வியாழன், 27 அக்டோபர், 2016

ஜெ. குணமடைய 3,000 பேர் நடத்திய மிருத்யுஞ்ச யாகம்! ...பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குமா?


தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி 3,000 அதிமுக தொண்டர்கள் மிருத்யுஞ்ச யாகத்தில் ஈடுபட்டனர். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்களும் தொண்டர்களும் பல்வேறு வகையான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியில் பிரமாண்டமான மஹா அமிர்த மிருத்யுஞ்ச யாகம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் ஆலயத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 200 குருக்கள் கலந்துகொண்ட இந்த யாகத்துக்கு ரூபாய் 35 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த யாகத்தில் 108 வகை மூலிகைகள், பூஜை பொருட்களான நெய், ஆப்பிள், திராட்சை, மாம்பழம், செவ்வாழை, பேரீச்சம்பழம், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற எண்ணற்ற பொருட்களும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. யாகப் பந்தல் பல்வேறு சுவாமி சிலைகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலை 5 மணியளவில் தொடங்கிய இந்த பூஜையை மாவட்ட கழகச் செயலாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ. முன்னின்று நடத்தினார். யாகம் நடத்திய 200 குருக்களில், ஒவ்வொருவரும் தலா 1008 முறை ஜெயலலிதாவின் பெயரை உச்சரித்து ஆவர்த்தி செய்தனர். யாகத்தைக் காண்பதற்காக வந்த ஏராளமான பொது மக்களுக்காக எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. மேலும், அங்கு வந்த பெண்களுக்குச் சேலைகள் வழங்கப்பட்டன. சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த பூஜைதான், இதுவரை ஜெயலலிதாவுக்காக நடத்தப்பட்ட பூஜைகளிலேயே மிகப்பெரிய பூஜை ஆகும். இதுகுறித்து மாவட்ட கழகச் செயலாளர் வெற்றிவேல் பேசும்போது, “நாங்கள் அம்மாவைக் கடவுள் போல வணங்குகிறோம். அவர் விரைவில் குணமடைய வேண்டி இந்த சிறப்பு யாகத்தை நடத்தி வருகிறோம். இதை முகஸ்துதி என்றோ, மூட நம்பிக்கை என்றோ சொல்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் வேடிக்கையானவை. எங்கள் நம்பிக்கைபடி, அம்மா விரைவில் மீண்டு வருவார்” என்று கூறினார்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக