வெள்ளி, 16 செப்டம்பர், 2016

bogusvotescm ஜெயா 91 ஆயிரம் கட்சி மாறிகளை இருகரம் நீட்டி வரவேற்கிறார்

ஒரே தேசத்துக்குள் இருக்கிற இரண்டு
மாநிலங்கள்
இந்தியா பாகிஸ்தான் போல தகிக்கிறது. காவிரி தண்ணீர் கேட்டதற்காக கர்நாடகாவில் தமிழர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இங்கேயோ அதே நாளில் பன்னீர் தெளித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழக வாகனங்களும் தமிழர் நிறுவனங்களும் கடைகளும் அடித்து நொறுக்கப்படுகின்றன. ‘கர்நாடக்கே ஜெயம்... காவிரி... கர்நாடக்கே சொத்து’ என சொல்லி லாரி டிரைவர் களையும் கல்லூரி மாணவர் களையும் அடித்து சொல்ல வைத்தது எல்லாம் அநியாயத்தின் உச்சம். 144 தடை, ஊரடங்கு உத்தரவு, கொளுந்துவிட்டு எரியும் வன்முறை என ஜம்மு காஷ்மீரை கண் முன் நிறுத்துகின்றன. அங்கே கொலையாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தமிழகத்தில் ஆளும் கட்சி கொண்டாட்டம் நடத்தியது விமர்சனங்களை விதைத்திருக்கிறது.
மாற்று கட்சியை சேர்ந்த 91 ஆயிரத்து 308 பேர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணையும் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 14-ம் தேதி நடந்தது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கட்சியில் சேரும் அளவுக்கு இதுவரை நடந்ததில்லை. சில ஆயிரம் பேர் என்றால் அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும். இப்போது எண்ணிக்கை அதிகம் என்பதால் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சுபமுகூர்த்த தினத்தில் விழாவை அரங்கேற்றினார்கள். உள்ளாட்சி தேர்தல் நேரம் என்பதால் கொண்டாட்டம் வழக்கத்துக்கு மாறாகக் களைக் கட்டியது.

அது வேற வாய்!

2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக டெசோ மாநாட்டை தி.மு.க நடத்தியது. இதே ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட அந்த மாநாடுக்கு ஆட்சியில் இருந்து அ.தி.மு.க முட்டுக்கட்டை போட்டது. மாநாட்டைத் தடை செய்யக்கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் ஐகோர்ட்டில் பொதுநல வழக்குப் போட்டார். ‘ஒய்.எம்.சி.ஏ மைதானத்தைச் சுற்றி அரசு மருத்துவமனை, கல்வி நிலையங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. மாநாடு நடைபெற்றால் ராயப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்துவிடும். அதனால், மாநாடு நடத்த அனுமதிக்கக் கூடாது’ என மனுவில் குறிப்பிட்டார் ராமச்சந்திரன். இந்த வழக்கில் அரசின் சார்பில் அப்போது வாதாடியது அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன். இப்போது அவர் அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி. ‘மெட்ரோ ரயில் பணி நடப்பதால் ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை நெடுஞ்சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாறுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரின் 2-வது மிகப் பெரிய மருத்துவமனை ராயப்பேட்டையில்தான் இருக்கிறது. அங்கு தினமும் புறநோயாளிகளாக 3 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். உள்நோயாளிகளாக 1,000 பேர் இருக்கிறார்கள். மாநாடு நடக்கும்பட்சத்தில் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். சென்னை மாநகர மக்கள் போக்குவரத்து நெரிசல் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அதனால் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதிக்கக் கூடாது’ என வாதாடினார் நவநீதகிருஷ்ணன்.

11 காரணங்களைச் சொல்லி மாநாட்டை நடத்தத் தடை விதித்தார்கள் அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த திரிபாதியும் டி.ஜி.பி-யாக இருந்த ராமானுஜமும். ஒருவழியாக சட்டப் போராட்டம் நடத்தித்தான் டெசோ மாநாட்டை நடத்தியது தி.மு.க. அந்த டெசோ மாநாடு நடந்த ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்தான் இப்போது கொண்டாட்டம்.

சாலைகள் ஆக்கிரமிப்பு!
தமிழகம் முழுவதும் ஏராளமான வாகனங்கள் அதிகாலையிலேயே சென்னைக்கு வரத்தொடங்கின. அதிகாலையில் சென்னைக்குள் வரும் பஸ்களோடு அ.தி.மு.க-வினர் வந்த வாகனங்களும் சேர்ந்துகொள்ள... செங்கல்பட்டில் இருந்தே வாகனங்கள் ஊர்ந்துதான் சென்னைக்குள் நுழைய முடிந்தது. இந்த ஒருமணி நேர விழாவுக்காக சென்னையே அரைநாள் அல்லோலப்பட்டது. சுபமுகூர்த்த தினமான அன்று சென்னைவாசிகள் திக்குமுக்காடிப்போனார்கள். வாகனங்களை நிறுத்த திவுத்திடல் ஏரியாவில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கே சில வாகனங்கள்தான் சென்றன. பெரும்பாலான வாகனங்கள் மெரீனா, சிவானந்தா சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, ஒயிட்ஸ் சாலை என ராயப்பேட்டை ஏரியாவைச் சுற்றியே சாலை ஓரங்களில் நிறுத்தினர்கள். ராயப்பேட்டைக்குள் நுழையும் முக்கிய சாலைகள் தடுப்புகள் போட்டு மூடப்பட்டன. இதனால் மைலாப்பூர், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல். ஒய்.எம்.சி.ஏ. மைதானம் எதிரில்தான் ராயப்

பேட்டை அரசு மருத்துவமனை உள்ளது. புறநோயாளிகள் பிரிவுக்கு வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் நேரத்துக்கு வரமுடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்கள். நோயாளிகளைப் போலவே, டாக்டர்களும் பணியாளர்களும் சரியான நேரத்துக்கு வர முடியாமல் தவித்தனர். டெசோ மாநாட்டுக்காகச் சொன்ன காரணங்கள் அனைத்தையும் ஆளும் கட்சியே மீறியது.

கரகாட்டம்.. கொண்டாட்டம்!
போயஸ் தோட்டத்தில் இருந்து ராயப்பேட்டை வரையில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் தனித்தனி கோஷ்டிகளாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி கூட்டம் திரட்டி வைத்திருந்தனர். வழி நெடுகிலும், செண்டை மேளம், ஓயிலாட்டம், கரகாட்டங்கள் களைக்கட்டின. சாலைகளை மறித்துதான் இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இன்னொரு பக்கம் பேனர்கள், ஃபிளெக்ஸ்கள் சாலைகளை கபளிகரம் செய்திருந்தனர். முகூர்த்தநாள் என்பதால் திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு ராயப்பேட்டை வழியாக சென்றவர்களுக்கு கடும் சோதனை. ராயப்பேட்டை ஏரியாவில் குவிந்ததால் சென்னையில் பல சிக்னல்களில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீஸார் இல்லை.
பிணவறை போராட்டம்!

நண்பனைப் பார்த்துவிட்டு டூ வீலரில் நண்பன் பாலகிருஷ்ணனோடு வந்த மந்தைவெளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவன் மகேஷ் மயிலாப்பூர் வி.எம். தெரு அருகில் அரசு பஸ் மோதி பலியானான். படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வர முடியாத அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல். மகேஷ் உடலை ராயப்பேட்டை மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு வரவும் காலதாமதம் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர்செய்து வழி ஏற்படுத்தச் சொல்லி உறவினர்களும் நண்பர்களும் திடீரென பிணவறை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ராயப்பேட்டை மருத்துவமனை சிக்னல் அருகே கரகாட்டம்  நடந்துகொண்டிருந்தது.

சிம்பிளாக நடத்தியிருக்கலாம்!
காவிரி நீருக்காக கர்நாடகா எதிர்ப்பை காட்ட... தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்க... இப்படிப்பட்ட சூழலில் உற்சாகத்தோடு இணைப்பு விழாவை  அ.தி.மு.க-வினர் நடத்துவது முறையா என முணுமுணுப்புகள் எழுந்தன. ‘‘சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைதாகி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டிருந்த 11 அ.தி.மு.க. இல்லத் திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டு சில மாதங்கள் கழித்தே நடந்தன. அதுபோல, காவிரி பிரச்னை உச்சத்தில் இருக்கும் நிலையில் இந்தக் கொண்டாட்டங்களைத் தள்ளிவைத்திருக்கலாம். இணைப்பு விழாவில் 50 பேருக்கு மட்டுமே உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார். அந்த 50 பேரை மட்டுமே அழைத்து மிக சிம்பிளாக விழாவை நடத்தியிருக்கலாம்’’ என்கிறார்கள் எதிர்க் கட்சியினர். 
எஸ்.ஏ.எம். பரக்கத் அலி, எஸ்.முத்துகிருஷ்ணன்.அட்டை ஓவியம்: ஹாசிப்கான், படம்: முத்துகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக