செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

விவசாய சங்க தலைவர் மருத்துவர் சிவசாமி காலமானார்.. தமிழ உழவர் உழைப்பாளர் கட்சியை....

எம்.ஆர்.சிவசாமி ‘விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நாமெல்லாம் சோற்றில் கை வைக்க முடியும்’ என்றொரு பழமொழியை நாம் பழக்கத்தில் நிறைய முறை கேட்டிருப்போம். அப்படிப்பட்ட விவசாயிகளை பொது சமூகத்தில் நினைத்து பார்ப்பவர்களும், மதிப்பு கொடுப்பவர்களும் அரிதிலும் அரிதானவர்களாகவே உள்ளனர். இன்று குறைந்தபட்ச மதிப்பு விவசாயத்துக்கும், விவசாயிகளும் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு பின்னே அய்யா சிவசாமியின் நீண்ட நெடிய போராட்டங்கள் உண்டு என்று சொன்னால் மிகையாகாது. மருத்துவராக வாழ்வியல் பயணத்தை தொடங்கிய கோவை சிவசாமி, பிற்பாடு அத்தொழிலை விட்டுவிட்டு முழு நேர விவசாயிகளுக்கான போராளியாக மாறினார்.
மண்ணை பீடித்திருக்கும் நோய்களை களைய, மண்ணுக்கான மருத்துவராக தன்னை உருமாற்றிக் கொண்டு ‘உழவர் உழைப்பாளர்’ கட்சியை நிறுவினார். விவசாயம், விவசாயிகளுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து தமிழக விவசாய மேம்பாட்டு வரலாற்றில் தனக்கென்று தனி இடம் பிடித்த விவசாய சங்க தலைவரான மருத்துவர் சிவசாமி நேற்று காலமானார்.


விவசாயிகளின் நலன்சார்ந்த பிரச்னைகளுக்காக 40 வருடங்களுக்கு மேலாக போராடி வந்தவர். குறிப்பாக மரபணு மாற்று பயிர்களுக்கு எதிர்ப்பு, கள் இறக்குவதற்கு அனுமதி, காவிரி, அட்டப்பாடி அணை பிரச்னை உள்ளிட்ட நதி நீர் பிரச்சனைகளிலும் குரல் கொடுத்தவர். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வந்தவர் டாக்டர் சிவசாமி.
இப்படி விவசாயிகளோடு தன்னை இணைந்துக்கொண்ட சிவசாமியின் இறுதி சடங்கு கோவை மத்தம்பாளையத்தில் இன்று மாலை நடைபெற்றன. பல்வேறு விவசாய சங்கத்தினரும், விவசாயிகளும் திரளானோர் பங்கேற்று தங்கள் உணர்வுகளை பிரதிபலித்தனர். இந்நிலையில் அவரின் நினைவுகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் அறிக்கையாக நம்மோடு அளவளாவுகிறார்.
‘தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். மருத்துவம் பயின்றவரான இவர், விவசாயத் தொழிலில் அதிக ஆர்வமும், ஊக்கமும் உடையவராகத் திகழ்ந்ததால் விவசாயிகளின் அடிப்படைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகத்தை உலுக்கிய மாபெரும் போராட்டத்தை நாராயணசாமி நாயுடு அவர்கள் நடத்தியபோது, அவருடன் தோளோடு தோள் நின்றவர் டாக்டர் சிவசாமி என்பதை மறக்க முடியாது. அப்போது நடைபெற்ற போராட்டம்தான் தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க முழு முதற் காரணமாக அமைந்தது. நாராயணசாமி நாயுடு அவர்களோடு இணைந்து விவசாயிகளின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்ற பெருமை சிவசாமி அவர்களுக்கு உண்டு. முப்பது ஆண்டுகளாக விவசாய சங்கத் தலைவராக செயல்பட்ட டாக்டர் சிவசாமி அவர்கள் இறுதி மூச்சு உள்ளவரை மங்காத போர்க்குணத்துடன் விவசாயிகளுக்காகப் போராடியவர். அவரின் மறைவு பொதுவாழ்வுக்கு, குறிப்பாக தமிழக விவசாயிகளுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
டாக்டர் சிவசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழக விவசாயிகளுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்கிறார் வைகோ.
மண்ணுக்குள் செல்லும் ஒவ்வொன்றும் மக்கி போகும் சூழலில் போராடும் விதையே பிற்பாடு மரமாகிறது. அப்படி, தனது போராட்டத்தின் மூலம் ஓங்கி உயர்ந்த விவசாயிகளுக்கான ஆலமரம் சிவசாமி. minnambalam.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக