ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம்: இந்தியா-பிரான்ஸ் கையெழுத்து

புதுடெல்லி: 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் இடையே கையெழுத்தானது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் ‘தசால்வ்த் ஏவியேஷன்’ நிறுவனத்திடம் இருந்து ரபேல் ரக அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதில் சில குறைபாடுகள் இருந்ததால் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதை ரத்து செய்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோது, பிரான்ஸ் அரசின் நேரடி ஒப்பந்தம் மூலம் 36 ‘ரபேல்’ ரக போர் விமானங்களை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வந்த பிரான்ஸ் அதிபர் பிராங்க்கோயிஸ் ஹாலண்டேவும் அதை விரும்புவதாக குறிப்பிட்டார்.


இதைத்தொடர்ந்து பிரான்ஸ் அரசிடம் இருந்து நேரடியாக ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரமாக மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சியாக பிரான்ஸ் ராணுவ மந்திரி ஜீயன் யுவெஸ் லீ டிரியன் நேற்று முன்தினம் தசால்வ்த் ஏவியேஷன் நிறுவன அதிகாரிகளுடன் டெல்லி வந்தார்.

லீ டிரியன் நேற்று ராணுவ மந்திரி பாரிக்கரை சந்தித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா-பிரான்ஸ் இடையே 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் ராணுவ மந்திரிகளும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 7.87 பில்லியன் யூரோ (சுமார் ரூ.59 ஆயிரம் கோடி) ஆகும். மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதன் மூலம் சுமார் ரூ.4,500 கோடியை இந்தியா மிச்சப்படுத்தி இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி ‘ஆப்செட் கிளாஸ்’ என்னும் பிரிவின் கீழ் சுமார் 3 பில்லியன் யூரோ (ரூ.22,500 கோடி) அளவிற்கு இந்தியாவில் பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு பணிகளும் கிடைக்கும்.

ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் இருந்து அடுத்த 36 மாதங்களில் ரபேல் ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வினியோகம் செய்யும் நடவடிக்கைகளை பிரான்ஸ் தொடங்கும். அந்த பணி 66 மாதங்களில் முடிவடையும்.

இந்த போர் விமானங்களில் நவீன தொழில் நுட்பம் கொண்ட ‘மேட்டியர்’ மற்றும் ஸ்கால்ப் ரக ஏவுகணை பயன்படுத்த முடியும். இதன் மூலம் தற்போது பாகிஸ்தானிடம் இருக்கும் நவீன ரக போர் விமான ஏவுகணைகளை விட இந்தியாவின் ரபேல் போர் விமான ஏவுகணைகள் பல மடங்கு வலிமை வாய்ந்தவையாக இருக்கும். ‘மேட்டியர்’ ஏவுகணைகள் வானில் இருந்து கிளம்பிச் சென்று 150 கி.மீ. தொலைவில் வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும்.

இதன் மூலம் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதி எல்லைக்குள் இருந்தவாறே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக