வெள்ளி, 16 செப்டம்பர், 2016

மிஸ்டர் கழுகு : காவிரி... ஜெயலலிதா... கள்ள மெளனம்! விகடன்.காம்

கழுகார் அனுப்பிய தலைப்பு வாசகங்கள் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன. லே அவுட்டுக்குத் தலைப்பை அனுப்பிவிட்டு கழுகாருக்காகக் காத்திருந்தோம். 2011, 2015-ம் ஆண்டுகளுக்கான டைரிகளைக் கையோடு கொண்டுவந்த கழுகார் அதனைப்  புரட்டிவிட்டு பேச ஆரம்பித்தார். ‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் மேக்கேதாட்டூவில் கர்நாடகம் அணை கட்ட களமிறங்கியது. இதை எதிர்த்து அப்போது விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட ‘பந்த்’தில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றாகக் கைகோர்த்தன. பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் அந்த பந்தில் பங்கேற்கவில்லை. ‘பந்த்’தில் பங்கெடுக்காமல் போனால் தங்கள் மீது ‘கறை’ படிந்துவிடும் என அஞ்சியோ ‘பந்த்’துக்கு முந்தைய தினம் சட்டசபையில் தனித் தீர்மானம் ஒன்றையும் ஏகமனதாக நிறைவேற்றியது அ.தி.மு.க. அரசு. தீர்மானம் போட்டதிலும் ‘சாஃப்ட் அப்ரோச்’தான். தீர்மானத்தில் கர்நாடகாவைக் கண்டிக்கும் கடுமையான வாசகங்கள் இல்லை. பந்த் நடந்தபோது சட்டசபை கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்தது. அப்போது சட்டசபையில் பேசிய துரைமுருகன், ‘‘அரசே பந்த் நடத்தினால்தான் அது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது. ஆனால், அ.தி.மு.க. பங்கேற்கலாம். பந்த் அன்று நாம் மட்டும் சட்டசபையில் உட்கார்ந்திருந்தால் அது நியாயமாக இருக்காது.
விவசாயிகளின் போராட்டத்தை மானசீகமாக ஆதரிக்கிறோம் என்பதைத் தெரிவிக்கும் வகையில் அவையை ஒத்திவைக்க வேண்டும். அது, விவசாயிகளின் போராட்டத்துக்கு இந்த மாமன்றம் காட்டுகின்ற மரியாதை’’ என்றார். ஆனால், அதுபற்றி எந்த ரியாக்‌ஷனும்  அவையில் எழவில்லை. கூட்டம் முடிந்த பிறகு இரவில், ‘சட்டசபை நாளை ஒத்தி வைக்கப்படுகிறது’ என திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அந்த ‘பந்த்தை ஆதரிக்கிறோம்’, ‘இல்லை எதிர்க்கிறோம்’ இரண்டில் ஒன்றை சொல்லியிருக்க வேண்டும். ‘பாம்பும் சாகக் கூடாது. கம்பும் உடையக் கூடாது’ என ‘அமைதி’ காத்தன இந்த இரண்டு கட்சிகளும்.’’

‘‘இந்த ஃபிளாஷ்பேக் இப்போது எதற்கு?’’ ‘‘அன்றைக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் காட்டிய அந்த ‘கள்ள மௌனம்’ இப்போதும் அரங்கேறுகிறது. காவிரி பிரச்னைக்காக 16-ம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத்தன வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பும் பேரமைப்பும். அதற்கு அடுத்த நாள் நடக்க இருந்த விவசாயிகள் போராட்டத்தையும் 16-ம் தேதிக்கு மாற்றினார்கள். உடனே, இதனை தி.மு.க. ஆதரித்தது. மற்ற அரசியல் கட்சிகளும் வரிசையாக ஆதரித்தன. பள்ளிகள் மூடப்படும் எனத் தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்திருக்கிறது. பெட்ரோல் பங்குகள் இயங்காது என அறிவித்தனர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர். ‘ஆம்னி பஸ்கள் ஓடாது’ என சொன்னார்கள் அதன் நிர்வாகிகள். ஆனால், அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோதும் தமிழக காங்கிரஸ் பந்துக்கு ஆதரவு அளித்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பி.ஜே.பி-யோ அங்கே ஆட்சியை பிடிக்கத் துடிக்கிறது. அ.தி.மு.க-வுக்கோ அங்கே சொத்துக் குவிப்பு வழக்கு பயம்!”

‘‘வழக்கு முடிந்து தீர்ப்பு வந்து... சுப்ரீம் கோர்ட்டுக்குப் போய்விட்டதே?”

‘‘ கர்நாடகா காங்கிரஸ் அரசின் மேல்முறையீட்டின் கீழ்தான் சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இப்படியான சூழலில்தான் கர்நாடகாவுக்கு எதிராகக் கடுமை காட்டாமல் இருக்கிறார்கள். அங்கே தமிழர்கள் தாக்கப்பட்டும் வாகனங்கள் கொளுத்தப்பட்டும் கொந்தளிப்புகள் நடந்தபோது அதைக் கண்டித்து ஜெயலலிதாவிடம் இருந்து அறிக்கை வரவில்லை. பந்துக்கும் ஆதரவு தரவில்லை.’ ‘‘2011 டைரியில் என்ன இருக்கிறது?”< ‘‘2011-ம் ஆண்டு இறுதியில்தான் முல்லை பெரியாறு போராட்டம் தேனியில் உக்கிரமாக வெடித்தது. முல்லை பெரியாறு அணை வலுவிழந்துவிட்டது எனச் சொல்லி அதனை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி செய்தது. இதனால், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தன்னெழுச்சியாக நடந்த போராட்டம் ஒரு மாதம் நீடித்தது. முல்லை பெரியாறு அணையால் நீர்பாசனம் பெறும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் திரண்டு தினமும் போராடி வந்தனர். கடையடைப்பு, உண்ணாவிரதம் எனப் பல வடிவங்களில் போராட்டம் தொடரவே.... தென் மாவட்டம் தகிக்க ஆரம்பித்தது. அந்த நேரத்தில் அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்ப்புகளைப் பதிவுசெய்தது.
கேரளாவுக்கு எதிராகக் கடுமையாக அறிக்கை விட்டார் முதல்வர் ஜெயலலிதா. அந்த அறிக்கையைப் பத்திரிகைகளில் விளம்பரமாகவும் வெளியிட்டார்கள். முல்லை பெரியாறு பற்றி விவாதிக்க சிறப்பு சட்டசபைக் கூட்டம் கூட்டினார்கள். இந்த போராட்டம் வெடிப்பதற்கு சில நாட்கள் முன்புதான் முல்லை பெரியாறு அணை உடைந்து பெரிய சிக்கல் ஏற்படுவது மாதிரி ‘டேம் 999’ என்ற படத்தை எடுத்திருந்தார்கள். அந்தப் படத்துக்குத் தமிழக அரசு தடை போட்டது. போராட்டம் வெடித்த நேரத்தில் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக் கொண்டாடப்பட்டார். அவரைப் பற்றிப் புகழாரம் சூட்டப்பட்டது. அதனால் பென்னி குக்குக்கு சிலை வடித்து, மணிமண்டபம் கட்டி மரியாதை செலுத்தினார் ஜெயலலிதா. முல்லை பெரியாறு போராட்டம் நடந்தபோது காட்டப்பட்ட இப்படியான எதிர்ப்புகளை ஏன் காவிரியில் இப்போது காட்டவில்லை என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ‘விவசாயிகளின் நலனா? அரசியல் எதிர்காலமா?’ என்கிற நிலையில் ஜெயலலிதா குழம்பி போயிருப்பதைதான் இது காட்டுகிறது.’’

‘‘ம்!”

‘‘சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகிய கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா எழுதிய ஆல் ஃபிரம் மெமரி (எல்லாம் என் நினைவில் இருந்து) புத்தகத்தில், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் எனக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன’ என குறிப்பிட்டார். இதை மேற்கோள்காட்டி, தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ரத்னம் சுப்ரீம் கோர்ட்டில் மனு போட்டார். ‘ஆசாரியாவிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர் நேர்மையான முறையில் ஆஜராகி செயல்பட்டாரா என்பதையும் விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும்’ என ரத்னம் கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக சொன்னது. ‘இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் காரணம் என்ன?’ என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேள்வி எழுப்ப... அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படும்’ என சொன்னார்கள். அதாவது நான்கு வார காலத்திற்குள் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாக போகிறது. இந்த நிலையில் காவிரி விவகாரம் பற்றி எரிய ஆரம்பித்தது. இப்படிப்பட்ட சூழலில் கர்நாடகாவுக்கு எதிராக கடுமையான அறிக்கையோ, எதிரான நடவடிக்கைகளோ ஜெயலலிதா பெரிதாக எடுக்கவில்லை. பந்த்திற்கு ஆதரவு தெரிவித்தால் சுப்ரீம் கோர்ட் கண்டத்துக்கு ஆளாக நேரும். சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்திருக்கும் கர்நாடகா, அந்த வழக்கை நடத்தும் சுப்ரீம் கோர்ட் ஆகிய இரண்டு அமைப்புகள் முகம் சுழிக்காமல் நடந்து கொள்வதே அ.தி.மு.க. அரசின் இப்போதைய அஜென்டா. அதனால்தான் கர்நாடகாவுக்கு எதிரான நிலையை உறுதியாக எடுக்க முடியாமல் அ.தி.மு.க. தவிக்கிறது.’’

‘‘கர்நாடகாவில் முதல்வரின் உருவ படங்களை வைத்து நடத்திய விஷயங்களையும் உருவ பொம்மையை கொளுத்தியதற்கும் அ.தி.மு.க.வினர் பெரிதும் எதிர்ப்பு காட்டாமல் இருந்தது இதற்காகத்தானா?’’ ‘‘ஜெயலலிதாவை விமர்சித்தற்காகவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கிடுகிடுக்கும் போராட்டத்தால் தினறடித்தவர்கள் அ.தி.மு.க-வினர். அப்படிப்பட்டவர்கள் தலைவியின் படத்தை வைத்து கன்னடர்கள் நடத்திய போராட்டத்தைக் கண்டு சும்மா இருந்திருப்பார்களா? அவர்களை அடக்கி வைத்திருக்கிறது தலைமை. ‘சட்டரீதியாகவே சந்திக்கலாம்’ என கட்சியினரைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். தீர்ப்பு வரும் நேரத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து கொண்டிருக்கும். அதனால் அதற்கான வேலைகளை துவக்கிவிட்டார்கள். மாநகராட்சிகளும் நகராட்சிகளும்தான் முக்கியமாக அதி.மு.க. குறி வைத்திருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகாருக்கு ஏதோ வாட்ஸ் அப் தகவல் வந்தது. படித்துவிட்டு நிமிர்ந்தவர் சொன்னார், ‘‘பந்த் நடவடிக்கைகளில் தனியார் பள்ளி, கல்லூரிகள் பங்கெடுக்கக் கூடாது என்று எச்சரிக்கும் நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் இறங்கி இருப்பதாகத் தகவல் வருகிறது” என்றபடி பறந்தார்.
படங்கள்: ஆ.முத்துகுமார், ரமேஷ் கந்தசாமி    விகடன்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக