செவ்வாய், 13 செப்டம்பர், 2016

பாராலிம்பிக் தீபா :முடக்கத்துக்கும் இறப்புக்குமான போட்டியில் நான் முடக்கத்தைத் தேர்ந்தெடுத்தேன்

thetimestamil.com சமுக பட்டகம் : பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில்,
4.61 மீட்டர் தூரம் குண்டை வீசியெறிந்து  வெள்ளிப்பதக்கம் வென்றார் தீபா மாலிக். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவை சேர்ந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் தீபா.
45 வயதாகும் தீபா மலிக் ஹரியானாவைச் சேர்ந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தீபா, முதுகுத் தண்டில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக 31 அறுவை சிகிச்சைகளுக்கு ஆளானவர்.
சிறுவயது முதலே முதுகுதண்டு வடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் தீபா. ஆனாலும் எட்டு வயதிலிருந்து கிரிக்கெட் ஆடுவதில் விருப்பம். தொடர்ந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுகொண்டிருந்தாலும் தன்னுடைய 26 வயதில் முழுமையான இழப்பை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.
“முதுகுத்தண்டு பிரச்சினையின் உச்சத்தில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் உயிரிழக்க நேரிடும்.
அப்படியே செய்தாலும் முன்பு போல இயங்க முடியாது, வீல் சேரில்தான் செல்ல வேண்டியிருக்கும். அதாவது முடக்குவாதமா மரணமான என இரண்டு வழிகள் என் முன்னே…நான் முடக்குவாதத்தை ஏற்றுக்கொண்டேன்” என சொல்கிறார் தீபா. மனிதர்களை முடக்கிப் போடுகிற நிலைமையை சவாலாக எதிர்கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம்.
“குழந்தை பருவத்திலிருந்து கற்பதைப் போல,உட்காருவது, எழுவது, குளிப்பது, உடைமாற்றுவது என   அனைத்தையும் நான் முதலில் இருந்து கற்றேன்” என்கிற தீபா குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், தீபாவைப் போல தன்னம்பிக்கை மிக்க நபரை தான் பார்த்ததில்லை என்கிறார்.
இராணுவ வீரரான தன்னுடைய கணவர் துணையுடன் தன்னுடைய விளையாட்டு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்.  2006-ஆம் ஆண்டு குண்டு எறிதல் போட்டியில் கலந்துக் கொண்டார். 2010- ஆம் ஆண்டு பாரா ஏசியன் விளையாட்டுகளில் கலந்துகொண்டார். 2012 லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் அவரால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும் சோர்ந்துவிடவில்லை. ரியோ அவருக்குக் கிடைத்தது. இதோ வெள்ளிப் பதக்கமும் வென்றிருக்கிறார்.
“பலர் என்னை நடுத்தர மேல்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த பெண் என எழுதுகிறார்கள். எனக்குப் பின்னணியில் ஏழ்மையான கதையை எதிர்ப்பார்க்கிறார்கள். நான் 40களில் உள்ளவள். அதையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன்” என்று தன்னைப் பற்றிய மறைமுக கருத்துகளுக்கு பதில் சொல்கிறார் தீபா.
தமிழக வீரர் மாரியப்பனும், தீபாவும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்கிறவர்கள் என்றாலும் அவர்களுடைய உழைப்பையும் தன்னம்பிக்கையும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை. இருவரிடம் கற்க ஏராளமாக உள்ளது. ஆனால் இவர்கள் விளையாட்டுத் துறையில் கடந்துவந்த கடினமான பாதைகளைத்தான் நான் கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக