வியாழன், 27 அக்டோபர், 2016

தனியார் சட்டக்கல்லூரி தொடங்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனியார் சட்டக்கல்லூரிகளை அமைக்க தடை விதிக்கும் தமிழக அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், புதிய கல்லூரிகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக நீதிப்பேரவை தலைவர் பாலு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தற்போது 65,000 வழக்கறிஞர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் 3,500 புதிய வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்து வருகின்றனர். இந்திய சட்டக் கமிஷன் பரிந்துரையின்படி, நாட்டில் 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் வீதம் இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது 10 நீதிபதிகள்தான் உள்ளனர். எனவே, வழக்கறிஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் வெறும் 10 சட்டக்கல்லூரிகள் மட்டுமே உள்ளன. கடந்த ஆண்டு சட்டக்கல்லூரியில் சேர விரும்பிய 6,036 பேருக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால், சட்டக்கல்லூரி படிக்க விரும்பியவர்கள் இங்கு இடம் கிடைக்கமால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள சட்டக்கல்லூரிகளில் படித்து, தமிழகத்தில் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர். அதனால், இந்த பிரச்னையில் தீர்வு காண்பதற்கு தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதன் அடிப்படையில், தனியார் சட்டக்கல்லூரி தொடங்க பல அமைப்புகள் விண்ணப்பம் செய்தனர். ஆனால், தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அதற்கு தடை விதிக்கும் விதமாக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாடு தனியார் சட்டக்கல்லூரி தொடங்குவதற்கு தடை விதிக்கும் சட்டம் என்ற பெயரில் இயற்றப்பட்டுள்ள இந்த சட்டத்துக்குக் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. எனவே இந்தச் சட்டத்தை ரத்து செய்து தனியார் சட்டக்கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.
வன்னியர் கல்வி அறக்கட்டை சார்பில் தனியார் சரஸ்வதி சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு பாமக தலைவர் ஜி.கே.மணியும் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மாகதேவன் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்த வழக்குக்கு நேற்று தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், ‘தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் தடை செய்யப்படுகிறது. வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்காமல் எட்டு ஆண்டு காலம் தாமதம் காட்டியதற்கு தமிழக அரசு அபாரதமாக ரூபாய் 20,000 வன்னியர் அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. மேலும், ‘புதிதாக தொடங்கப்படவுள்ள சட்டக்கல்லூரிகள் தொடங்க விண்ணப்பிக்கப்பட்டால், தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக