்போனார். மறுநாள் காலைச்எழுந்ததும், வயலுக்குச்சென்றார் கவிஞர். அங்கே, அவருடைய நிலத்திலும் தண்ணீர் தேங்கியிருந்தது.நமது நிலத்துக்கு யார் தண்ணீர் பாய்ச்சியிருப்பார்கள் என்று யோசித்த அவர்,நண்டு போட்ட துளை வழியாக தண்ணீர் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டார்.இதையே தான், ‘நண்டு செய்த தொண்டு’ என்று தலைப்பில் ஒரு கவிதையாக எழுதினார் கல்யாணசுந்தரம். அந்தக் கவிதை,  ‘ஜனசக்தி’இதழில் வெளியானது.
மனைவிக்கு சன்மானம்!
ஆடை கட்டி வந்த நிலவோ...
கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ’ என்று
அவர் எழுதியதுகூட திருமணத்துக்கு முன் அவர் பார்த்தபெண்ணைவைத்து எழுதிய பாட்டுதான். ஒருநாள் அவருடைய அண்ணன்   மனைவிக்கு வளைகாப்பு. அன்று அவர் மனைவி கவிஞரிடம், ‘‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் முகத்துல பொன் சிரிப்பு’’னு கிண்டலாகச் சொன்னாராம். இதைத்தான் அவர், ‘கல்யாணப் பரிசு’ படத்தில் பல்லவியாகப்போட்டு பாட்டு எழுதினார். ‘‘இது நீ எழுதிய பாட்டு. இந்தாப் பிடி சன்மானம்’’என்று அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பணத்தை அவர் மனைவி கையில் கொடுத்து அழகுபார்த்தவர் கல்யாணசுந்தரம்.
சமூக அவலங்களை மையப்படுத்திப் பல பாடல்களை எழுதினார். இறக்கும்காலம்வரை தன் புரட்சிகரமான பாடல்களை மக்களிடம் கொண்டுபோய்ச்சேர்த்தார் கல்யாணசுந்தரம்.
‘இரைபோடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே...- என்கிற பாடல் குறித்து,
‘‘எளிய சொற்கள், ஆழமான பொருள், நினைத்து இன்புறத்தக்க உவமை’’ என்று தன் கருத்தைப் பதிவுசெய்தார் குன்றக்குடிஅடிகளார்.  ‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ளநல்லவரின் கூட்டாளி’’ என்றார் பட்டுக்கோட்டை ஜெயகாந்தன். இப்படி  பலரின்புகழுரைகளுக்குக் காரணமாய் இருந்தவர் மக்கள் கவிஞர்.
‘மேலே போனா எவனும் வரமாட்டான்!’
அந்தக் காலத்தில், திரைப்படக் கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்தார் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர். அதற்கு, கவிஞர் கண்ணதாசனும் பலியானார். ஒரு விழாவில் அந்தப் பத்திரிகை ஆசிரியரைக் கல்யாணசுந்தரம் சந்தித்தபோது (கண்ணதாசனைக் குறிப்பிட்டு), ‘‘கவிஞர்கள்என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்குக்கவிதையைப் பற்றி என்ன தெரியும்?’’ என்று கோபத்துடன் கேட்டாராம்.கவிஞர்கள் விஷயத்தில் யாரையும் விட்டுக்கொடுக்காத இந்த மக்கள் கவிஞர், 1959- ம் ஆண்டு காலமானார். அவர் மறைந்தபோது கவிஞர் கண்ணதாசன்,
வாழும் தமிழ்நாடும் வளர்தமிழும் கலைஞர்களும்
வாழ்கின்ற காலம் வரை வாழ்ந்து வரும் நின்பெயரே! - என எழுதியிருந்தார்.

கவிஞர் கல்யாணசுந்தரம் தாம் இறப்பதற்கு முன் ஒரு திரைப்படத்துக்கு,
‘தானா எவனும் கெடமாட்டான்
தடுக்கி விடாம விழமாட்டான்
போனா எவனும் வரமாட்டான் - மேலே
போனா எவனும் வரமாட்டான் - இதப்
புரிஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்!’ - என்று எழுதியிருந்தார்.

ஆம் உண்மைதான். மேலே போனா எவனும் வரமாட்டான்!   ஜெ.பிரகாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக