புதன், 7 செப்டம்பர், 2016

சென்னை மின்சார ரெயில் மோதி 4 வடமாநில தொழிலாளர்கள் பலி!

விகடன்.காம் :சென்னை சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் நடந்து சென்ற  வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர்  ரயிலில் அடிபட்டு பலியாகினர். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் சேத்துப்பட்டு&நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் இடையே பிற்பகல் 3 மணியளவில் வந்தது. அப்போது, ரயில் வந்த தண்டவாளத்தில் 4 பேர் நடந்து சென்றனர். இதைப்பார்த்த ரயில்வே பைலட் (டிரைவர்) ஹரான் மூலம் எச்சரிக்கை செய்தார். ஆனால் அவர்கள் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ரயிலை நிறுத்த அவர் முடிவு செய்து பிரேக் போட முடிவு செய்தவதற்குள் மின்னல் வேகத்தில் ரயில் 4 பேர் மீதும் மோதியது. தண்டவாளத்திலிருந்து அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து ரயில்வே பைலட், ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் எழும்பூர் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது ரயிலில் அடிப்பட்ட ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார். அவரை மீட்டு 108 மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.
இதற்கிடையில் ரயிலில் அடிபட்டு பலியான மற்ற மூன்று பேரின் உடலையும் போலீஸார்  மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான நான்கு பேர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. சம்பவ இடத்தில் டைரி ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரிசா மாநிலம், கொரப்பூர் பிரசாந்கருடா என்ற பெயர், முகவரி இருந்தது. அதில் இருந்த செல்போன் நம்பர் மூலம் பலியானவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 4 பேர் பலியான சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-எஸ்.மகேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக