சனி, 10 செப்டம்பர், 2016

காவிரி .. உச்சநீதிமன்ற நீதிபகள் மீது வழக்கு?

மின்னம்பலம்.காம் : காவிரி நீர் விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீது 420பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்டியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார் ஒருவர். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி வீதம் கர்நாடகம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10,000 கன அடி நீரும், கபினிஅணியில் இருந்து 5,000 கன அடி நீரும் என்று காவிரியில் விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாண்டியாவைச் சேர்ந்த ராஜண்ணா என்பவர் மாண்டியா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தமிழகத்துக்குத் தண்ணீர் தர உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிருப்தி அடைந்தேன்.
காவிரி நதி நீர் விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட மற்றும் பொதுநலனும் உண்டு. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்த உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு என்னை மிகவும் துயரமடைய செய்துள்ளது. நதி நீர் பிரச்னைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. எனவே, உச்சநீதிமன்றம் சட்ட விரோதமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இது சட்டத்துக்கு புறம்பான உத்தரவு என நீதிபதிகளுக்கு தெரியும். எனவே, இது குற்றமாகும். மேலும், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் காவிரி பிரச்னையில் தலையிட்டது சட்ட விரோதம் ஆகும். இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் லலித் ஆகியோர் மீது நடவடிக்கை தேவை. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கூர், ஜெயலலிதா, சித்தராமய்யா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் ஆகியோர் மீது 420 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் ராஜண்ணா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக