திங்கள், 19 செப்டம்பர், 2016

சுவாதி கொலையில் இந்துத்துவக் கையாளாக ஜெ. அரசு செயல்படுகிறதா?

thetimestamil.com :சி. மதிவாணன்: சி. மதிவாணன்ராம்குமார் மரணம் தற்கொலை என்று சொல்லப்படுகிறது. மின்சாரக் கம்பியைப் பிடித்து தன்னைத் தானே கொன்றுகொண்டுள்ளார் என்பது செய்தி. அதேசமயம், “ராம்குமார் சாப்பிட்ட உணவால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆகவே, சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுவதாக ராம்குமார் வக்கீல் கூறியுள்ளார்“ என்று தினத்தந்தியின் வலைமனை செய்தி சொல்கிறது.
அவரின் இடது கன்னத்திலும் மார்பிலும் மின்சாரம் பாய்ந்த காயங்கள் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவாதி கொலையின் பின்னுள்ள, இதற்கு முந்தைய விளக்கப்படாத மர்மங்களையும், கைது செய்யப்பட்டபோதே ராம்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டதாக வெளிவந்த செய்திகளையும் சேர்த்துப் பார்க்கும்போது சந்தேகம் வலுக்கிறது.
ஒரு பெண்ணின் கொலைக்கான குற்றவாளி மிக விரைவில் கைது செய்யப்பட்டது சுவாதி மரணத்தில்தான். அந்தக் கொலையில் ராம்குமார் நேரடியாக தொடர்புகொண்டவர் என்பதை இனிதான் காவல்துறையினர் நிருபிக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், கொல்லப்பட்டவர் பிராமணப் பெண் என்பதால், RSS வெறியர்கள், அதுவும் பிரபல நபர்கள், பிலால் என்ற முஸ்லீம் நபர் ஒருவரைக் குற்றம் சாட்டினர். ஆனால், காவல்துறை அந்த நபர் குற்றமற்றவர் என்பதாக கையாண்டு, அவரை விசாரணைக்குத் துணையாகக் கொண்டது. ஆனால், அந்த RSS வெறியர்கள் மீது, குறைந்த பட்சம், தவறான வழியில் விசாரணையை வழிநடத்துவது, விசாரணைக்கு ஊறுவிளைவிப்பது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, மத துவேஷத்தைத் தூண்டுவது போன்ற சட்டப் பிரிவுகளில் வழக்கேதும் பதிவு செய்யப்படவில்லை.
அதன்பின், ராஜ்குமாருக்கு ஆதரவாக ஒரு RSS வக்கீல் தானே முன்வந்து ஆஜரானார். பின்னர் அவர் ஒதுங்கிக்கொண்டார். இதற்கிடையில் மற்றொரு RSS நபர் உண்மையான குற்றவாளியை மறைத்து வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் வெளியானது. ஆனால், அச்சு- காட்சி ஊடகங்கள் அந்த செய்தியை விசாரணைக்கு உட்படுத்த முயற்சி செய்யவே இல்லை.
என்னைப் போன்றவர்கள் ஒரு பெண் கொலைக்கு நீதி வேண்டும், காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினோம். ஊகங்கள், சந்தேகங்கள் என்று குழப்ப விரும்பவில்லை. ஆனால், இப்போது, சாட்சியங்களைக் கொலை செய்யும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
அதுவும், பிராமணப் பெண்ணின் கொலையில் “மனு நீதி“ பெண்ணுக்கு விதித்தவற்றை சுவாதி மீறினார் என்பதால், அதனால் வெறுப்படைந்த மனுநீதிக் காவலர்கள் அவரைக் கொலை செய்தனர், இராம்குமார் அல்ல என்ற வாதம் இன்று முக்கியத்துவம் உள்ளதாகிறது.
காவல்துறை, அப்படியெல்லாம் செய்வார்களா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், நான் அதுபோன்ற வழக்கைச் சந்தித்தவன். கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள்….
தலித் சிறுமியை மதுரை மாவட்ட திமுக பிரமுகர் அயூப்கான் நரபலி கொடுத்தார். எமது CPI ML கட்சி அதனை அம்பலப்படுத்தியது. அப்போது திமுக ஆட்சி. நாங்கள் மதுரை DGP வரை பிரச்சனையைக் கொண்டு சென்றோம். யார் குற்றவாளி என்பதை எடுத்துச் சொன்னோம். காவல்துறை கண்டுகொள்ளவில்லை. ஆய்வறிக்கை, போராட்டம் எல்லாம் செய்து பார்த்தோம். பின்னர், தேர்தல் அறிவிக்கப்பட்டு, கவர்னர் ஆட்சியில் கிரைம் பிரேன்ஞ் விசாரணைக்கு வழக்கு மாறியது. திமுகவின் அயூப்கான் கைது செய்யப்பட்டார். இருந்தபோதும் அவரை இயக்கிய அழகிரி வழக்கில் சேர்க்கப்படவில்லை. அழகிரியின் பரம எதிரி “அம்மா’’ ஜெயலலிதா ஜெயித்து வந்த பின்னர் அழகிரிக்குக் குற்றத்தில் பங்கிருக்கிறது என்ற குற்றச்சாட்டை “தமிழக காவல் தெய்வத்தின்“ கீழிருக்கும் காவல்துறை கண்டுகொள்ளவேயில்லை.
நிற்க, இந்த பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட விஷயம் இதுதான். வழக்கின் துவக்க கட்டத்திலேயே நரபலியில் அயூப் கானின் கையாளாக இருந்த இரண்டு நபர்கள் காவல்துறையின் பிடியில் இருந்தபோது இறந்து போயினர். ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து மருத்துவமனையில் மரணம். அது கொலை என்று எமது கட்சி சொன்னது. மற்றவர் வயதானதால் மரணம். இந்த மரணங்களால் பயனடைந்தது இப்போது குற்றவாளியாக இருக்கும் திமுக பிரமுகர் அயூப்கான்தான். அவர் குற்றமற்றவர் ஆக தப்பிப்பதற்கான வேலையை காவல்துறை பார்த்தது. காவல்துறை நினைத்தால் சாட்சியங்களை அழிக்க முடியும் என்பதை விளக்கவே பழைய கதையைச் சொன்னேன்.
இப்போது ராம்குமாரை அழித்து சுவாதி சார்ந்த இந்து மதம் என்று சொல்லப்படும் ஒன்றின் பெருமையைக் காப்பதற்கு, காவியின் கூட்டாளியான ஜெயலலிதாவின் காவல்துறை துணை போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, அறியப்பட்ட சிவில் உரிமை செயல்பாட்டாளர்கள், ஓய்வுபெற்ற நேர்மையான நீதிபதிகள் உள்ளிட்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும், அது சுவாதி கொலை பற்றிய அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கோருகிறேன்.
சி. மதிவாணன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக