செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ராம்குமார் பிரேத பரிசோதனைக்கு நீதிமன்றம் தடை

சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், நேற்று திடீரென மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் மரணம் தொடர்பாக திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி, நீதி விசாரணையை தொடங்கினார். இவர் முன்னிலையில் இன்று காலை ராம்குமாரின் உடல் பரிசோதனை நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் வழக்கறிஞர் விஜேந்திரன் கோரிக்கையை விடுத்திருந்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு தனி நீதிபதி சிவஞானம் முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. இந்நிலையில், வழக்கறிஞர் விஜேந்திரன், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வழக்கறிஞர் விஜேந்திரனின் கோரிக்கையை ஏற்று, நீதிபதி சிவஞானம், ராம்குமாரின் பிரேதப் பரிசோதனைக்கு தடை விதித்தார்.மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக