வியாழன், 29 செப்டம்பர், 2016

தமிழ்நாட்டில் பிச்சையெடுக்கும் ஆந்திர விவசாயிகள் ! புலுடா நாயுடுவின் பொருளாதார வளர்ச்சி பாரீர்



மின்னம்பலம்.காம் : தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாதங்கள் பிழைப்புக்காக தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஆந்திரக் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோன்றுவரும் மக்கள் வாழும் இடங்களைப் பார்த்தால்… நெஞ்சம் பதறும். ஆம்… அவர்களுடைய கூடாரங்கள் ஒரு பழைய புடவையாலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்டுகளாலோ மட்டுமே மூடப்பட்டிருக்கும். அவர்களுடைய சைக்கிள் ரிக்‌ஷாவில் இருக்கும் உலோக பெட்டியில், 19ஆம் நூற்றாண்டில் இந்துக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த, இப்போதும் இருக்கிற ஷீரடி சாய்பாபாவின் படங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வண்டியிலும் ஒரு சிறு பாபா கோயில் அமைக்கப்பட்டிருக்கும். தற்போது வண்டிகளுடன் குடும்பம் குடும்பமாக, தமிழக கடலோர மீன்பிடி கிராமமான பிச்சாவரத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் பாபாவின் புகழை நாடெங்கும் பரப்புவதற்காக மட்டும் பயணம் செய்யவில்லை. தங்கள் வயிறு நிறைவதற்காகவும்தான் அந்த பயணத்தை பாபாவின் பெயரால் நிகழ்த்துகிறார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் நெல்லூர் அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து வருடத்தில் இரண்டு மாதங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்.
இதுகுறித்து, அந்த குழுவில் இருந்த இளைஞர் தொகலா யேடுகொண்டலு கூறுகையில், “ஜனவரி மாதம் சங்கராந்தி அறுவடை திருவிழாவுக்குப் பிறகு இந்த வாகனங்களை எடுத்துக்கொண்டு எங்கள் கிராமத்தில் இருந்து கிளம்பிவிடுவோம். இதை எங்கள் குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக செய்து வருகின்றனர். முதலில் சென்னைக்குப் பயணம் செல்வோம். பின்னர் புதுச்சேரி மற்றும் சிதம்பரத்துக்குச் செல்வோம். ஒவ்வொரு இடத்திலும் சில நாட்கள் முகாம் அமைத்து தங்குவோம். ஒவ்வொரு காலையும் முகாமில் இருக்கும் ஆண்கள் அருகில் உள்ள கிராமத்துக்கு வண்டிகளை எடுத்துச் சென்று சாய்பாபாவின் பெயரில் பிச்சைக் கேட்போம். சில மாதங்கள் அரை வயிறாவது சாப்பிட போதுமான அளவு பணம் சேகரிப்போம்” என கூறினார்.
இதை அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். அரசாங்கம் அவர்களுக்கு உதவிகரம் நீட்ட தவறிவிட்டதாகவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் வயதான பெண் ஒருவர் கூறினார். இந்த நீண்ட பயணத்தை மேற்கொள்ள தூண்டியதற்கான காரணமும் அதுவே என தெரிவித்தனர். அவர்களுடைய பாரம்பரிய வாழ்வாதாரமான விவசாயம் பொய்த்துப் போனதாலும் அரசாங்கம் வேண்டிய உதவிகளை செய்யத் தவறியதாலும் மாநிலம் விட்டு மாநிலம் பிச்சை எடுக்கக் வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டோம் என்கிறார்கள் சோகமாக.
இப்படியான கதைகள் புதிதானது இல்லை. இந்தியா முழுவதும் பயணம் செய்தால், சென்னையில் பீகார் மக்களையும், தஞ்சாவூரில் மணிப்பூர் மக்களையும், ஆந்திராவில் ஒடிசா மக்களையும், ஒடிசாவில் தமிழர்களையும் காண முடியும். நாடு நகர்ந்து கொண்டேதான் இருக்கும். இடம்பெயர்வின் சுழற்சி வேலை கிடைப்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக