வெள்ளி, 30 செப்டம்பர், 2016

POSSIBILITY of India-Pakistan war : USA News .. அரசின் பொருளாதார தோல்வியை மறைக்க போர் முழக்கம்?


thetimestamil.com :கோழிக்கோட்டில் பேசிய மோடி, யூரி தொடர்பான அவரது சகாக்களின் போர்வெறிக் கூச்சல்கள் சிலவற்றை மீண்டும் முன்வைத்ததுடன், அப்பட்டமான பாகிஸ்தான் எதிர்ப்பு தேசவெறிவாதக் கூச்சலையும் தீவிரப்படுத்தினார். பாஜக தலைவர் ராம் மாதவ், ‘யூரி தாக்குதலுக்கு பழிக்குப் பழி தீர்க்க’ வேண்டும் என்று சமீபத்தில் பேசினார். பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி, 10 கோடி இந்தியர்கள் மடிந்தால் கூட பாகிஸ்தானை முழுவதுமாக அழிக்க அணுஆயுதப் போர் நடத்த இந்தியா தயாராக வேண்டும் என்றார். பாகிஸ்தான் மீது உடனடியாக போர் என்ற விசயத்தை மோடி தவிர்த்தாலும் வறுமை, குறை வளர்ச்சி ஆகியவற்றின் மீதான போரில் இந்தியா பாகிஸ்தானை வென்றுவிட்டது என்றார். அதைத் தொடர்ந்து ‘ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது’ என்று சொல்லி, பாகிஸ்தானுக்கு நதிநீர் தருவதைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது பற்றி அறிவித்தார்.

‘போர்த்தந்திரரீதியாக கட்டுப்பாடு காப்பது’ என்பது அரசின் நிகழ்ச்சி நிரலில் இல்லவே இல்லை என்பதை நதிநீர் பங்கீடு தொடர்பான இந்த அறிவிப்பு தெளிவாகக் காட்டுகிறது. ஒரு தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஓர் அண்டை நாட்டுக்கு தண்ணீர் தருவதை குறைப்பது, ராணுவம் அல்லாத வழிகளில் தொடுக்கும் போர் ஆகும். இது அண்டை நாட்டின் ராணுவத்தை மட்டுமின்றி, அதன் சாதாரண குடிமக்களையும் இலக்காக்குகிறது. மேலும் அப்படி தடுப்பதற்கு, குறைப்பதற்கு, மிகப்பெரிய செலவில் அணைகள் கட்ட வேண்டியிருக்கும்; அப்படிக் கட்டினால், அது காஷ்மீரில் பெருமளவுக்கு மக்கள் வாழ்விடங்களில் இருந்து அகற்றப்படுவதற்கும் வெள்ள அபாயம் அதிகரிப்பதற்கும் இட்டுச் செல்லும்.
பொருளாதார, சமூகக் குறியீடுகளில் பாகிஸ்தான் இந்தியாவை விட பின்தங்கி இருக்கிறது என்று சொல்வதன் மூலம் மோடி பாகிஸ்தான் மக்களைப் பழிக்கிறார். இந்த விசயங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பெரும் வேறுபாடு எதுவும் இல்லை. குடிமக்களின் பொருளாதார, சமூக உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் குடியுரிமைகளை மதிப்பது ஆகியவற்றில் இரண்டு நாடுகளும் மிக மோசமான நிலைமைகளிலேயே உள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் போட்டி தேசவெறிவாதக் கூச்சலில்தான் ஈடுபடுகிறது. ‘பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடு என்று அறிவிக்க’ கூட்டு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்கிறது. இதுபோன்ற போட்டி தேசவெறிவாதக் கூச்சல் நாட்டின் அரசியல் சூழலை மேலும் மோசமானதாக்கும்.
உள்நாட்டு அரசியலுக்காக பாஜக போர்வெறிக் கூச்சலையும் பாகிஸ்தான் எதிர்ப்பு வாய்வீச்சையும் முன்வைக்கிறது. ஆனால், ராஜதந்திர விளைவுகள் என்ற அடிப்படையில் இந்தக் கூச்சல்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அய்நா பொதுப் பேரவையில் வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வாய்வீச்சுக்களுக்கு ஒப்புதல் அளித்துப் பேசவில்லை. சில நாடுகளை ஒப்புக்கொள்ள வைக்க இந்தியா மிகவும் தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டபோதும், அந்த நாடுகள் அதற்கு உடன்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எதிரொலிக்கவும் இல்லை. அணிசேரா நாடுகள் இயக்கத்தின் கூட்டத்துக்குச் செல்லாமல் தவிர்த்த முதல் பிரதமர் மோடிதான்; பிற வளர்ந்து வருகிற நாடுகள் மத்தியிலும் சர்வதேச கருத்துக்களில் இருந்தும் இந்தியா அதிகரித்த அளவில் தனிமைப்படுவதன் வெளிப்பாடே இது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் திறன்மிக்க இருதரப்பு ராஜதந்திர உறவுகளுக்கு மாற்று எதுவும் இருக்க முடியாது. போர்வெறிக் கூச்சல், தேசவெறிவாதக் கூச்சல், அய்க்கிய அமெரிக்காவையோ பிற மேற்கு நாடுகளையோ தலையிட வைக்க முயற்சி செய்வதோ சற்றும் பயன் தராது.
கோழிக்கோட்டில் நடந்த பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய மோடி, இசுலாமியர்கள் பற்றிய தனது அணுகுமுறை பற்றியும், தனது கட்சியின் அணுகுமுறை பற்றியும் கூட பேசினார். இசுலாமியர்களுக்கு பதிலடி தருவது கூடாது; மாறாக அவர்களை ‘திருத்தி/ தூய்மைப்படுத்த வேண்டும்’ என்ற, சங் கருத்தியலாளர் தீனதயாள் உபாத்யாய் மேற்கோளைச் சுட்டிக்காட்டினார். இசுலாமியர்களை ‘வாக்கு வங்கிகள்’ என்று கருதுவதற்குப் பதிலாக, அவர்களை ‘நம்மவர்களாகக்’ கருத வேண்டும் என்றார்.
இசுலாமியர்களுக்கு ‘அதிகாரம் வழங்க வேண்டும்’ என்று மோடி சொன்னதாக அவரை நியாயப்படுத்துபவர்கள் சொல்கிறார்கள். ஆனால், தீன்தயாள் உபாத்யாய் எழுத்துக்களைப் படித்தால், அவரை மேற்கோள் காட்டுவதன் மூலம், மோடி, இசுலாமியர்களுக்கு எதிரான மதவெறி பேச்சுக்கள், இந்தியாவை ‘இந்து நாடாக்குவது’ மட்டுமின்றி பாகிஸ்தானை அழிப்பதன் மூலம் ‘அகண்ட பாரதத்தை’ (பிளவுபடாத இந்தியா) உருவாக்குவது என்ற அவரது கடப்பாடு ஆகியவற்றுக்கு இசைவாகவே பேசியிருக்கிறார் என்பது சந்தேகத்துக்கிடமின்றி தெரிகிறது.
1953, ஆகஸ்ட் 24 அன்று பஞ்ச்ஜன்யாவில் ‘பிளவுபடாத இந்தியா’ என்ற தலைப்பில் தீன்தயாள் உபாத்யாய் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ‘இசுலாமிய சமூகத்தினரின் பிரிவினைவாத, தேசவிரோத அணுகுமுறைதான் அகண்ட பாரதத்துக்கு மிகப்பெரிய தடை’ என்று அதில் சொல்கிறார். மேலும், ‘பாகிஸ்தான் உருவானது இந்த அணுகுமுறையின் வெற்றி என்கிறார். இசுலாமியர்கள் இந்தக் கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான் அகண்ட பாரதத்தின் சாத்தியப்பாடு பற்றி சந்தேகம் எழுகிறது. அப்படி இருக்கும்போது, இந்தியாவில் 6 கோடி இசுலாமியர்கள் தொடர்ந்து இருப்பது இந்திய நலன்களுக்கு நல்லதல்ல. இசுலாமியர்கள் இந்தியாவை விட்டு விரட்டப்பட வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் யாராவது சொல்வார்களா? இல்லையென்றால் இந்த நாட்டின் தேசிய வாழ்க்கைக்குள் அவர்கள் உள்வாங்கப்பட வேண்டும். பூகோளரீதியாக பிளவுபட்டுள்ள இந்தியாவில் இந்த உள்வாங்குதல் சாத்தியம் என்றால், பிற பூகோள பகுதிகளும் இந்தியாவுக்குள் உள்வாங்கப்பட நீண்ட காலம் பிடிக்காது. ஆனால், இந்து இசுலாமியர் ஒற்றுமை பற்றி இதுவரை நிலவுகிற கொள்கைளை நிராகரிப்பது, இந்த உள்வாங்குதலுக்கு அவசியம். மாறாக, நமக்கு ஒற்றுமை வேண்டும் என்றால், இந்து தேசியவாதமான இந்திய தேசியவாதத்தை, இந்தி கலாச்சாரமான இந்திய கலாச்சாரத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். அதை நாம் நமது வழிகாட்டும் கோட்பாடாக கடைபிடிக்க வேண்டும்’ என்று சொல்கிறார்.
இசுலாமியர்கள் ‘திருத்தப்பட’ வேண்டும் என்று தீன்தயாள் உபாத்யாய் விடுக்கும் அழைப்பு, இந்தியாவில், பாகிஸ்தானிலும் கூட இருக்கிற இசுலாமியர்களின் ‘தேசவிரோத அணுகுமுறையை’ மாற்றி, இந்து தேசியவாதமான இந்திய தேசியவாதத்துக்குள் அவர்களை ‘உள்வாங்கும்’ சவாலை ஏற்க வேண்டும் என்று இந்துக்களுக்கு விடும் அழைப்பு என்பது இந்த மேற்கோளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. இசுலாமியர்களை இந்துத்துவத்துக்குள் உள்வாங்குவதும் பாகிஸ்தானை (இந்து) இந்தியாவுக்குள் உள்வாங்குவதும் ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தியல், அரசியல் திட்டத்தின் மய்யமாகும்.
‘உள்ளார்ந்த மனிதம்’ என்ற அவரது கட்டுரையிலும் ஆர்எஸ்எஸ்ஸின் மதவெறி மனப்போக்கை அவர் வெளிப்படுத்துகிறார். ‘இந்துக்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மோசமானவர்களாக இருந்தாலும், அவர்கள் ஒரு குழுவாக மாறும்போது, எப்போதும் நல்ல விசயங்களையே சிந்திக்கிறார்கள். (ஆனால்) இரண்டு இசுலாமியர்கள் சேர்ந்தாலே, அவர்கள் தனிநபர்களாக இருக்கும்போது யோசனை செய்துகூட பார்க்காத விசயங்களை முன்வைப்பார்கள், ஒப்புக்கொள்வார்கள்’ என்ற ஆர்எஸ்எஸ் நிறுவனர் கோல்வால்கரின் மேற்கோளை எடுத்தாள்கிறார்.
உபாத்யாய் நிறுவிய ராஷ்ட்ர தர்மம் பத்திரிகையின் 2015 நவம்பர் இதழில், மோடியின் கலாச்சார அமைச்சர் மகேஷ் சந்த் சர்மா ‘தீன்தயாள் பார்வையில் இசுலாமியர் பிரச்சனை’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ‘இசுலாமியர்களை அரசியல்ரீதியாக வீழ்த்துவது, பாகிஸ்தானை அரசியல்ரீதியாக வீழ்த்துவதுதான் இசுலாமியர் பிரச்சனைக்குத் தீர்வு’ என்று உபாத்யாய் சொல்வதாக அவர் சொல்கிறார். ‘அரசியல்ரீதியாக வீழ்த்தப்படுவது (இசுலாமியரின்) மூர்க்கமான அணுகுமுறைக்கு முடிவு கட்டி, அவரை அவரது உண்மையான இந்து இயல்புக்கு மீட்கும்’. ஆர்எஸ்எஸ்ஸும் பிரதமர் மோடியும் அவரது கலாச்சார அமைச்சரும் இசுலாமியர்களை ‘திருத்த வேண்டும், தூய்மைப்படுத்த வேண்டும்’ என்று சொல்லும்போது, தவறு செய்கிற இசுலாமியர்கள் தங்கள் ‘உண்மையான இந்து இயல்புக்கு திரும்ப வேண்டும்’ என்ற வீடு திரும்புதலுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெரிகிறது. இசுலாமியர்களின் அரசியல் வீழ்ச்சிக்காக அவர்கள் அழைப்பு விடுக்கும்போது, இந்திய குடிமக்கள் என்ற விதத்தில் சமத்துவமும் கவுரவமும் விரும்பும் இசுலாமியர்களை வீழ்த்துவதற்கே அழைப்பு விடுக்கிறார்கள்.
பாகிஸ்தான் எதிர்ப்பு தேசவெறிவாதக் கூச்சல் போடும் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும், இந்தியாவுக்குள் சிறுபான்மையினர், தலித்துகள் மீதான வெறுப்பை, வன்முறையை தூண்டி விடுகிறார்கள். இந்த தேசவெறிவாத கூக்குரலும் வெறுப்புக் கூச்சலும் தீர்மானகரமாக நிராகரிக்கப்பட வேண்டும். முறியடிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுடன் நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க இந்தியா திறன்மிக்க ராஜதந்திரரீதியான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
– மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வெளியீடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக