செவ்வாய், 13 செப்டம்பர், 2016

கர்நாடகா வன்முறையில் 1,000 கோடி இழப்பு..! பரிதவிக்கும் லாரி உரிமையாளர்கள்

vikatan.com :சேலம் : "காவிரி பிரச்னையால் கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தில் 70க்கும் அதிகமான தமிழக லாரிகள் அடித்து சேதப்படுத்தி, தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது," என  லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
சேலத்தில் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் குமாரசாமி கூறியதாவது.
காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடகம் முதலில் ஆர்ப்பாட்டம், போராட்டத்தை தான் நடத்தி வந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அது திடீரென கலவரமாக வெடித்தது. இதில் தமிழக பதிவு எண் உள்ள வாகனங்களை சிலர் தாக்கத்துவங்கினர். தமிழக பதிவு எண்ணோடு இருக்கும் அனைத்து வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டு, தீயிட்டும் கொளுத்தப்பட்டது. நாங்கள் கலவரத்தின் போது அங்கு செல்லவில்லை. ஆனால் ஏற்கனவே கர்நாடகாவுக்கு சரக்குகளுடன் சென்ற லாரிகள் அங்கு இருந்தன. அந்த மாநிலத்தின் வழியாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கு லாரிகள் செல்வதால் நிறைய லாரிகள் அங்கிருந்தன.

இந்த சூழலில் நேற்று (12ம் தேதி) கலவரத்தின் போது  மட்டும் 70க்கும் அதிகமான லாரிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை மத்திய பேரிடர் மேலாண்மை வாரியம் ஏற்று, இழப்பீட்டுத்தொகையை வழங்க வேண்டும். இன்னும் கர்நாடகாவில் எங்களுடைய சரக்கு வாகனங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றுக்கு கர்நாடக அரசும், கர்நாடக காவல்துறையும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பாதுகாப்புக்காக மத்திய அரசு உடனே துணை ராணுவத்தை அனுப்பி கர்நாடகா கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக