ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

ஏர்செல் மாக்சிஸ்...மலேசியா தொழிலதிபர் அனந்தகிருஷ்ணனனுக்கு பிடிவாரண்ட்.. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!


minnambalam.com :மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பொறுப்பு வகித்தபோது, பதவியை முறைகேடாக பயன்படுத்தி ஏர்செல் நிறுவன பங்குகளை அதன் உரிமையாளர் சிவசங்கரனிடம் இருந்து மிரட்டி மலேசிய தொழிலதிபரான மேக்சிஸ் நிறுவன உரிமையாளர் அனந்தகிருஷ்ணனுக்கு விற்க செய்தனர் என்பது குற்றச்சாட்டு. ‘சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால், தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மாக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார், மிரட்டினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை மாக்சிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்றுவிட்டார் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
ஏர்செல் நிர்வாகம் கை மாறிய உடனேயே 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் சன் டிவியின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ.800 கோடியை முதலீடு செய்தது ஆனந்தகிருஷ்ணனின் மாக்சிஸ் நிறுவனம். இதுதான் சர்ச்சையானது. இந்த விஷயத்தில் பண விவகாரம் தொடர்பாக அமலாக்கப்பிரிவும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக தயாநிதி மாறன் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் கோ-அக்யூஸ்டாக சேர்க்கப்பட்டுள்ளார் கலாநிதி மாறன். இதுகுறித்து அமலாக்கப் பிரிவு தரப்பில் கூறுகையில், தயாநிதி மாறன், தனது சகோதரர் கலாநிதி மாறன் நிறுவனத்தில் நிதி முதலீடு செய்திருப்பது தெளிவாக உள்ளது. அதை அவர் மறைக்க முடியாது. அந்தப் பணம், மோசடி பணமாகும். இது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்கள். இதில், பெருமளவிலான அந்நிய செலாவணி மற்றும் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கும் 2ஜி வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கினை 2ஜி வழக்கோடு விசாரிக்கக்கூடாது என மாறன் சகோதரர்கள் சமீபத்தில் விடுத்திருந்த கோரிக்கை கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்துள்ளது. விசாரணையை விரைந்து முடிப்பதற்காகவே, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி விளக்கமளித்தார். இதுதவிர, இந்த வழக்கில் தொடர்புடைய மலேசிய தொழிலதிபரும், பிரபல தொலைக்காட்சி ஊடக அதிபருமான இலங்கைத் தமிழர் அனந்தகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விசாரணை தாமதமாகிறது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் சன் டிவி கலாநிதி மாறன், சன் டிவி இயக்குநர் காவேரி கலாநிதி மாறன் உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 18ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக