சனி, 10 செப்டம்பர், 2016

எம்.எல்.ஏ - எம்.பி ஒரே நேரத்தில் தேர்தல்!

minnambalam.com நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு மக்களின் கருத்தை கேட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஆணையர் நஸீம் ஜைதி தேர்தல் நடைமுறைகளை பார்வையிடுவதற்காக சர்வதேச பார்வையாளர்களில் ஒருவராக ஆஸ்திரேலியா சென்றார். மெல்போனில் நடந்த சர்வதேச தேர்தர் பார்வையாளர்கள் மாநாட்டில் பேசிய இந்திய தேர்தல் ஆணையர், “அரசு மற்றும் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றிய சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு நாடாளுமன்றச் செயலகத்துக்கு பரிந்துரை செய்திருந்தது. இது பற்றி கருத்து தெரிவிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டிருந்தது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்” என்று பேசினார் அவர்.

இந்நிலையில் தற்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு மக்களின் கருத்தை கேட்டுள்ளது. தற்போதுநாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் வெவ்வெறு கால கட்டத்தில் நடக்கின்றன. மாநில சட்டமன்றத் தேர்தல் பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் ஐந்துஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்த தேர்தல்களை ஒரே நேரத்தில் சேர்ந்து நடத்தினால், அரசுக்கு ஆகும் செலவினம் குறையும் என கருதப்படுகிறது. இதனை தேர்தல் ஆணையம் ஆமோதித்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக மக்களின் கருத்துகளை பிரதமர் மோடி கேட்டுள்ளார். மத்திய அரசின் இணைய தளமான ‘மை.கவ்’ இணைய தளத்தில் இது தொடர்பான விவாதம், ஆலோசனை புதன்கிழமை அன்றே தொடங்கி விட்டது. மை.கவ் இணைய தளம் மக்களின் கருத்துக்களை அறியும் அரசு இணைய தளம் ஆகும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை சேர்ந்து நடத்துவதால் எந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்த வேண்டியிருக்கும்? இரு தேர்தல்களையும் சேர்ந்தே நடத்துவதால் ஏற்படும் சாதகம் மற்றும் எதிர் விளைவுகள் என்ன? ஆளும்கட்சி அல்லது கூட்டணி கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டால் என்ன ஏற்படும்? போன்ற கேள்விகளை அரசு கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக