திங்கள், 15 ஆகஸ்ட், 2016

அதிமுக கதை இலாகாவின் புளுபிலும் கற்பனைகள்... அமைச்சர்கள் பற்றிய CCTV காட்சிகள்... அதிரடிகள் காத்திருக்கிறது...


அ.தி.மு.க தலைமையுடன் சசிகலா புஷ்பா எம்.பி நடத்தும் ஆடுபுலி ஆட்டத்தின் கிளைமாக்ஸை கணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர் சீனியர் எம்.பிக்கள். 'கடந்த சில நாட்களாக அ.தி.மு.கவுக்கு எதிரான அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார் சசிகலா' என்கின்றனர் தூத்துக்குடி வட்டாரத்தில். தமிழ்நாட்டிற்குள் கால்வைக்க முடியாத அளவுக்குத் தொடர் வழக்குகளால் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. ' எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டால், வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவது மட்டுமல்லாமல், கட்சியிலும் தொடர்ந்து நீடிக்க முடியும்' என அ.தி.மு.க முன்னணியினர் நடத்தும் சமரசப் பேச்சுவார்த்தைக்கும் அவர் உடன்படவில்லை.
சசிகலா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள் ஜான்சிராணி, பானுமதி ஆகியோர் கொடுத்த பாலியல் புகார், ஒப்பந்ததாரர் ஒருவர் அளித்த பணமோசடிப் புகார் என தன்னை நோக்கிப் பாயும் அடுத்தடுத்த வழக்குகளைக் கண்டு அசராமல் இருக்கிறார் அவர். இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலாவின் ஆதரவாளர் ஒருவர்,

" தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் சீனியர்கள் ஆதரவு இருகிறது.சசிகலா புஷ்பா மிகவும்  தைரியமாக இருக்கிறார். தன் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில் இருந்து உரிய நியாயம் கிடைக்கும் வரையில் தமிழ்நாட்டிற்குள் கால்வைக்க அவரும் விரும்பவில்லை.
நேற்று காலை முதலே அ.தி.மு.கவுக்கு எதிரான அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார். அந்த ஆதரவுக் கடிதத்தில், ' என் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் போலியானவை என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக நீங்கள் எல்லாம் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். என் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் சரியானவைதானா என ஆராயும்படி, அறிக்கை வெளியிடுங்கள். எனக்காகப் பேசுவதைவிடவும் எங்கள் சமுதாயத்தின் நலனுக்காகக் குரல் கொடுங்கள்' என உருக்கமான வேண்டுகோளை வைக்கிறார்.
இந்த விவகாரத்தில், ராமதாஸ் போன்றவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தால், அ.தி.மு.க தலைமைக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடியும்' என நம்புகிறார். அவரது அறிக்கையை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வருகிறோம். டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மீதான வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, ' எந்த அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, விசாரணை விவரங்களைத் தாக்கல் செய்யுங்கள்' எனக் கேட்க இருக்கிறோம். நீதிமன்றத்தில் இந்த விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டாலே பொய் வழக்கு என்பதை வெகு எளிதாக நிரூபிக்க முடியும் என்பதை நம்புகிறோம். ஆகஸ்ட் 22-ம் தேதிக்காக காத்திருக்கிறோம்" என்றார் விரிவாக.

ஆனால், சசிகலா புஷ்பா விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க வழக்கறிஞர் ஒருவர், " அவர் மீது கொடுக்கப்பட்ட புகார்களுக்கு போதிய ஆதாரம் இருக்கின்றன. அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலாவின் தாயார் கவுரி ஆகியோர் செய்த கொடுமைகளுக்கு நேரடி சாட்சி இருப்பதால்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. தன் மீதுள்ள வழக்குகளை திசைதிருப்புவதற்காகவே அரசியல் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார் சசிகலா" என்கிறார்.

தி.மு.க எம்.பி கனிமொழியின் ஆதரவு, காங்கிரஸ் கட்சி குலாம் நபி ஆசாத்தின் அக்கறை, பா.ஜ.க சுப்ரமணியன் சுவாமியின் வழிகாட்டல்கள் என தனக்கான டெல்லி லாபியை வலுவாக்கிக் கொண்டுள்ள சசிகலா புஷ்பா, தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கும் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். முதல்வருக்கு எதிரான ஆட்டத்தில், ' ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை' என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார். ' சசிகலா விவகாரம் எதை நோக்கிப் பயணிக்கும் என்பது ஆகஸ்ட் 22 அன்று தெரிந்துவிடும்' என்கின்றனர் டெல்லி வட்டாரத்தில்.

-ஆ.விஜயானந்த்
  விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக