புதன், 10 ஆகஸ்ட், 2016

பஞ்சு அருணாசலம்.... என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்னிலை சொல்லுவாய்...



தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லா ஆளுமையான பஞ்சு அருணாச்சலம்பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கும்போது, எங்கிருந்து தொடங்குவது என்ற யோசனை தோன்றுவதில் பிரச்னை இல்லை. ஆனால் எங்கிருந்து தொடங்கினாலும் அங்கு பஞ்சு அருணாச்சலம் சடாரென வந்து நிற்கிறாரே, அதுதான் ஆச்சர்யம்!. சித்தப்பா கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலம் முதல் இப்போது வரை, பஞ்சு அருணாச்சலம் செய்திருப்பவை சாதாரணமானவை அல்ல. மருத்துவச்சி என்ற கதையையும், டேனியல் என்ற கலைஞனையும் பற்றித் தெரிந்திருந்தால் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் தமிழ் சினிமாவுக்கு செய்திருக்கும் மிகப்பெரிய நல்லதைப்பற்றி அறிந்தவர்களாக இருப்பீர்கள். இல்லையென்றால் கேளுங்கள். பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இசைக்குழு நடத்திவந்த அண்ணன் தம்பிகளில் டேனியல் இராசய்யா என்ற கலைஞன் டேபிளில் கையால் தட்டி சில பாடல்களை பாடிக் காட்டுகிறான்.


அந்த சாதாரண செயலிலும் ஏதோ விஷயமிருப்பதை உணர்ந்த பஞ்சு அருணாச்சலம், ‘என் கதைகளுக்கு உன் பாடல்கள் செட் ஆகாது. இதுக்காக கதை எழுதணுமே’ எனக் கூறினாரே தவிர, ‘உனக்குப் படம் இல்லை, போய் வா’ என்று சொல்லவில்லை. டேனியல் இராசய்யாவை பஞ்சு அருணாச்சலம் அவர்களிடம் அறிமுகப்படுத்திய கதாசிரியர் ஆர்.செல்வராஜ், தன்னிடம் இருக்கும் மருத்துவச்சி என்ற கதையை சொல்கிறார். உடனே உதிக்கிறது அந்த ஜாம்பவானின் இதயத்தில் ஒரு ஒளி. ‘படத்துக்கு அன்னக்கிளின்னு பேர் வெச்சிடு. ஏற்கனவே ஒரு மன்னர் இருக்கார். இனி, உன் பேரு இளையராஜா’ என்று சொன்னபடி படவேலைகளில் இறங்குகிறார். உடனே அவருக்கு திரையுலகிலிருந்து பல எதிர்ப்புகள் வருகின்றன. இவர்களையெல்லாம் ஃபீல்டுக்குள் விடவேண்டாம் என பஞ்சு அருணாச்சலமும், ஆர்.செல்வராஜும் நெருக்கப்படுகிறார்கள். ஆனால், கொஞ்சமும் அசரவில்லை பஞ்சு அருணாச்சலம். ‘அவர்களை அமைதியா விட்டுடணும். எதிர்த்து ஏதாவது பேசுனா, அப்பறம் அவங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்காது’ என்று இளையராஜாவுக்கு அறிவுரை சொல்லி, தங்களது வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறார்கள்.
அன்னக்கிளி பாடல் ஹிட், தொடர்ந்துவந்த படமும் ஹிட். திரையுலகம் மூக்கின்மேல் விரல் வைத்தது. இயக்குநர்களுக்கு இளையராஜாவை வைத்துப் படம் எடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இளையராஜாவை அணுகுகிறார்கள். ஆனால், பஞ்சு அருணாச்சலம் சொன்னதை மறக்காமல், வந்தவர்களை தோழமையோடு அழைத்து படத்தில் கமிட் ஆனார். ஒரு இளையராஜா உருவானார். அந்தக் காலத்திலேயே உயர்வு தாழ்வற்ற ஒரு திரையுலகம் உருவாகவேண்டுமென்ற ஆசையுடன், கனவுடன் திரையுலகத்தின்மீது அக்கறை செலுத்திய மகா கலைஞனின் தனிப்பட்ட பயணம் எப்படி இருந்தது தெரியுமா? ரஜினி - கமல் என்ற இரு இந்திய அடையாளங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இணைந்து நடிக்க வேண்டாம் என ரஜினி -கமல் முடிவெடுத்தபோது அதனால் முதலில் பாதிக்கப்பட்டவர் பஞ்சு அருணாச்சலம்.

ஏனென்றால், முன்னரே இருவரிடமும் அவரது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார். திடீரென இருவரும் இம்முடிவை எடுத்துவிட, அது பஞ்சு அருணாச்சலம் இருவருக்குமாக வைத்திருந்த கதையைப் பாதித்தது. ஆனால், அவரைத் தளரவிடவில்லை அவர் திறமை. ஒரு வாரத்தில் படம் தொடங்கப்படும் வந்துசேருங்கள் எனச் சொல்லிவிட்டு வந்தவர், ஆறிலிருந்து அறுபது வரை, கல்யாணராமன் ஆகிய படங்களை எடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். இன்று ரஞ்சித் திரைப்படத்தில் ரஜினி அட்டகாசமாக நடித்திருக்கிறார் என்று புகழ்ந்துவரும் வேளையில், அன்றே அனைத்தையும் கணித்து ரஜினிக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படம், கமலுக்கு ஒரு கமெர்ஷியல் படம் என பிரித்துக்கொடுத்த பஞ்சு அருணாச்சலத்தின் திறமையை தனியே விளக்க வேண்டியதில்லை.
கமல் என்ற குதிரை சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்தபோது வாண்டடாக வலித்துக்கொண்டு வந்து, லாடமடித்து ரேஸுக்குள் இறக்கிவிட்டு கமெர்ஷியல் குதிரையாக ஓடத் தூண்டியவர் பஞ்சு அருணாச்சலம். தயாரிப்பைவிட பாடல்களுக்காக அதிகம் பாராட்டப் பெற்றவர் பஞ்சு அருணாச்சலம். கண்ணதாசனிலிருந்து வந்தாலும், அவர் ரீப்ளேஸ் செய்ய நினைத்தது பட்டுக்கோட்டையை. ஆனால், கடைசியில் நிலைத்து நின்றது பஞ்சு அருணாச்சலம் என்ற ஆளுமை. மணமகளே மருமகளே வா வா... என்ற பாடல் ஒலிக்காத திருமண வீட்டைக் காணமுடியுமா?
கலங்கரை விளக்கம் படத்தில் இடம்பெற்ற ‘என்னை மறந்ததேன் தென்றலே' பாடலில் ‘நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீ ஆடும் நாளும் வருமோ? இந்த நிலமாளும் மன்னன் நீயானபோதும் நானாளும் சொந்தம் இல்லையோ?’ என்ற வரிகளில், காதலனைக் காணா சோகத்தில், அந்நாளுக்காகக் காத்திருக்கும் மங்கையவள் மன்னனாக நீ இருந்தபோதுமென்ன? ஒரு நாளை விரைவாகக் கடந்துவர முடியாதவனாக இருக்கிறாயே’ என, காதலி ஏளனம் செய்வதுபோல் வரிகளை வைத்திருப்பார். எம்.ஜி.ஆர். படங்கள் என்றாலே ஆண் ஆளுமையை உயர்த்திப் பேசி, அவர்களது அழகில் பெண் மயங்கியதாக எழுதும் பாடல்களுக்கு மத்தியில், பஞ்சு அருணாச்சலத்தின் பாடல்கள் தன்னிகரற்றவை என்று சொல்வதில் பிழையேதுமில்லை என்பது சிறு புரிதல். இந்தவகைக் கவிஞர் என ஒரு வட்டமிட்டுக்கொள்ள விரும்பாதவர். அவர் தயாரித்த படங்களுக்கு பாடல் வரிகள் எழுதினாலும், அத்தனை பாடல்களுக்கும் எழுதவில்லை. ஒவ்வொரு படத்திலும் புது தளங்களைத் தொட்டார்.

கண்மணியே காதல் என்பது... (ஆறுலிருந்து அறுபது வரை), பேசக்கூடாது.... (அடுத்த வாரிசு), காதல் ஓவியம்... (அலைகள் ஓய்வதில்லை), மேகம் கருக்குது மழை வர... (ஆனந்த ராகம்), மச்சானைப் பார்த்தீங்களா... (அன்னக்கிளி), விழியிலே மலர்ந்தது... (புவனா ஓர் கேள்விக்குறி), அண்ணன் என்ன... தம்பி என்ன... (தர்மதுரை) என அவரது ஆளுமை எல்லாத் திசைகளிலும் நீட்சி கண்டது. ரஜினி - கமலின் வாழ்க்கையில் மிக முக்கியமானவராக மாறினார். ஆனால், காலம் அப்படியே இருக்காது அல்லவா? விரும்பத்தகாத அளவுக்கு மாறியது. கடன் பிரச்னையால் இருந்த பஞ்சு அருணாச்சலத்துக்காக ரஜினி தானே முன்வந்து வீரா கால்ஷீட் கொடுத்தார். பிரச்னை முடிந்தது எனத் தெரிந்ததும் அமைதியாக தன் வேலையைத் தொடர்ந்தார் ரஜினி. ஆனால் பிரச்னை வேறு ரூபத்தில் வந்தது. பஞ்சு அருணாச்சலம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. ரஜினியும், ராஜாவும் சென்று பார்த்தனர் பஞ்சு அருணாச்சலம் அவர்களை. அன்று ரஜினி பஞ்சு அருணாச்சலம் அவர்களிடம் சொல்லி ஓ.கே. வாங்கிய ஐடியாதான், இன்று கபாலி திரைப்படத்தில் அவர் நடிக்கக் காரணம். ரஜினி இப்படியென்றால் கமல் வேறு திசை. சில மாதங்களில் ‘பஞ்சு அருணாச்சலம் எழுதிய கடைசிப் பாடல்’ என்ற அறிவிப்புடன் முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகும். அந்தப் படத்தைப் பற்றி பேச பல விஷயங்கள் இருப்பதால் வரிசையாக செல்வோம். முத்துராமலிங்கம் திரைப்படத்தின் இயக்குநர் ராஜதுரை. இந்தப் படத்துக்கு இளையராஜாவை இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கிறார்.

இளையராஜாவுக்கு ஒரு ஐடியா. பஞ்சு அண்ணனை எழுத வைக்கலாமே என அவரிடம் பேசுகிறார். உடனே பஞ்சு அருணாச்சலம் அவர்களும் ஒப்புக்கொண்டு 21 வருடங்களுக்குப் பிறகு, இளையராஜா-பஞ்சு அருணாச்சலம் கூட்டணி மீண்டும் வருகிறது என்ற தகவல் காட்டுத்தீ போல பரவுகிறது. அதேசமயம், இவர்கள் இருவருக்கும் ஒன்றின் மீது இருந்த ஒரே காதலால், அதையும் படத்தில் வைத்தால் நன்றாக இருக்குமென முடிவெடுத்து கமலிடம் பேசினார்கள். கேட்காதவர்கள் இருவர் கேட்டதால், முத்துராமலிங்கம் படத்தில் பாடித் தருகிறேன் என மனப்பூர்வமாக சம்மதிக்கிறார் கமல். அரைநாளில் பஞ்சு அருணாச்சலம் வரிகளுக்கு, ராஜா மெட்டமைத்த பாடலையும் பாடிக்கொடுத்துவிட்டுச் செல்கிறார் கமல். முத்துராமலிங்கம் திரைப்படத்துக்கு பாட்டெழுதியதன்மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுதலைமுறை நடிகர்களுக்கும் பாட்டெழுதியவர் பஞ்சு அருணாச்சலம் என்ற சாதனைக்குரியவர். நடிகர் முத்துராமனுக்கு மயங்குகிறாள் ஒரு மாது, கார்த்திக்குக்கு என் ஜீவன் பாடுது, கௌதம் கார்த்திக்கு முத்துராமலிங்கம் என 3 தலைமுறையை தாங்கிப்பிடித்த தன்னிகரில்லா கலைஞன் பஞ்சு அருணாச்சலம். சென்னை தி.நகரில் குடும்பத்தோடு வசித்துவந்த அவர், வயது முதிர்வு காரணமாக இன்று (ஆகஸ்ட் 9ஆம் தேதி) காலை தூக்கத்திலேயே இறந்தார். 1941ஆம் ஆண்டு, காரைக்குடியில் உள்ள சிறுகூடல்பட்டிதான் பஞ்சு அருணாச்சலத்தின் சொந்த ஊர். தன் தாத்தாவின் பெயரான அருணாச்சலத்துடன் அவரது குலதெய்வமான பஞ்சநாதசாமி பெயரில் உள்ள பஞ்சையும் இணைத்து பஞ்சு அருணாச்சலம் என்று அவரது பெற்றோர் பெயர் வைத்திருக்கிறார்கள். -சிவா  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக