புதன், 21 செப்டம்பர், 2016

உள்துறை நாடாளுமன்ற குழுத் தலைவராக ப.சிதம்பரம் நியமனம்!


மின்னம்பலம்.com : மத்திய அரசின் அமைச்சக செயல்பாடுகளை கண்காணிக்கவும், நெறிப்படுத்தவும், நாடாளுமன்றத்தில் பல்வேறு நிலைக்குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்களுக்கான தலைவர்கள் நாடாளுமன்றத் தலைவரால் நியமிக்கப்படுவர். சில குழுக்களில் இடம்பெறுபவர்கள், நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளது பலத்தினடிப்படையிலான விகிதாச்சாரப்படியும், இன்னும் சில குழுக்களில் இடம்பெறுபவர் அவையின் வாக்கெடுப்பின் அடிப்படையிலும் நியமிக்கப்படுவர்.
பொருளாதார நிலைக்குழு, துறைசார் நிலைக்குழு, இதர நிலைக்குழுக்கள் என மூன்றுவகையில் உள்ளது. இவற்றில் மதிப்பீட்டுக் குழு, பொதுப்பணி பொறுப்பேற்புக் குழு (Public Undertaking Committee), பொது கணக்குக் குழு ஆகியவை பொருளாதார குழுக்களாகவும், துறைசார் நிலைக்குழு என்பது 24 அமைச்சரகங்களுக்கும் துறைகள் வாரியான நிலைக்குழுக்கள் இருக்கும். அதேபோல், இதர நிலைக்குழுக்கள் உள்ளன.

இந்நிலையில், உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன்பு இந்தப் பதவியை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் பி.பட்டாச்சார்யா வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பணியாளர், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற குழுத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரத் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுத் தலைவராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மக்களவையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீரப்ப மொய்லி நிதித்துறை நிலைக்குழுத் தலைவராகவும் சசிதரூர் வெளியுறவுத்துறை நிலைக்குழுத் தலைவராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக