திங்கள், 26 செப்டம்பர், 2016

அருண் மோ :தமிழ் சினிமாவின் நூற்றாண்டு குறித்து ஒரு ஆய்வு கூட இதுவரை நடத்தப்படவில்லை!

பெருமைமிகு தமிழ் தேசம்...
தமிழ் சினிமா நூற்றாண்டு என்று இணையத்திலோ, முகநூலிலோ ஒருமுறை தேடிப்பாருங்கள். இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டதை பலரும் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு என்று பதிவு செய்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலும் கவனம் பெற்றிருப்பது, விஜய் பற்றிய காணொளி திரைப்படவில்லை, அவருக்கு முன்வரிசையில் இருக்கை அளிக்கப்படவில்லை, ஆனால் நடிகர் விக்ரம் மட்டும் விஜய் உடன் சென்று பின்வரிசையில் அமர்ந்து தனது பெருந்தன்மையை காட்டினார் என்கிற பதிவுகள்தான் அதிகம் இருக்கிறது. இப்படியாக தமிழ் சினிமாவின் நூற்றான்டு அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருக்கிறது. இயக்குனர் சங்க தலைவரிடம் தமிழ் சினிமா நூற்றாண்டு குறித்து பேசினால், முதல்வரிடம் பேசியிருக்கிறோம், விரைவில் தமிழ் சினிமா நூற்றாண்டுக்கான கூட்டம் நடத்துவோம் என்கிறார். அங்கேயும் இப்படியான செய்திகள்தான் இடம்பிடிக்கும். அஜித் மதிக்கப்படவில்லை, விஜய் சேதுபதிக்கு, தனுஷுக்கும், போதுமான மரியாதை இல்லை, என்கிற செய்திகள்தான் இடம்பிடிக்கும். தமிழ் சினிமாவின் நூற்றாண்டு குறித்த ஒரு செறிவுமிகு, ஆய்வுக்கூட்டத்தை தமிழ் சினிமா கலைஞர்கள், அல்லது வியாபாரிகள் நடத்த வாய்ப்பே இல்லை.

சரி தமிழ் ஸ்டுடியோ சார்பாக நூற்றாண்டை கொண்டாடுகிறோம், நன்கொடை கொடுங்கள் என்றால் அதற்கும் ஆளில்லை. ஒவ்வொரு முறையும் நிகழ்வுகளை கடன் வாங்கி முடித்துவிட்டு நன்கொடை கொடுங்கள் என்றுக்கேட்டால் மரியாதைக்கு கூட யாரும் அதனை காதில் வாங்கிக்கொள்வதில்லை. நேற்றும் கூட நூறு குறும்படங்கள் திரையிடல் தொடக்கவிழாவில், அவ்வளவு தூரம் நன்கொடை கேட்டு பேசினேன், இயக்குனர் வசந்த் எஸ். சாய் அவர்களும் தமிழ் ஸ்டுடியோவின் பண தேவை குறித்து பேசினார். ஆனால் 500 ரூபாய் கூட நன்கொடை கிடைக்கவில்லை. தமிழ் சினிமா நூற்றாண்டு பற்றி முகநூலில் பதிவு செய்யுங்கள் என்றேன். அதையும் பெரும்பாலானோர் செய்யவில்லை. நிச்சயம் செய்வோம் என்று வாக்குறுதி வேறு அளித்தனர். ஆனால் இதுவரை அப்படியான பதிவுகளே இல்லை. இனி பதிவு செய்வார்கள் போல. உருப்படியாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாட நிறைய பணம் தேவை. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து அதனை பெற்றுவிட முடியாது. எனக்கு வெளிநாடு தொடர்புகளும் இல்லை. என்னிடமும் பணமில்லை. எனவே சிறிய அளவில், தமிழ் ஸ்டுடியோவால் முடிந்த அளவு தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாட திட்டமிட்டிருக்கிறோம். இனி யாரிடமும் நன்கொடை கேட்க வேண்டாம் என்று பலமுறை முடிவெடுத்துவிட்டு அதனை மாற்றிக்கொண்டிருக்கிறேன். காரணம் பணம் இன்றி ஒரு மக்கள் இயக்கம் இயங்க முடியாது. இப்போதும் அப்படிதான் நினைக்கிறேன், இனி யாரிடமும் நன்கொடை கேட்டு அவமானப்படக்கூடாது என்று. ஆனால் எதுவரை என்று பார்க்கலாம். நான்பலமுறை எழுதியிருக்கிறேன். என்னை எவ்வளவும் வேண்டுமானாலும் அவமானப்படுத்திக் கொள்ளுங்கள், வசைபாடி எழுதுங்கள். தமிழ் ஸ்டுடியோவோடு முரண்படுங்கள். ஆனால் அதன் செயல்பாடுகளுக்கு நன்கொடை கொடுத்துவிட்டு திட்டுங்கள் என்று பலமுறை எழுதியிருக்கிறேன் பேசியிருக்கிறேன். ஆனால் திட்டுகிறார்கள், மோசமாக வசைபாடுகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், ஆனால் நன்கொடை மட்டும் கொடுப்பதில்லை. இனி நன்கொடையே வேண்டாம் போங்கய்யா என்றுதான் ஒவ்வொரு முறையும் சொல்ல தோன்றுகிறது. ஆனால் அதே வீராப்போடு இருந்துவிடமுடிவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக