செவ்வாய், 27 செப்டம்பர், 2016

உள்ளாட்சித் தேர்தல்:ஏமாற்றப்பட்டதாக அதிமுக-வினர் போராட்டம்!


மின்னம்பலம்.காம் :தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு 919 வேட்பாளர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 655 பேர் என 1574 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது அதிமுக தலைமை.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமை அறிவித்துள்ள வேட்பாளர்களின் பெயரை மாற்ற வேண்டும் எனக்கோரி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் அதிமுக-வினர்.

முற்றுகைப் போராட்டம்
திருச்சி மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது எனக்கூறியும், சில வார்டுகளில் அறிவித்துள்ள வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர் திருச்சி அதிமுக-வினர். அதேபோல், கட்சியில் நீண்டகாலமாக பணியாற்றி வருபவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோவை மாநகராட்சிக்குட்பட்ட ராமநாதபுரத்தில் உள்ள சில வார்டுகளில், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மேலும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அறிமுகமில்லாத நபர்களுக்கு சீட் கொடுத்ததாக அமைச்சர் வேலுமணிமீது தொண்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வேட்பாளரை மாற்றக்கோரி சென்னை மேற்கு மாம்பலத்தில் தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் கலைராஜன் அலுவலகத்தை மகளிர் அணியினர் நேற்று முற்றுகையிட்டனர். வேட்பாளர் பட்டியலில் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லாமலேயே வெளியாகியுள்ளதும் தொண்டர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதேபோல், மதுரை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகங்களை முற்றுகையிட்டு தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். மதுரையில், மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் உண்மையான விசுவாசிகளுக்கு சீட் கொடுக்காமல், பணம் பேரம்பேசி வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுத்துள்ளதாகவும், மண்ணின் மைந்தர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று லித்தோ போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தற்கொலை முயற்சி
திருவள்ளூரை அடுத்த குப்பம்மாசத்திரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ரஜினிரவி. இவரது மனைவி, திருவள்ளூர் மாவட்ட அதிமுக கவுன்சிலராக உள்ளார். மீண்டும், அதே பதவியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதையடுத்து, மன வேதனையடைந்த ரஜினிரவி, திடீரென தனது கையை கத்தியால் வெட்டி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது ரஜினிரவி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
அதேபோல், சென்னை கோயம்பேடு 127வது வட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் சேகர். நீண்டகாலமாக அதிமுக-வில் இருக்கும் இவர், உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி 127வது வார்டில் போட்டியிட சீட் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. ஏற்கனவே, இந்த வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்று கவுன்சிலராக இருக்கும் மலைராஜனுக்கே மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர் சீட் கிடைக்காததால் மனமுடைந்து காணப்பட்ட சேகர் தூக்க மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, சேகருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக