வியாழன், 15 செப்டம்பர், 2016

உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு காங்கிரஸ் உயர்நீதிமன்றில் மனு!


மின்னம்பலம்.com : உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தலுக்கு முன்பாகவே உரிய முடிவை எடுக்குமாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலரான குமார் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த உள்ளாட்சி தேர்தலின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழ் நாட்டில் 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 32 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 2,618 ஊராட்சிகள் உள்ளன. மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த உள்ளாட்சி தேர்தலில் மாவட்டக் கலெக்டர்கள் அந்தந்த மாவட்டத்தின் தேர்தல் அதிகாரிகளாக செயல்படுவார்கள்.
இந்த முறையில் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற வாய்ப்பிருக்கிறது.எனவே மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். மாநகராட்சி அளவிலும் மாவட்ட அளவிலும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் படுகிறவர்கள் மாவட்ட அளவில் கலெக்டர் பொறுப்பில் உள்ள வெளி மாநில அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
அது போல வேட்புமனு தாக்கல் செய்வதை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு பணிச் சுமை குறைவதோடு , வேட்புமனு தாக்கல் செய்வது வெளிப்படையாகவும் இருக்கும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவீன வாக்குபதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு காமிராக்களும் , பாதுகாப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும். இதன் மூலம் எந்த விதமான தவறான குறுக்கீடுகளும் இல்லாமல் தேர்தல் நடைபெறும். மேலும் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இதுவரை 33 சதவிகிதமாக இருந்து வந்தது. அது தற்போது 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு அதற்கான அதற்கான அரசாணை பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் அது இப்போது வரை சட்டரீதியாக அமல் படுத்தப் பட வில்லை. இது குறித்து தமிழக அரசுக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அந்த கோரிக்கையை அமல் படுத்துமாறு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் " என்று அந்த மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது.இந்த மனு நேற்று, தலைமை நீதிபதி அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்து ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வில் விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலின்போது ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்வது, கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக முடிவெடுக்க வேண்டும். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அதன்படி இடஒதுக்கீட்டை அளிக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்புடைய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்”. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கிட்டு அளித்தால், தமிழகம்தான் அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகம் கொண்ட மாநிலமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக