வியாழன், 15 செப்டம்பர், 2016

சித்தராமய்யாவை சந்திக்க மறுத்த மோடி!

உச்சநீதிமன்றம் அளித்த அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளால் கர்நாடக
மாநிலத்தில் வெடித்த கட்டுக்கடங்காத கலவரம் கர்நாடக மாநிலத்தை நிலைகுலைய வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமய்யாவுக்கு இது மிகப்பெரிய அதிருப்தியை உருவாகிக் கொடுக்க, அவரோ அமைச்சரவைக் கூட்டத்தையும், கட்சியின் மூத்தத் தலைவர்களையும் கூட்டி ஆலோசித்தார். அதில், சித்தராமய்யாவை ராஜினாமா செய்யுமாறு சிலர் கோர, இந்த நெருக்கடியான நேரத்தில் ராஜினாமா கோரிக்கை வேண்டாம் என கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதால் அது கைவிடப்பட்டது.

செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமய்யா, “காவிரி பிரச்னையில் தலையிடுமாறு பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். நமது தலைமைச் செயலாளர் பிரதமர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளார். நாளை (புதன்) பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். பிரதமர் நேரம் ஒதுக்கியதும் நான் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி பிரச்னை குறித்து பேச உள்ளேன்” என்றார். ஆனால், கடந்த இரு மாதங்களில் எட்டு முறை பிரதமருக்குக் கடிதம் எழுதியும் அந்த கடிதங்களுக்கு எந்த ஒரு பதிலையும் மோடி எழுதவும் இல்லை. சித்தராமய்யாவுக்குச் சந்திக்க நேரம் ஒதுக்கவும் இல்லை. இது காங்கிரஸ் கட்சியை மட்டுமல்லாது அரசியல் தளத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
கர்நாடக மாநில காங்கிரஸார் தண்ணீரை விட கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்திய நிலையில், அமைதியாக இருந்த பிரதமர் சில நாட்களுக்கு முன்னர் இரு மாநிலங்களையும் அமைதியாக இருக்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடவின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது, இதற்கு முன்னதாகவே சதானந்த கவுடா கூறும்போது, “காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட மாட்டார். சித்தராமய்யா பிரதமரை சந்திப்பதே கடினம்” என ஊடகங்களில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. உள்ளூரில் அதாவது கர்நாடக மாநிலத்தில் கட்சியினரின் விருப்பங்களுக்கு பிரதமர் துணை போகிறார் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக