செவ்வாய், 27 செப்டம்பர், 2016

உ.பி. தேர்தல்: காங்கிரஸ் தனித்துப் போட்டி-ராகுல் அறிவிப்பு!


மின்னம்பலம்,காம்  : அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவிருக்கும் உத்திரப்பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துபோட்டியிடும் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். உ.பி. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. கிஷான் யாத்ராவைத் தொடங்கியுள்ள ராகுல்காந்தி தன் பிரச்சாரங்களில் பாஜகவைக் கடுமையாகத் தாக்கி பேசிய போதிலும் உ.பி. ஆளும்கட்சியான சமாஜ்வாதியையோ, பகுஜன் சமாஜ் கட்சியையோ பெரிதாக விமர்சிக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி ஒருவேளை இக்கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சு அடிபட்டது.
இதை உறுதி செய்வது போல பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் ‘உ.பி.யில் மெகா கூட்டணி அமைய முயற்சிப்பேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில்தான் தனித்துப் போட்டியிடப் போவதாக ராகுல் அறிவித்துள்ளார்.
சாதிகளை மையமாக வைத்து கட்டமைக்கப்பட்ட பல பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன், அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியை மீண்டும் அதன் நிலைக்கே திரும்பக் கொண்டு செல்ல ராகுல் காந்தி 2500 கிமீ ‘கிஷான் யாத்ரா’ (விவசாயிகள் யாத்திரை) மேற்கொண்டிருக்கிறார். பிற கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொள்ள எந்த வாய்ப்பும் இல்லை என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
“காங்கிரஸ் தனித்து நின்று, தன்னுடைய தத்துவங்களையும் கொள்கைகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் 2017இல் நடைபெறும் உ.பி. சட்டமன்றத் தேர்தலைத் தனித்து சந்திக்க வேண்டும் என்றே நான் உணர்கிறேன்” என இந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். விவசாயிகளை விட வணிகர்களை அதிகம் ஊக்குவிக்கும் மத்திய அரசின் கொள்கைகளை, காஷ்மீரில் நடக்கும் வன்முறை குறித்து வாய் திறக்காத நரேந்திர மோடி என பல தரப்பட்ட பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி பேசினார். ஜம்மு காஷ்மீரின் ஆளுங்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜகவின் கூட்டணி ‘இந்தியாவுக்கு எதிரான குற்றம்’, அதுதான் பாகிஸ்தானுக்குக் காஷ்மீரில் இடம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பிரச்னையைத் தெளிவாக புரிந்துக்கொள்ளும் அமைச்சர்களின் பேச்சை மோடி கேட்பதில்லை எனவும் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். ராகுல் காந்தி, தற்போது உத்திரப்பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் பிரச்சாரம் நடத்திக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு சில மாத காலமே இருக்கும் நிலையில், உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மீண்டும் அதிகாரத்துக்காகப் போராட முயற்சிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக