புதன், 21 செப்டம்பர், 2016

பட்டாக்கத்தி கொள்ளையருடன் போராடி இளம்பெண்ணை காப்பாற்றிய சேகர்

சேகர் மற்றும் மனைவி கலாவதி
tamilthehindu.com சேகர் மற்றும் மனைவி கலாவதி
டெல்லியில் நேற்று ஆள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் இளம் பெண் ஒருவர் சுமார் 30 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலையானபோது யாரும் உதவிக்கு வராதது போலவே டெல்லி சம்பவத்திலும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துவிட்டு சாதாரணமாக கலைந்து செல்கின்றனர்.
ஆனால், நேற்று முன் தினம் சென்னையில் இளம் பெண்ணை கொடூரமான முறையில் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேரை தன்னந்தனி ஆளாக போராடி காப்பாற்றியுள்ளார் சேகர்(42).
சென்னை துரைப்பாக்கம் அருகில் குமரன்குடில் பகுதியில் மளிகைக் கடை வைத்திருப்பவர் சேகர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு தனது கடையில் அமர்ந்திருந்தார். அப்போது சற்று தூரத்தில் இளம் பெண்ணின் அபயக்குரல் கேட்டது. அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தபோது சற்று தொலையில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்றுகொண்டிருந்தனர்.
அவரோ பையை விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவை ஓட்டியதால் கீழே விழுந்த அவர் நடுரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். ஆங்காங்கே பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் யாரும் உதவிக்கு வரவில்லை.
ஆனால், சேகர் ஓடோடிச் சென்று காயமடைந்திருந்த அந்தப் பெண்ணை தூக்கி மீட்டார். இதற்குள் அந்தப் பெண் மயக்கமடைந்துவிட்டார். ஆட்டோ வுக்குள் ஓட்டுநருடன் மொத்தம் 4 பேர் இருந்தனர். பின்னால் அமர்ந்தி ருந்தவர்கள் இருவரின் கையில் பெரிய பட்டாக் கத்திகள் இருந்தன. அதைக் காட்டி மிரட்டிக் கொண்டே அவர்கள் ஆட்டோவுடன் வேகமாக தப்பிச் செல்ல முயன்றனர்.
ஆனாலும் சேகர் வேகமாக ஓடி ஆட்டோவுக்குள் கையை விட்டு ஒருவரின் சட்டைக் காலரை பிடித்து சாலையில் தூக்கி வீசினார். அவரை மடக்கிப் பிடித்து தனது காலால் அழுத்திய நிலையில் ஆட்டோவிலிருந்து குதித்த இன்னொருவர் சேகரின் முதுகில் பட்டாக் கத்தியால் வெட்டினார். அப்போதும் விடாமல் திரும்பியவர் கத்தியை கையால் பிடித்து சமாளித்தார். அப்போது இன்னொருவர் சேகரின் கழுத்தை நோக்கி வேகமாக கத்தியை வீசினார். நொடிப் பொழுதில் சேகர் விலகிக்கொண்டபோதும் கத்தி பட்டு காது அறுந்தது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் 4 பேரும் ஆட் டோவில் ஏறி தப்பிவிட்டனர். சுமார் 10 நிமிடங்கள் நடந்த இந்தப் போராட் டத்தை அக்கம்பக்கத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துள்ளனர். பின்னர் படுகாய மடைந்த அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேகருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காது ஒட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் ‘தி இந்து’-வுக்காக சேகரைச் சந்தித்தோம். “எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமம். என் கண் முன்னே ஏதாவது அநியாயம் நடந்தால் என்னால் பார்த்துக்கிட்டிருக்க முடியாது. என்ன ஆனாலும் சரி என்னால் முடிந்த வரை தட்டிக் கேட்பேன். நேற்று முன்தினம் (திங்கள்) அதைத்தான் செய்தேன். அதே சமயம் இங்கே கூடி நின்று வேடிக்கைப் பார்த்தவங்களையும் நான் குறை சொல்ல மாட்டேன். எல்லோரும் என்னைப் போலவே இருக்கணும்னு எதிர்பார்க்கிறது முட்டாள் தனம். அவர்கள் உயிர் அவர்களுக்கு முக்கியம் இல்லையா. அவர்கள் சார் பாகத்தான் நான் போராடு வதாக நினைத்துக்கொள் கிறேன்.
அதேசமயம் இது ஒன்றும் எனக்கு புதிது அல்ல. ஒரு வருடம் முன்பு இரவு 11.30 மணிக்கு பக்கத்தில் இருக்கும் எம்.சி.என். நகரிலிருந்து எனக்கு போன் வந்தது. அங்கே பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு எங்கள் பகுதியை நோக்கி ஒருவர் ஓடி வந்ததாக தகவல் சொன்னார்கள். நான் உடனே சென்று தெருவில் நின்று நோட்டமிட்டேன். தூரத்தில் வேகமாக ஒருவர் சட்டையை மாற்றிக்கொண்டு பின்பு நிதான மாக நடந்து வந்தார். மெதுவாகப் பதுங்கி அவர் பின்னால் சென்று அப்படியே மடக்கிப் பிடித்தேன்.
உடனே அவர் சிறு கத்தியால் என்னைக் குத்தினார். ஆனாலும் விடாமல் அவரை பிடித்துவிட்டேன். அதற்குள் பொதுமக்கள் உதவிக்கு வந்து விட்டார்கள். தங்கச் சங்கிலி மீட்கப் பட்டது. அதற்கு முன்பாக எங்கள் பகுதியில் பூட்டப்பட்ட ஒரு வீட்டுக்கு வெளியே ஒருவர் சந்தேகமான முறையில் நின்றுகொண்டிருந்தார். உன்னிப்பாக கேட்டபோது அந்த வீட்டுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. உடனே நான் அந்த வீட்டு உரிமையாளரிடம் போனில் தகவல் கொடுத்துவிட்டு பதுங்கிச் சென்று வெளியே நின்றிருந்தவரை மடக்கிப் பிடித்து சத்தம் போட்டேன். மக்களும் வந்துவிட்டார்கள். மொத்தம் 4 பேரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தோம். அவர்களில் வி.ஐ.பி. ஒருவரின் மகனும் அடக்கம்” என்றார்.
அவரிடம், “இப்படி செய்யும்போது உங்களுக்கு பயமாக இல்லையா? நேற்றைய சம்பவத்தில் உங்கள் உயிரே பறிபோயிருக்கலாம் இல்லையா?” என்று கேட்டோம். “நான் காந்தி ஜெயந்தி அன்னைக்கு பிறந்தவன். காமராஜரின் நினைவுநாள் அது. நான் பிறந்து 5 வயதிலேயே என் அப்பா தவறிட்டார். என்னுடன் பிறந்தவர்கள் 5 பெண்கள், ஒரு பையன். நான்தான் வீட்டில் மூத்த மகன். என்னால் பள்ளிக்குச் சென்று படிக்க முடியவில்லை. சிறுவனாக இருந்தபோதே கிடைத்த வேலைக்குச் சென்று எனது குடும்பத்தை பராமரித் தேன். நானாகவே எழுத்துக் கூட்டி படிக்கக் கற்றுக் கொண்டேன். ஓய்வு நேரத்தில் கிடைக்கும் செய் தித்தாள்களை புத்தகங் களை எல்லாம் படிப்பேன். பகவத் கீதை, பைபிள் மற்றும் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எல்லாம் படித்தேன். அவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்டது எவை என்றால் - உண்மையாக இருப்பது; நேர்மையாக இருப்பது; தவறுகளுக்கு எதிராக போராடுவது. இதைத்தான் நான் செய்து வருகிறேன்.
சென்னைக்கு 20 வருடங்களுக்கு முன்பு வந்தேன். திருவான்மியூரில் சிமென்ட் கிடங்கில் மூட்டை தூக்கிப் பிழைத்தேன். அதில் ஓரளவு திருப்தியான வருமானம் கிடைத்தது. எனது 4 தங்கைகளுக்கும் தம்பிக்கும் திருமணம் செய்து வைத்தேன். ஒரு தங்கை உயிரோடு இல்லை. மற்ற அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். நானும் திருமணம் செய்துகொண்டு இந்தப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடையை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறேன். 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். ஆண்டவன் கருணையால் நிம்மதியாக இருக்கிறது வாழ்க்கை” என்கிறார்.
இவரது மனைவி கலாவதி, கண் கலங் கிய நிலையில் நம்மை கையெடுத்து கும்பிட்டு, “இவரு போராட்டம் போராட் டம்ன்னு சொல்றாருங்க. எனக்கு பயமாக இருக்குது. எங்களோட பாது காப்புக்கு ஏற்பாடு செய்யுங்க. எங்க ளுக்கும் ரெண்டு குழந்தை இருக்கு இல்லையா” என்கிறார். அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. தமிழக அரசு சேகரை கவுரவிப்பதுடன் அவருக்கு பாதுகாப்பு அளிக்கவும் முன் வர வேண்டும். அப்போதுதான் பொது இடங்களில் இளம் பெண்கள் தாக்கப்படுவது போன்ற சம்பவங்களில் உதவிக்கு வருவதற்கு மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.

தங்கை இறந்த சோகத்திலும் சேவை

சேகரின் ஒரு தங்கை இறந்துவிட்டார் என்று கூறியிருந்தார் இல்லையா? அது பெரும் சோகச் சம்பவம். அவரது பெயர் தனலட்சுமி. அவரை மும்பையில் திருமணம் செய்து கொடுத்திருந்தார். 1992-ம் ஆண்டு மும்பைக் கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தில் இவரது தங்கையின் குடும்பத்தில் ஒருவர் விடாமல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். 7 மாதம் கர்ப்பமாக இருந்த இவரது தங்கையை மத வெறியர்கள் நடு ரோட்டில் நிற்க வைத்து பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக்கொன்றார்கள்.
பதறி அடித்துக்கொண்டு மும்பைக்கு ஓடிய சேகருக்கு தனது தங்கையின் எரிந்த சடலம்தான் கிடைத்தது. அப்போதும் கலவரம் ஓயவில்லை. ஆனாலும், மனதை திடமாக்கிக்கொண்டு கலவரப் பகுதியில் 10 நாட்கள் சமூக சேவை செய்தார் சேகர். காயம்பட்ட சுமார் 100 பேரை மருத்துவமனையில் சேர்த்தார். ஏராளமான சிறுவர்களை மீட்டு காவல் நிலையங்களில் ஒப்படைத்தார்.
இது தவிர தனி நபராக நுகர்வோர் விழிப்புணர்வு விஷயங்களிலும் சட்டப் போராட்டங்களை நடத்துகிறார் சேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆறே நாட்களில் சிகப்பழகு பெறுவீர்கள்’ என்று விளம்பரம் செய்த ஒரு கீரீம் நிறுவனத்துக்கு எதிராக ஒரு பெண்ணை வைத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிரபல டிவி தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். பொதுவெளியில் எது நடந்தாலும் சலனப்படாத பெருநகர சுயநல சமூகம் சேகரைப் பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக