ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

ராம்குமாருக்கும் இளவரசனுக்கும் மட்டும் பாகுபாடு காட்டும் நீதித்துறை

ஒருவர் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் மார்ச்சுவரிக்குள் கொண்டு
சென்றுவிட்டால், தடயத்தைக் காப்பாற்ற முடியும். அதுவும், நான்கு டிகிரி உறைநிலையில் உடல் வைக்கப்பட்டிருந்தால், நூறு நாட்கள் ஆனாலும், புத்தம் புதிய உடலாகவே இருக்கும். இந்த உறைநிலையை சரியாக பராமரிக்காவிட்டால், ஆதாரங்களைக் காப்பாற்றுவது சிரமம். நான் பார்த்த வரையில் ஆறு மணி நேரத்திற்குள் மார்ச்சுவரிக்குள் ராம்குமார் உடலை அனுப்பிவிட்டார்கள். உறநிலையை எப்படி பராமரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மின் கம்பியைக் கடித்தும், அவரது வாயில் எரிந்ததற்கான காயம் இல்லை என்கின்றனர். நீர் பதம் இருக்கும் சமயத்தில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். வாயின் உள்பகுதிக்குள் மின் கம்பியை அழுத்திக் கடித்திருந்தாலும், கால் வழியாக மின்சாரம் கடத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த இடத்தில் காயம் கட்டாயம் ஏற்படும்.


மின் கம்பியைக் கடிக்கும்போது புண் ஏற்படுவதற்குக் காரணம், உடலின் உள் மின்சாரம் பாயும்போது, தோல் அதைத் தடுக்கும் வேலையில் ஈடுபடும்.

ஒருமுறை அண்ணா நகரைச் சேர்ந்த ரேவதி என்பவர், மின்சாரத்தை உடலில் பாய்ச்சிக் கொண்டு இறந்துவிட்டதாகக் கூறி, பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்திருந்தனர். ' அவர் தற்கொலை செய்து கொண்டார்' என உடற்கூறு மருத்துவர் தெரிவித்தார்.

நான் ஆய்வு செய்தபோது, அந்தப் பெண்மணியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அதன்பிறகு உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருப்பதை கண்டறிந்தேன். இதன்பின்னரே கொலை வழக்காக மாற்றப்பட்டது. ரேவதி வழக்கில் தற்கொலை என்று முதலில் சான்று கொடுத்தவரும் அரசு மருத்துவர்தான்.

எனவே, ராம்குமார் மரணத்தில் தனியார் மருத்துவர் உடனிருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான். அதற்கு ஏன் அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதுதான் மர்மமாக இருக்கிறது.

தர்மபுரி இளவரசன் மரணத்திலும் எனக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. அவரது மரணத்தில் தலை மற்றும் கைகளில் காயங்கள் இருந்தன. அவரது கை மற்றும் காலில் உள்ள காயத்தின் அடிப்படையில், எந்தக் காயம் முதலில் ஏற்பட்டது? இரண்டு ஒரே நேரத்தில் நிகழ்ந்தவையா என்பதைக் கண்டுபிடித்திருந்தால் கொலையா? தற்கொலையா? என்பதை எளிதாகச் சொல்லியிருக்க முடியும்.

ஆனால், இளவரசன் மரணத்தில் தனியார் மருத்துவர் உடனிருக்க அரசுத் தரப்பு அனுமதிக்கவில்லை. ராம்குமாருக்கும் இளவரசனுக்கும் மட்டும் ஏன் பாகுபாடு காட்டப்படுகிறது?
உடற்கூறு மருத்துவர் டிகால்
(2000+ உடல்களுக்கும் மேல் பிரேதப் பரிசோதனை செய்திருக்கிறார்)
முகநூல் பதிவு Special Correspondent FB Wing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக