சனி, 3 செப்டம்பர், 2016

தமிழர்களிடம் மோதாதே' - திமுக போராட்டம்! கேரள மத்திய அரசுகளை கண்டித்து ஸ்டாலின்...

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசைக் கண்டித்தும், ஆய்வுப் பணிக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசைக் கண்டித்தும் இன்று கோவையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொடிசியா மைதானம் முழுக்க திமுக-வினர் நிரம்பியிருந்தனர். மேடையில் மு.க.ஸ்டாலினுடன் பொங்கலூர் பழனிசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்ற மூத்த தலைவர்கள் இருக்க, சிறுவாணி உரிமை குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது, ‘இது, கோவை மண்டலத்தைக் காக்கும் போராட்டம். தடுப்பணை கட்டும் கேரள அரசையும் கண்டிக்கும் போராட்டம். அதைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக நடந்துகொள்ளும் தமிழக அரசைக் கண்டிக்கும் போராட்டம்’ என முழக்கமிட்டனர். தொடர்ந்து, ‘இது, தமிழக மக்களுக்கான போராட்டம். எங்கள் தண்ணீருக்காகப் போராடுகிறோம். மத்திய அரசு அணை கட்டும் அனுமதியை ரத்துசெய்ய வேண்டும், தூங்கும் தமிழக அரசை தட்டியெழுப்பும் போராட்டம் இது. கேரள அரசே, மத்திய அரசே, எங்களிடம் மோதாதே. தமிழர்களிடம் மோதாதே, எங்கள் உரிமையைப் பறிக்காதே’ என்று மேடையில் முழங்கினர்.

இதன்பின் உரையாற்றத் தொடங்கினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். அவர் உரையில்,
‘இது திமுக கூட்டம், விவசாயிகள் கூட்டம் அல்ல. கொங்கு நாட்டு மக்கள் தங்கள் வாழ்வாதரத்துக்காக, நீராதாரத்துக்காக கொந்தளிப்போடு கூடியுள்ள கூட்டம். சோலைவனம்போல் உள்ள கோவை மண்டலம் பாலைவனம் ஆகிவிடக்கூடாது. ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சேர்த்து ஐம்பது எம்.பி.க்கள் கொண்டிருக்கிறார். இத்தனை அதிமுக எம்.பி.களுமே, அனுமதிதந்த மத்திய அரசை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். நாடாளுமன்றத்தில் அவர்களின் வேலை, ‘அம்மா அம்மா’ என்றும் ‘காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்’ என பஜனை பாடக்கூடிய பணிகளைத்தான் செய்து வருகின்றனர். அந்த நிலையில்தான் நம் எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு சிறுவாணி மீது அக்கறையில்லை. எனவேதான், சிறுவாணி பிரச்னை குறித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர திமுக வலியுறுத்தியது. இன்று திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதை அறிந்துதான் நேற்று, சிறுவாணி பிரச்னையில் ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவந்தார். மக்கள் நலனுக்காக திமுக அதற்கு ஆதரவளித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற உதவியது. பிற மாநிலங்களில் பொதுப் பிரச்னைகளில் ஆளும்-எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. எனவே, டெல்லிக்கு அனைத்துக் கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்துச் செல்லுங்கள் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தேன்.
நாங்கள் மரியாதையைக்கூட எதிர்பார்க்கவில்லை. முதல்வர் வரவில்லை என்றாலும் பன்னீர்செல்வம் அல்லது பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்கூட நாங்கள் டெல்லி வரத் தயார் என பேரவையில் திமுக தனது கருத்தைப் பதிவு செய்தது.
அதிமுக அரசு நினைத்தால் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆனால் அமைச்சரோ, மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம் என்று காலம் தாழ்த்தும் நோக்கில்தான் பதிலளித்தார்.
திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இன்றைய போராட்டம். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அண்டை மாநில முதல்வர்களோடு நல்ல உறவை வைத்திருந்தார். கருணாநிதியே நேரில் சென்று அண்டை மாநில முதல்வர்களைச் சந்தித்து தமிழக நலன் பற்றி பேசியுள்ளார்.
ஆனால் ஜெயலலிதா, எந்த மாநிலத்துடனும் நல்ல உறவைப் பேணுவதில்லை. நீதிமன்றத்தில் வழக்கு போடக்கூடாது என்று திமுக ஒரு நாளும் சொல்லாது. ஆனாலும் அது காலதாமதமாகும் விஷயம். காவிரி, பாலாறு, சிறுவாணி என எந்தப் பிரச்னையிலாவது அண்டை மாநில முதல்வர்களோடு ஜெயலலிதா பேசியுள்ளாரா? தமிழக கட்சிப் பிரமுகர்களையாவது சந்தித்துப் பேசியுள்ளாரா? விவசாய போராட்டக் குழுக்களையாவது சந்தித்துப் பேசியுள்ளாரா? முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்ட விவசாயிகளுக்கு என்றைக்காவது நேரம் கொடுக்கப்பட்டுள்ளதா? கிடையாது. ஜெயலலிதா ஆட்சி நடத்துவது சுயநலத்துக்காக. அவருடன் இருக்கும் குடும்பம் நலனுக்காக. வசூல் செய்யும் அமைச்சர்களுக்காக ஒரு ஆட்சி நடத்துகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் உடனே உச்சநீதிமன்றம் ஓடிச்சென்று தடை உத்தரவு பெற்ற ஜெயலலிதா, சிறுவாணி அணை கட்டவிடாமல் ஏன் தடுக்கவில்லை என்பதே எனது கேள்வி. இப்போராட்டம் இன்றோடு முடியாது. ஜெயலலிதா மெத்தனமாக இருந்தால், திமுக-வின் போராட்டம் வேறு வகைகளில் தொடரும். இது அறிவிப்பல்ல; ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை’ என்றார் மு.க.ஸ்டாலின்.   நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக