செவ்வாய், 20 செப்டம்பர், 2016

பிரதமர் மோடி : பயங்கரவாத பாகிஸ்தானை தனிமைப்படுத்துங்கள்


புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடுங்கோபமடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் வகையில், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் உட்பட, சர்வதேச அரங்கில், அதன் முகத்திரையை கிழிக்கும் விதமாக, ஆதாரங்களை முன் வைக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார். முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் யூரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது, பயங்கரவாதிகள் நேற்று முன் தினம் அதிகாலையில் திடீர் தாக்குதல் நடத்தினர்; இதில், 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; 19 பேர் காயமடைந்தனர். எதிர் தாக்குதலில், நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மோடி ஆலோசனை< இந்நிலையில், டில்லியில் சிகிச்சை பெற்று வந்த, ஒரு ராணுவ வீரர் நேற்று உயிரிழந்தார். அதையடுத்து, இந்த தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, 18 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பும், கடும் கண்டனமும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், 'பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், எதிர் நடவடிக்கைகள்
இருக்க வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளன.இதற்கிடையே, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி,மனோகர் பரீக்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவத் தலைமை தளபதி, தல்பிர் சிங் சுஹாக் உள்ளிட்டோருடன், பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

ஆதாரங்கள்



இந்தக் கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து, உள்துறைஉயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில், பாகிஸ்தானின் சின்னம், முத்திரை உள்ளன; ராணுவம் பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன.

உணர்ச்சிவசப்படாமல், கோபப்படாமல்; அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் ஆலோசனை நடந்தது. அதன்படி, சர்வதேச அளவில், பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது தான் மிகச் சிறந்த உடனடி நடவடிக்கை என, முடிவு செய்யப்பட்டது.'பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் வகையில், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் உட்பட, பல்வேறு சர்வதேச அமைப்புகளில், அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடி வலியுறுத்தினார்.இதைத் தவிர பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன; போதிய ஆதாரங்களை திரட்டிய பின், அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.இந்த கூட்டத்துக்கு முன், எல்லையில் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்துவது
குறித்து, உயரதிகாரிகளுடன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.அனைத்து உண்மைகளும் நம்முன் வெளிப்படையாக உள்ளன. இந்த தாக்குதலுக்கு நாங்கள் காரணமில்லை என்று, பாகிஸ்தான் கூறுவதை பொருட்படுத்தப் போவதில்லை. மிகவும் ஜாக்கிரதையாகவும், நிதானத்துடனும் கூடியதாக, நம்முடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்.- கிரண் ரிஜிஜு, உள்துறை இணையமைச்சர், பா.ஜ.,

'எங்களுக்கு எதுவும் தெரியாது'

'யூரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம்' என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியதாவது:இந்தியாவின் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறோம்; இது ஆதாரமற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டு. இந்த சம்பவங்களில் பாகிஸ்தானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை திசை திருப்பவே, இந்தியா, இந்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளது; அங்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை பாகிஸ்தான் உருவாக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

21ல் ஷெரீப், 26ல் சுஷ்மா

ஐ.நா., சபையின் பொதுக் கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வரும், 21ம் தேதி உரையாற்ற உள்ளார்.இந்தியாவின் சார்பில் பங்கேற்கும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வரும், 26ம் தேதி உரையாற்ற உள்ளார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக