வியாழன், 15 செப்டம்பர், 2016

திராவிடர் என்ற சொல்லின் வலிமை ஆர் எஸ் எஸ் காரனுக்கும் இந்துத்வாக்களும் நன்றாகவே புரிகிறது

கிளிமூக்கு அரக்கன்
கேள்வி: அரக்கரே, கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை. அங்கே திராவிடம் எல்லாம் செல்லுபடியாகாது என்று சில சாதித்தமிழர்கள் சொல்கிறார்களே. இப்போது காவிரி பிரச்சனையில் கூட இதே கேள்வியை உங்களிடமே எழுப்பி இருந்தார்களே? உண்மையில் தமிழர்கள் தவிர்த்து மற்றவர்கள் தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களா?
பதில்: விஷயம் தெரிந்த கன்னடரோ, மலையாளியோ, தெலுங்கரோ தங்களை திராவிடர் என்று தான் அழைத்துக்கொள்கிறார்கள். வரலாறு தெரியாத பார்ப்பன அடிமைகள்தான் தங்களை சாதியைக் கொண்டும், மொழியை மட்டும் கொண்டும் (இனத்தை தவிர்த்துவிட்டு) அடையாளம் செய்துக்கொள்கிறார்கள்.> உதாரணத்திற்கு, இந்த காவேரி பிரச்சனையில் கூட கணேஷ் சேத்தன் என்கிற பிரபல பதிவர்.. கன்னடர்களும் தமிழர்களும் சகோதரர்கள். கன்னடமும் தமிழும் திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்தது என்று பதிவு செய்து இருந்தார். மலையாளிகள் ஒரு படிக்கு மேலே சென்று இருக்கிறார்கள்.
மோடிக்கு தன் கலவர, குதர்க்க திட்டங்களால் படியளப்பவரும், ஆர்.எஸ்.எஸ் மூளைக்காரருமான அமித் ஷா, ஓணப்பண்டிகைக்கு விஷமத்தனமாக ஒரு வாழ்த்தை தெரிவித்து இருந்தார். மகாபலி என்னும் அரக்கனின் நினைவாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்கு "வாமன ஜெயந்தி வாழ்த்துகள்," என்று டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார்.
இதைக்கண்ட மலையாளிகள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். ஏற்கனவே, "போ மோனே மோடி" என மோடியை ஓட ஒட விரட்டியடித்தவர்கள் அல்லவா!!
"நாங்கள் திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள்; வாமனனை ஒரு போதும் கொண்டாடமாட்டோம். பிராமணீயத்தை உள்ளே விடமாட்டோம் " என்று அமித்ஷா விற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்கள்.
ஆர் எஸ் எஸ் கொழுப்பில் பெரிய புத்திசாலியை போல வாமன ஜெயந்தி என்று சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்டார் அமித் ஷா. மலையாளிகள் என்ன தமிழர்கள் போல இனமானம், வரலாற்று அறிவு அற்றவர்களா? நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற நாளான தீபாவளியை முக்கிய பண்டிகையாக கொண்டாடுவதற்கு!
கர்நாடகாவை சேர்ந்தவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கே சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேரடியாகவே, "அம்பேதர்கரும் நாங்களும் (திராவிடர்கள்) தான் இம்மண்ணின் மைந்தர்கள். வெளியில் இருந்து வந்தவர்கள் நீங்கள், ஆரியர்கள். ஆயிரம் ஆண்டுகாலமாக எங்களை அவமானப்படுத்தி வைத்திருந்தாலும், நாங்கள் இங்கே தான் இருக்கிறோம், இங்கே தான் இருப்போம்" என்று கோபமாக பேசியது நினைவில் இருக்கலாம்.
திராவிடம் என்பது எவ்வளவு பெரிய கலகச் சொல் என்பது நம்ம ஆட்களில் பலருக்கு தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ்காரனுக்கு மட்டுமல்ல, திராவிட இனத்தை கலாச்சார, மொழி படையெடுப்பின்மூலம் துண்டாட நினைக்கும் எவனுக்குமே 'திராவிடம்' என்ற வார்த்தையைக் கேட்டாலே முதுகில் சுரீரென்று வலிக்கும்! திராவிடம் என்பது வெறும் வார்த்தையல்ல. மொழியையும், இனத்தையும், மக்களையும் காக்கும் அறிவாயுதம்.  முகநூல் பதிவு   கிளிமொக்கு  அரக்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக