திங்கள், 26 செப்டம்பர், 2016

வேலூரில் 47 கொத்தடிமைகள் மீட்பு!


மின்னம்பலம்.காம்  ; வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த குழந்தைகள் உட்பட 47 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
வேலூர் அருகே கணியம்பாடி பகுதியில் அமைந்துள்ள செங்கல்சூளைகளில் பல தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்துக்கு கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாக தேசிய ஆதிவாசிகள் தோழமை கழகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது..
இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஆறு செங்கல்சூளைகளில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் கொத்தடிமைகளாக இருப்பது தெரியவந்தது. இதில் 12 ஆண்கள், 13 பெண்கள், 16 சிறுவர்கள், 6 சிறுமிகளும் அடங்குவர்.

இதுகுறித்து தேசிய ஆதிவாசிகள் தோழமை கழகத்தினர் வேலூர் உதவி கலெக்டர் அஜய் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உதவி கலெக்டர் அஜய் சீனிவாசன், வேலூர் தாசில்தார் பழனி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், தேசிய ஆதிவாசிகள் தோழமை கழகத்தினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் குடும்ப சூல்நிலைக்காக முன்கூட்டியே வாங்கிய பணத்துக்காக கொத்தடிமைகளாக வாழ்ந்து வந்ததாகவும் அதோடு மட்டுமின்றி வேலை பார்த்தால் குறைந்த ஊதியம் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம், வேலூர் மாவட்டம் வரகூர், ஒடுகத்தூர், அணைக்கட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.1௦௦௦ பணமும் வீட்டு உபயோகப்பொருட்களும் கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து செங்கல்சூளை அதிகாரிகள் நீலகண்டன், கிருஷ்ணன், குமார், பழனி, சாமிநாதன், அன்பு,தினகரன், வேலு ஆகிய எட்டு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் 4.5 கோடிக்கு அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நவீன அடிமைகளாக சிக்கியுள்ளனர். இதில் இந்தியாவில் சுமார் 18 மில்லியன் கொத்தடிமைகள் உள்ளனர். கொத்தடிமைகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக