செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சசிகலா புஷ்பா வெங்கடேச பண்ணையார் சமாதியில் அஞ்சலி

சசிகலா புஷ்பா இன்று தமிழகம் வரும்போது கைது செய்யப்படுவார் என்ற
செய்திகள் கசிந்தநிலையில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் ஆறுவார காலத்துக்கு தடைவிதித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டில் அவரது வீட்டில் வேலைசெய்த இரண்டு பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதற்காக சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன்மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா புஷ்பா தனது கணவருடன் சிங்கப்பூர் சென்றிருந்தபோது முன்ஜாமீன் வக்காலத்தில் எப்படி கையெழுத்திட்டார் என அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சசிகலா புஷ்பா உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, வக்காலத்தில் மோசடியாக கையெழுத்திட்டது குறித்து போலீஸார் சட்டப்படி வழக்கு பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின்படி, மதுரை உயர்நீதிமன்ற பதிவாளர் மதுரை கோ.புதூர் காவல் நிலையத்தில் மூன்று நாட்களுக்குமுன்னர் சசிகலா புஷ்பா, அவரது கணவன், மகன் பிரதீப் ராஜா மீது புகார் கொடுத்தனர். ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், நாடார் சாதி பிரமுகரும் போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவருமான வெங்கடேச பண்ணையாரின் நினைவு தினம் இன்று, திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் அனுசரிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க வந்த சசிகலா புஷ்பா கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியானநிலையில், ஏற்கனவே சசிகலா புஷ்பா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவரை கைது செய்ய 6 வார காலத்துக்கு தடைவிதித்தது உச்சநீதிமன்றம். மேலும் அக்டோபர் 3 மற்றும் 7ஆம் தேதிகளில் சம்மனின் பேரில் விசாரணைக்கு ஆஜராகும் சசிகலா புஷ்பாவுக்கு உரிய பாதுகாப்புத் தரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று மதுரை வந்து திருச்செந்தூர் சென்ற சசிகலா புஷ்பா தன் ஆதரவாளர்களுடன் வெங்கடேச பண்ணையாரின் சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக