புதன், 7 செப்டம்பர், 2016

மீண்டும் சென்னை கமிஷனராக ஜார்ஜ் நியமனம்!


சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக எஸ்.ஜார்ஜ் மூன்றாவதுமுறையாக நியமிக்கப்பட்டுள்ளார். 1984ஆம் ஆண்டு தேர்வு ஐ.பி.எஸ். குழுவைச் சேர்ந்த ஜார்ஜ், கேரள மாநிலம், திருவங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மத்திய மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலத்தில் ஜ.ஜி.யாக பணியாற்றியுள்ளார். இவர், 2004ஆம் ஆண்டு மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோது, பலத்த பாதுகாப்புடன் ஒரு மகாமகத்தை நடத்தி, ஆளும் தரப்புக்கு நம்பிக்கையானவராக விளங்கினார் என்று கூறப்படுகிறது.
ஜார்ஜ், சென்னை கமிஷனராக முதலில் 2012ஆம் ஆண்டு, செப்டம்பர் 19ஆம் தேதி நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, அப்பதவியில் இருந்து தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டடார். அதன்பின்னர், மீண்டும் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் ஜார்ஜ் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது, சென்னை கமிஷனராக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். தற்போது, தமிழக டிஜிபி-யாக இருந்த அசோக்குமார் விருப்ப ஓய்வில் சென்றதையடுத்து, தமிழக புதிய டிஜிபி-யாக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக பதவி வகித்துவரும் எஸ்.ஜார்ஜ், சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ள சு.அருணாச்சலம், தமிழ்நாடு போக்குவரத்துக் கழக லிமிடெட் (திருநெல்வேலி) லஞ்ச ஒழிப்பு தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக