செவ்வாய், 13 செப்டம்பர், 2016

ரெய்டு நடத்தினால்தான், அ.தி.மு.க வழிக்கு வரும்...!' -அருண் ஜெட்லிக்கு ஐ.ஏ.எஸ். வழிகாட்டல்!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மேயர் சைதை துரைசாமி ஆகியோரை மையமாக கொண்டு மத்திய அரசின் வருவாய்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டில்  ஈடுபட்டிருக்கிறார்கள். இதே நேரத்தில், கீர்த்திலால் ஜூவல்லரி, மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி...என்று ரெய்டுகள் இன்னொரு பக்கம் நடந்து வருகின்றன. 
அ.தி.மு.கழக ஆதரவு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, " மத்திய வருவாய்துறையினர் குறி வைத்தது..முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை நோக்கித்தான். கடந்த ஆட்சியில் கொடிகட்டிப்பறந்தவர். அடுத்து, ஆட்சி மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவந்த கீர்த்திலால் ஜூவல்லரி உரிமையாளர்களுக்கு செக் வைத்து சின்ன அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். அ.தி.மு.கழக வி.ஐ.பிகளில் மேயர் சைதை துரைசாமியும் ஒருவர். அவரின் அசுர பொருளாதார வளர்ச்சி பற்றி அவரின் அரசியல் எதிரிகள் ஆதாரங்களுடன் ஐ.டி. துறைக்கு அனுப்பினார்களாம்.
இப்படியாக அ.தி.மு.கழகத்தை நோக்கி நடத்தப்பட்ட ரெய்டு இது.
இதுமாதிரி குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியையும் ரெய்டில் சேர்த்துக்கொண்டார்கள். அங்கே சொற்ப நேரத்தில் ரெய்டை நடத்திவிட்டு கிளம்பிப்போய்விட்டார்களாம். முதல்வர் ஜெயலலிதாவுக்கு டென்ஷன் கொடுக்க பயன்படுத்தலாம் என்று நினைத்து அவரது கட்சி வி.ஐ.பிகள் பலரது  ஃபைல்களை வைத்திருந்தனர்.அவற்றில் மூன்றை மட்டும் இப்போது எடுத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் மத்திய அரசின் பாலிடிக்ஸ் என்று சொல்லுவதை விட, அதிகாரிகள் சிலரின் பாலிடிக்ஸ்தான் என்றே சொல்லலாம். தமிழக அரசின் மீது வெறுப்பை உண்டாக்கும் வகையில் உயர் அதிகாரிகள் மத்தியில் பெரிய ஒரு தரப்பினர் உச்சகட்ட லாபியே செய்து வருகின்றனர். அதன் ஒரு கட்டம்தான்...இந்த ரெய்டு" என்கிறார். 
அவரிடம், 'அதிகாரிகளில் யார் அந்த ஒரு தரப்பினர்?' என்று கேட்டோம்!
" துடிப்பான இளம் அதிகாரிகள் சிலர்தான் அவர்கள். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் பதவியில் இருந்த காலத்தில் ஒரு கூரியர் சர்வீஸ் போல செயல்பட்டதாக அவர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். முதல்வரை ஞானதேசிகன் சந்தித்த நிகழ்வுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றனர். ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்கள், முதல்வரின் ஆலோசகர்...இப்படி சிலர்தான் அதிகார மையமாக தமிழகத்தில் ஆட்டிப்படைப்பதாக சொல்லித்திரிந்தார்கள். சரியான விசாரணை நடத்தாமல் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானதேசிகன், அதுல் ஆனந்த்...இருவரை திடீரென சஸ்பெண்டு செய்ததாக அவர்கள் போர்கொடி தூக்கினர். அந்த தரப்பினர்தான் தங்களின் டெல்லி லாபியை வைத்து இந்த ரெய்டுக்கு தூண்டியிருக்கலாம் என்று கருதுகிறோம்" என்கிறார். 
 
தமிழக முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மேயர் சைதை துரைசாமி, கோவை கீர்த்திலால் காளிதாஸ் நகைக் கடை ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இப்படியொரு அதிரடி சோதனையை அ.தி.மு.க மேலிடம் எதிர்பார்க்கவில்லை. ரெய்டு குறித்து நம்மிடம் பேசிய தலைமைச் செயலக வட்டார அதிகாரி ஒருவர், " கடந்த ஆட்சியில் மின் மற்றும் கலால்துறையில் கொடி கட்டிப் பறந்தார் நத்தம் விஸ்வநாதன். மின்சாரக் கொள்முதலில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றன. இதன் எதிரொலியாகவே முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் கனிம வளத்துறையின் அதுல் ஆனந்த் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தலைமைச் செயலகத்தில் கோலோச்சிய ஓர் அதிகாரியை பழி வாங்கிய செயலை, இதர ஐ.ஏ.எஸ்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதற்கென தலைமைச் செயலகத்தில தனியாகக் கூட்டம் போட்டுப் பேசினர். முதல்வரை சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால், தற்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவ் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில, 'அரசுக்கு நம்முடைய வலிமையை காட்ட வேண்டும். ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது, ஏற்றுக் கொள்ள முடியாத செயல்' என கொந்தளித்தனர். தற்போது மத்திய அரசின் நிதித்துறையின் கீழ் வரும் பொருளாதார விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு செயலாளர் பதவியில் இருந்து வருகிறார்...சக்தி கந்ததாஸ் ஐ.ஏ.எஸ். இவர் 80-ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் 82-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர். தமிழகத்தில் அன்றாடம் அரசு நிர்வாகத்தில் நடப்பதை நன்றாக அறிந்தவர் சக்தி கந்ததாஸ். தற்போது நடந்துவரும் ரெய்டுகளின் பின்னணியில் தமிழகத்தை சேர்ந்த சில துடிப்பான அதிகாரிகள் டெல்லியில் செய்த லாபியாக இருக்கலாம். இவர்கள் சக்தி கந்ததாஸை பிடித்து மத்திய அரசுக்கு மூலம் ரெய்டுக்கு ரூட் போட்டுக்கொடுத்தாரோ? என்கிற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது" என்கிறார். 
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் கோலோச்சும் ஆளுங்கட்சி வி.ஐ.பி.க்களின் மறுபக்கம் குறித்து, வருமான வரித்துறைக்கு விலாவாரியாக சில குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் மின்துறையில் நடந்த மெகா ஊழல்களைப் பற்றியும் அதன்மூலம் அ.தி.மு.க.வுச்குச் சென்ற வருமானம் குறித்தும் சில தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. மேயரின் தொழில்கள் குறித்தும் ஆட்சி அதிகாரத்திற்கு நெருக்கமான கோவை நகைக்கடையின் வருமானம் குறித்தும், புள்ளி விபரங்களோடு வருமான வரித்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர் சில அதிகாரிகள். இவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவதற்காக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் அனுமதிக்காகக் காத்திருந்தனர். ' ரெய்டு நடத்துவதில் எந்தத் தயக்கமும் வேண்டாம்' என கிரீன் சிக்னல் கொடுத்தார் அவர். வரும் நாட்களில் அ.தி.மு.க.வின் மிக முக்கியமான புள்ளிகள் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட உள்ளது. இது தொடக்கம்தான்" என அதிர வைத்தார் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர். 
"ஆளுங்கட்சி மீது அளவுகடந்த கோபத்தில் இருக்கிறது மத்திய அரசு. 'சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க அரசு முற்றிலும் மாறிவிட்டது. நம்மை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை' என்ற கோபம், அகில இந்தியத் தலைமைக்கு இருக்கிறது. ரெய்டு என்பது அதன் ஒரு பகுதிதான்" என்கிறார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர். தொடர்ந்து, " சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவைத் தாக்கல் செய்யும்போது, அ.தி.மு.க அரசின் ஒத்துழைப்பு தேவை என்பதற்காக, கடந்த ஆண்டே தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை ஓராண்டு தள்ளி வைத்தார் அருண் ஜெட்லி. நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி நிறைவேற்றப்படும்போது, தி.மு.க ஆதரவு கொடுத்தது. அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. 
' நம்மோடு தி.மு.க நெருங்கி வருகிறது. ஆனால், அ.தி.மு.க அவ்வாறு இல்லை. அ.தி.மு.கவுக்கு நெருக்கடி கொடுப்போம்' என தலைமை முடிவெடுத்தது. இந்த நேரத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் லாபியும் களமிறங்கியது. நத்தம் விஸ்வநாதன் முதற்கொண்டு அ.தி.மு.க அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்ற பட்டியலைத் தயாரித்துள்ளனர். முன்பு அவர்கள் தாக்கல் செய்துள்ள வருமான வரிக் கணக்குகளில் இருந்து, எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள் என்பதை ஆதாரத்தோடு விவரித்துள்ளனர். இதையொட்டியே ரெய்டு வேலைகள் வேகமெடுத்தன. வருகிற நாட்களில் அ.தி.மு.க தலைமை அதிரும் அளவுக்கு சோதனைகள் நடக்கும்" என்றார் விரிவாக.
-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக