திங்கள், 19 செப்டம்பர், 2016

கேரளா புலிகளி.. முதல் முறையாக பெண்கள் ஆடும் புலியாட்டம்

மின்னம்பலம்.காம்  :  200 வருடங்கள் பழமையான ‘புலிகளி’ என்னும் கிராமிய நடனத்தில் முதன்முறையாக கேரள பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். ஓணம் கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்ச்சியாக புலிகளியாட்டம் நடைபெறும். இந்த புலிகளியாட்டத்தில் பொதுவாக ஆண்கள் உடல் முழுவதும் வண்ணங்கள் பூசிக்கொண்டு தொப்பையில் விதவிதமான புலி உருவங்களை வரைந்து கொள்வார்கள். மற்றும் சில ஆண்கள் வேட்டைகாரர்களாக வேடமிட்டுக் கொள்வார்கள். பின்னர் அவர்கள் தெருக்களில் செண்டை மேளத்துக்கு ஏற்றவாறு புலி நடனமாடுவார்கள். இந்நிலையில், துணை ஆய்வாளர் என்.ஏ.வினயா, பள்ளி ஆசிரியர் திவ்யா திவாகர், ஆடை வடிவமைப்பாளர் சக்கீனா, ரஹானா பாத்திமா ஆகிய நான்கு பெண்கள் மற்றும் விய்யூரை சேர்ந்த 50 ஆண் நடனக் கலைஞர்களுடன் குழுவாக இணைந்து புலி நடனமாடினார்கள்.
பெண்கள் ஒருமைப்பாடு மற்றும் விளையாட்டு அமைப்பு மூலம் வளர்ச்சி என்னும் பிரச்சாரத்தின் விளைவாக இவர்கள் பங்கு இருந்தது.
இந்த அமைப்பின் தலைவர் வினயா, “பெரும்பாலான பொது பண்டிகைகள் பெண்கள் தலையீடு இல்லாததால் வெறும் ஆண்கள் கொண்டாட்டங்களாகவே உள்ளன. சமுதாயத்தில் எங்களுக்கான உரிமையை நாங்கள் பெற வேண்டும். இதை நாங்கள் சவாலாக ஏற்றுக் கொண்டு செய்தோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த அமைப்பு, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஓணம் விழாவின்போது பெண்கள் குழுவைத் தொடங்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக