புதன், 19 அக்டோபர், 2016

இன்றைய அதிமுக எபிசோட்.. வெளியே அம்மா புராணம்.. கண்ணீர் ... உள்ளே இரகசிய பேரம்..கணக்கு கூட்டல் .. கமிஷன் ...

“நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் நாம் சொல்லியிருந்த தகவல்தான் இன்று கோட்டையில் அமைச்சர்கள் தொடங்கி, அதிகாரிகள் வரை எல்லா மட்டத்திலும் பேச்சாக இருந்தது.
‘ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் சிலரிடம் ஆலோசனை கேட்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சொன்ன ஐடியாபடி, வரும் 27ஆம் தேதி ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து போயஸ் கார்டனுக்கு மாற்றுவது திட்டமாம். இதற்காக, போயஸ் கார்டனில் உள்ள லிஃப்ட்டை ஸ்ட்ரெச்சர் உள்ளே புகும் அளவுக்கு பெரிய சைஸ் ஆக மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தப் பணிகள் நடந்துவருவதை கார்டனோடு தொடர்பில் இருக்கும் நபர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அதே நேரத்தில், தீபாவளி சமயத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதை சென்ட்டிமெண்டாக சசிகலா விரும்பவில்லை. ஆகவேதான், இந்த முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார். போயஸ் கார்டனில் இருந்தபடியே ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் தொடரும்’ என்பதுதான், நேற்று நாம் சொன்ன எக்ஸ்குளூசிவ் தகவல்.
இன்று கோட்டையில் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், காலையில் அமைச்சர்கள் யாரும் அப்பல்லோவுக்குப் போகவில்லை. ஒன்பது மணியில் இருந்தே ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். கூட்டம் நடந்த ஹாலில் முதல்வர் உட்காரும் நாற்காலி மட்டும் காலியாக இருந்தது.
அமைச்சர்களைப் பார்த்தபடி ஜெயலலிதாவின் போட்டோ ஒன்று மட்டும் டேபிள்மீது வைக்கப்பட்டு இருந்தது. கூட்டம் தொடங்குவதற்குமுன்பு அங்கே வந்த ஜூனியர் அமைச்சர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சூழ்ந்துகொண்டார்கள். ‘27ஆம் தேதி அம்மா டிஸ்சார்ஜ்-னு தகவல் வருதே உண்மையா? அம்மா எப்படி இருக்காங்க..?’ இப்படி அவரை விடாமல் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு விஜயபாஸ்கரோ, ‘அம்மா நல்லா இருக்காங்க. டிஸ்சார்ஜ் ஆகிடுவாங்க.. டாக்டர்களுடன் சின்னம்மா பேசிட்டு இருக்காங்க…’ என்று பட்டும்படாமல் சொல்லியிருக்கிறார். டிஸ்சார்ஜ் தொடர்பான தகவல் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், விஜயபாஸ்கருக்கும் மட்டும் சொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதுதொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என, சசிகலா தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருப்பதால் அவர்கள் அடக்கியே வாசிப்பதாகவும் தகவல்.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், ‘அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன பேசினாங்க?’ என்ற கேள்வியை கமெண்ட்டில் போட… அதற்கு பதிலை அடுத்த ஸ்டேட்டஸ் ஆக போஸ்ட் செய்தது ஃபேஸ்புக்.
“ஓ.பன்னீர்செல்வத்துக்கு அருகில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார். இவர்கள் இருவருக்கும் முன்பாக ஜெயலலிதா போட்டோ வைக்கப்பட்டிருந்தது. தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் அமைச்சர்களுக்கு பின்பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். பன்னீர்தான் கூட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். ‘அம்மா ஹாஸ்பிட்டல்ல இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் சந்திக்கிறோம். அம்மா சீக்கிரமே குணமாகிடுவாங்க. நம்மை வழிநடத்த அம்மா வந்திடுவாங்க. அதுவரைக்கும் நாம் எல்லோரும் அம்மாவின் ஆட்சியை சிறப்பாக நடத்த வேண்டும். எந்தப் பணிகளும் பாதிக்கக் கூடாது.’ என்று பன்னீர் பேசப்பேச, சில அமைச்சர்களின் கண்கள் கலங்கியிருக்கின்றன.
தொடர்ந்து பேசிய பன்னீர்செல்வம், ‘உள்ளாட்சிப் பிரதிநிதிகளோட பதவிக்காலம் 24ஆம் தேதி முடியுது. அதுக்குள்ள எலெக்‌ஷன் நடக்காது. அதனால உள்ளாட்சிக்கு தனி அதிகாரிகளை நியமிச்சு ஆகணும். உங்கள் துறையில எந்த முடிவு எடுக்கணும்னாலும் அம்மாவோட சிறப்பு ஆலோசகர்கிட்ட கேளுங்க. அவங்க உங்களுக்கு வழிகாட்டுவாங்க. என்கிட்டயும் சொல்லுங்க. நானும் அவங்களோட பேசுறேன்’ என்று தொடங்கி, வேறுசில திட்டங்கள் பற்றியும் அங்கே பேசியிருக்கிறார் பன்னீர். அவர் பேசும்போதும் சரி… பேசி முடித்தபிறகும் சரி… அமைச்சர்கள் யாரும் வாய் திறக்கவே இல்லை. பன்னீர் பேசியதை எல்லாம் ராம்மோகன் ராவும், ஷீலா பாலகிருஷ்ணனும் உன்னிப்பாக கவனித்தபடியே இருந்தார்கள். ஷீலா அதை குறிப்பும் எடுத்துக்கொண்டார். அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் கவர்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இப்படி அரசு தொடர்பான விஷயங்களை பேசி முடித்தபிறகு பன்னீர், ‘இன்னொரு விசயத்தையும் உங்ககிட்ட சொல்லணும். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர் அறிவிக்கப் போறோம். தஞ்சாவூருக்கும், அரவக்குறிச்சிக்கும் ஏற்கனவே அம்மா அறிவிச்ச வேட்பாளர்களே இருக்கட்டும் என்று சின்னம்மா சொல்லிட்டாங்க. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மட்டும் போஸ் என்பவரை சின்னம்மா சொல்லியிருக்காங்க. மதியம் அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்துடும்’ என்றுசொல்லி, கூட்டத்தை நிறைவு செய்திருக்கிறார் பன்னீர்.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், செப்டம்பர் 10ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் வெளியாகி இருந்த செய்தியின் ஒரு பகுதியை காப்பி செய்து கமெண்டில் போஸ்ட் செய்தது.
“கார்டனை நெருங்க பல வழிகள் இருந்தாலும், சரியான வழி என்றால் அது சசிகலா குடும்பம்தான் என்பது செந்தில்பாலாஜிக்கும் தெரியாமல் இருக்குமா என்ன… அதனால்தான் அவர், விவேக் திருமண வரவேற்பு நடந்த அன்று தஞ்சாவூர் போயிருக்கிறார். அங்கே வைத்து சசிகலாவைப் பார்த்ததாக சொல்கிறார்கள். சசிகலாவிடம் செந்தில்பாலாஜி சரண்டர் ஆகியதாகவும் சொல்கிறார்கள். அதன்பிறகுதான் சசிகலா, சென்னை வந்தபிறகு ஜெயலலிதாவுடன் பேசி சமாதானம் செய்திருக்கிறார். இரு தினங்களுக்குமுன்பு அதாவது, கடந்த வியாழக்கிழமை மாலை செந்தில்பாலாஜியை போயஸ் கார்டனுக்கு வரவைத்துப் பேசியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதனால், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட செந்தில்பாலாஜிக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதற்குள் செந்தில்பாலாஜி கார்டனுக்குப் போய் வந்திருக்கிறார் என்ற தகவல் பரவியதும், கரூரைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் ரகசியமாக வந்து அவருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.’ அந்த பழைய ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டுவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக