செவ்வாய், 13 செப்டம்பர், 2016

கர்நாடக வன்முறை: விரைந்தது ராணுவம்!


மின்னம்பலம்.காம் :  நேற்று மதியம் தீர்ப்பு வந்த அடுத்த அரைமணி நேரத்துக்குள் 30 பேருந்துகளை மைசூர், மாண்டியாவில் நாசமாக்கி விட்டார்கள். தலைநகர் பெங்களூருவை ஓரளவு போலீஸார் கட்டுக்குள் வைத்திருந்த காரணத்தால் முதலில் வன்முறை பெங்களூரு நகரத்துக்குள் இல்லை என்கிறார்கள் அங்கு வசிக்கும் தமிழர்கள். ஆனால், தீர்ப்புக்குப் பிந்தைய முதல் ஐந்து மணி நேரத்தில் மொத்த கர்நாடகத்தையும் சுடுகாடாக்கி விட்டார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் வன்முறை கும்பல் வாகனங்களுக்குத் தீ வைப்பதையே பார்க்க முடிந்தது. கர்நாடகமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வன்முறைக் கட்டுக்கு அடங்காமல் போக, முதல்வர் சித்தராமய்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க கர்நாடகத்துக்கு ராணுவம் விரைந்துள்ளது.
கண்ணில் காணும் தமிழகப் பேருந்துகள், லாரிகளில் இதுவரை கிட்டத்தட்ட 90 வாகனங்களை எரித்து சாம்பலாக்கி விட்டார்கள். நாற்பதுக்கும் மேற்பட்ட லாரிகளைத் தீயிட்டு கொளுத்தி விட்டார்கள். தமிழர்களின் கடைகளும் வணிக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
தினமும் 15,000 கன அடிவீதம் 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு தண்ணீர் விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பை அடுத்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டது கர்நாடக அரசு. அதற்கு எதிராக வன்முறைகள் நடந்து ஓரளவுக்குச் சீரடைந்த நிலையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது 17ஆம் தேதிவரை 15,000 கன அடி நீரையும், 18ஆம் தேதியில் இருந்து 20ஆம் தேதிவரை 12,000 கன அடி நீரையும் திறந்துவிடச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகளை உசுப்பிவிட, தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் பெங்களூரு, மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பல இடங்களில் வன்முறை வெடித்தது. ஏராளமான தமிழக லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கே.பி.என். நிறுவனத்துக்குச் சொந்தமான 50 பேருந்துகளுக்கு வன்முறை கும்பல் தீ வைத்துள்ளது.

பெங்களூரு - மைசூர் செல்லும் சாலையில் கே.பி.என். பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் பேருந்துகளை நிறுத்தி அங்கிருந்து தங்கள் சேவையை நடத்துவது வழக்கம். நேற்று வன்முறை வெடித்த நிலையில் பேருந்துகள் இயக்கப்படாததால் அனைத்து பேருந்துகளையும் பத்திரமாகக் கொண்டு வந்து பணிமனையில் நிறுத்தி வைத்திருந்தது, கே.பி.என். நிறுவனம். நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த பணிமனைக்குள் புகுந்த கன்னட வெறியர்கள், பேருந்துகளுக்கு தீ வைத்ததில் சொகுசு பேருந்துகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின. மொத்தமாக சுமார் 60 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 50 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. 20 பேருந்துகளை மீட்கும் முயற்சி பலனளிக்குமா என்று தெரியவில்லை. இதை தவிர கே.ஆர்.எஸ். டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சில பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. மைசூர் சாலையில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் சுமார் 30 லாரி நிறுத்தப்பட்டிருந்தன. வன்முறை கும்பல் நிறுத்தப்பட்டிருந்த தமிழக பதிவெண் கொண்ட சில லாரிகளுக்கு தீ வைக்க, அந்த தீ பரவியதில் 27 லாரிகள் தீ பிடித்து எரிந்தன. பெங்களூரு நகரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே வன்முறைகள் பரவி வருவதால் தமிழர்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து பெங்களூருவிலும் மைசூரிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு இன்னும் சில நாட்களுக்குத் தொடரும்.
இந்நிலையில் மாநிலத்துக்குக் கூடுதல் படையை அனுப்ப மத்திய அரசுக்கு சித்தராமய்யா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்குக் கடிதம் எழுதி உள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, 1000 வீரர்களைக் கொண்ட படைகளை கர்நாடகாவுக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் நேற்று இரவே கர்நாடகம் வந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார்கள். இதற்கிடையே வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், காவல்துறைக்கு சொந்தமான சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களே உண்மையானவை என்று கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக