வெள்ளி, 9 செப்டம்பர், 2016

பழங்குடிகளைக் கொல்லும் ஜார்கண்ட் போலீசு. வினவு.

கிராம மக்கள் இலவசமாக விரும்புகிறார்கள் என்று வக்கிரம் பேசும் ஆபிசர், அதே இன்லேண்ட் அனல் மின் நிலையம் அக்கிராம மக்களிடம் கொள்ளையடித்த சமூக வளம் குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் - படம் நன்றி: http://scroll.in
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் – படம் நன்றி: scroll.in
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தின் கோலா கிராமத்தில் இன்லேண்ட் என்ற தனியார் அனல் மின் நிலையம் இருக்கிறது. இங்கே  ஆகஸ்டு 29, 2016 அன்று போராட்டம் நடத்திய பழங்குடி மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில் அக்கிராமத்தை சேர்ந்த தஷ்ரந்த் நாயக், ராம்லால் மகடோ இருவரும் கொல்லப்பட்டனர்.
மேற்கண்ட அனல் மின் நிலையம் அப்பகுதியின்  நீர் வளத்தை அதீதமாக உறிஞ்சி வருகிறது. இதனால் மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீரில்லாமல் பயிர்கள் சேதமடைந்துவிட்டன. மேலும் அனல் மின் நிலயத்திலிருந்து வெளிவரும் அதிக அளவினான புகை மற்றும் சுற்று சூழல் மாசுபாடு காரணமாக பயிர்கள் நாசமாவதோடு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து பாம்னி என்ற கிராமத்தை விவசாயி சேர்ந்த நகுல் மகடோ கூறுகையில், “அனல் மின் நிலையத்தினர் 10 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் கோம்தி மற்றும் பர்கா ஆறுகளிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு பதிலாக எங்களின் வாழ்வாதரமான செரங்கடா ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கிறார்கள். அனல்மின் நிலையத்தின் மாசுகளும் புகையும் எங்கள் பயிரை ஏற்கனவே அழித்துவிட்டது. இனி எங்கள் தண்ணீரையும் விரைவாக அழித்துவிடுவார்கள்” என்று குற்றஞ் சாட்டுகிறார்.
டோன்குட்டு கிராம விவசாயி சுரேஷ் குமார் படேல் கூறுகையில் “நிறுவனம் எங்கள் நிலத்தை 1 முதல் 1.5 லட்சத்திற்கு கையகப்படுத்தியிருக்கிறது. ஆனால் எங்களுக்கு கொளரவமான வேலை தரப்படவில்லை.” என்கிறார். ”ஏதேனும் சில விவசாயிகள் அங்கு வேலைக்கு சென்றால் கூட நாளைக்கு ரூ.150க்கு மேல் சம்பளம் வழங்குவதில்லை” என்கிறார் லகேஷ்குமார் எனும் விவசாயி.
அனல் மின் நிலையம் தண்ணீர் வளத்தை சூறையாடுவதையும், அனல் மின் நிலையத்தினால் ஏற்படும் அதீத தூசு மற்றும் சுற்றுசூழல் மாசுபாடுகளையும், நிறுவனத்தின் லாரிகளினால் சாலைகள் சிதைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும்  மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் கிராம மக்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தை ஆகஸ்டு 29-அன்று சம்பந்தப்பட்ட அனல்மின்நிலையத்தில் வைத்து நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் குறிப்பிட்டதேதியில் கிராம மக்கள் அங்கு கூடியுள்ளனர். ஆனால் அரசுத் தரப்பிலிருந்தும், நிறுவனத் தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தைக்கு யாரும் வரவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“நாங்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிறுவனத்திற்கு சென்றிருந்தோம். கலெக்டர் வரவில்லை  மாறாக போலீசார் லத்தியால தாக்க தொடங்கினார்கள். பின்னர் எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்” என்கிறார் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு விவசாயி.
“தனியார் அனல்மின் நிலையம் சரகண்டா ஆறிலிருந்து தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தும் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மோட்டார்களையும் ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஜெனரேட்டர்களையும் கிராம மக்கள் தீவைத்திருக்கிறார்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதனால் துப்பாக்கி சூடு நடத்தினோம்.” என்கிறார் மாவட்ட கண்காணிப்பாளர் தமிழ்வாணன். மேலும் கூறுகையில் “கிராம மக்கள் அனைத்தையும் இலவசமாகவே பெற விரும்புகிறார்கள். இந்நிறுவனம் அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டிருக்கிறது என்பதாலயே மின்சார வசதி, 25,000 சம்பளத்திற்கு வேலை, அடிபம்புகள் எல்லாம் வழங்கவேண்டியது அவர்கள் கடமையல்ல.” என்கிறார்.
இன்லேண்ட் கம்பெனியை கடமை உணர்வோடு பாதுகாக்கும் போலிசு கம்பெனி
இன்லேண்ட் கம்பெனியை கடமை உணர்வோடு பாதுகாக்கும் போலிசு கம்பெனி. படம் நன்றி: scroll.in
சரி தமிழ்வாணனின் கடமை உணர்ச்சியை கொஞ்சம் அறுத்துப் பார்ப்போம். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தொழிற்சாலையின் எந்திரங்களை மக்கள் உடைத்து விட்டார்கள் என்று இரு உயிரைக் கொன்றிருக்கிறார் இந்த ‘தமிழ்’ வாணன். அதே போன்று அக்கிராம மக்களின் நிலங்கள், நீர், சுற்றுச் சூழல் கேடுகளை மதிப்பிட்டால் எத்தனை கோடி வரும்? அந்த கோடிக்கணக்கான ரூபாய் செல்வத்தை நாசமாக்கிய இன்லேண்ட் அனல் மின் நிறுவனத்தை இவர்கள் ஏன் சுட்டுக் கொல்லவில்லை? கிராம மக்கள் இலவசமாக விரும்புகிறார்கள் என்று வக்கிரம் பேசும் ஆபிசர், அதே இன்லேண்ட் அனல் மின் நிலையம் அக்கிராம மக்களிடம் கொள்ளையடித்த சமூக வளம் குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
மக்களின் வாழ்வாதாரமான நிலைத்தை பறித்து விட்டு, இருக்கும் சொற்ப நிலத்திலும் விவசாயம் செய்ய முடியாமல் தண்ணீரையும் பறித்துவிட்டு போராடும் மக்களை சுட்டு கொலை செய்துவிட்டு அவர்கள் இலவசத்தை விரும்புகிறார்கள் என்று குற்ற உணர்ச்சி சிறிதுமின்றி பேசுகிறார் இந்த போலீசு ரவுடி. தமிழன் நாடாண்டால் தேனும் பாலும் ஓடும் என்று சீமான் பேசுவதற்கு கைதட்டும் தம்பிகள் இங்கே தமிழ்வாணனின் கொலைக்கு என்ன சொல்வார்கள்?
நிலங்களை கொடுக்கமாட்டோம் என மக்கள் போராடும் போது அவர்களை வளர்ச்சிக்கு எதிரானர்வர்கள் என முத்திரை குத்துவது தனியார்மய ஆதரவாளர்கள் முதல் நாட்டின் பிரதமர் வரை அனைவருக்கும் வழக்கம். போஸ்கோ போராட்டம், தண்டகாரண்யா பழங்குடிகள் போராட்டம் அனைத்தையும் இவர்கள் இப்படித்தான் கொச்சைப்படுத்துகிறார்கள். ஆனால் போராடாமல் நிலத்தை வாரி வழங்கிய விவசாயிகளுக்கு தனியார்மயம் அளித்த வளர்ச்சி என்ன என்பதை இத்துப்பாக்கி சூடு உணர்த்துகிறது.
போலீசும், அரசு அதிகாரிகளும் நேரடியாக முதலாளிகளின் அடியாட்களா இருப்பதை உணர்த்துகிறது இந்த துப்பாக்கிச் சூடு. நாம் ஏன் கொல்லப்படவேண்டும்.  கொல்லும் இந்த அரசமைப்பின் அதிகாரத்தை பிடுங்குவோம். அப்போது ஓங்கிய கைளும், தூக்கிய கால்களும் துவண்டு விழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக