சனி, 17 செப்டம்பர், 2016

11 அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் ..

விகடன்.காம் :ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் குளிர்சாதன வசதி
கொண்ட ‘அம்மா திருமண மண்டபங்கள்’ 11 இடங்களில் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து தரப்பு மக்களும் குடியிருப்பதற்கு சொந்த இல்லம் பெற்றிட வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் அரசு பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில், தமிழ்நாடு குடிசைப் பகுதி வாரியம் மூலம் 59,023 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 10,537 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து தரப்பு மக்களின் நலன் பேணும் வகையில், பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

நடப்பு நிதியாண்டில், 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் 50,000 குடியிருப்புகள் கட்ட உத்தரவிட்டுள்ளேன். இதில் பயனாளிகள் தங்கள் இடங்களில் வீடுகள் கட்டும் வகையில் 45,000 வீடுகளுக்கு 945 கோடி ரூபாய் அளவிற்கு மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும், 5,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும் உத்தரவிட்டுள்ளேன்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவர்களின் நலன் கருதி, அவர்கள் விற்பனை பத்திரம் பெறும் வகையில் ஏற்கெனவே 2013, 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் வட்டி தள்ளுபடி திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 14,992 ஒதுக்கீடுதாரர்கள் பயன் பெற்றுள்ளனர். வாரியத்தில் மனை, வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் 23,600 பேர் இன்னமும் விற்பனை பத்திரம் பெற இயலவில்லை என்பதனை அறிந்து, அவர்களும் விற்பனை பத்திரம் பெறும் வகையில், அவர்களின் வட்டிச் சுமையை குறைக்க, வட்டிச் சலுகைத் திட்டம் ஒன்றினை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு மாதத் தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டியினை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை வருடத்திற்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.
ஏழை எளிய மக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த வாடகையாக அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ‘அம்மா திருமண மண்டபங்கள்’ கட்ட உத்தரவிட்டுள்ளேன். இந்த மண்டபங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒப்பனை அறை, மணமகன் மற்றும் மணமகளுக்கான தனி அறைகள், விருந்தினர்களுக்கான அறைகள், விருந்து உண்ணும் அறை, சமையல் கூடம் என அனைத்து வசதிகளும் இருக்கும். இந்தத் திட்டம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் ஆகியவை மூலம் செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக