வியாழன், 29 செப்டம்பர், 2016

ராணுவ தாக்குதலுக்கு அனைத்துக்கட்சி ஆதரவு!



minnambalam,com :பாகிஸ்தான் மீதான தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அவசரமாக ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் இந்திய பிரதமர் மோடி. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவும் மத்திய அரசிற்கு கிட்டியிருக்கிறது. காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த 18–ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு உள்ளது. அதேபோல், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நேற்று இரவு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டனர். இந்த தகவலை உயர் ராணுவ அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்தார். இதற்கிடையே எல்லையில் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லியில் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு விவகார கமிட்டி கூட்டத்தை இன்று கூட்டினார். இதில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கி சூடு மற்றும் எல்லைப் பகுதி நிலவரம் குறித்தும் தகுந்த பதிலடி கொடுப்பது பற்றியும் ஆலோ சிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இன்று மாலை 4 மணியளவில் அவசர கூட்டமாக இந்த ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் சார்பில் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில், பல்வேறு தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.அவர்களின் அனுபவங்கள், ஆலோசனைகளை மத்திய அரசு கேட்டதோடு, தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கமும் அளித்தது. அக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சியினருமே, இந்திய ராணுவத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு, இந்த அவசர சூழலில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முடிவுக்கும் துணை நிற்பதாக தெரிவித்தனர்.ராணுவத்தினரின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் , “பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சரியானதே. இந்தியாவின் பாதுகாப்பு விஷத்தில் அரசியலுக்கு இடமில்லை“ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்னாள் ராணுவ அதிகாரிகள், பாதுகாப்புத் துறையினர் இந்தியாவின் நடவடிக்கையை ஆதரித்ததோடு ‘ இந்த நடவடிக்கையே மிகவும் தாமதமானது‘ என்று குறிப்பிட்டுள்ளனர். மோடியின் தலைமையில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசிற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக