ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

சாதி என்பது ஒரு மனோ நிலை. சாதி என்பது ஒரு மன வியாதி

thetimestamil.com    ப.ஜெயசீலன்INCEPTION திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இந்த வசனம்: தமிழில் இப்படி வரும்.
:அழிக்கமுடியாத தொற்று கிருமி எது? பாக்டீரியாவா? வைரஸா? குடற்புழுவா? இல்லை. ஒரு சிந்தனை/ஒரு கருத்து. அது ஒரு பயங்கர தொற்று நோய்.
ஒரு கருத்து/ ஒரு சிந்தனை ஒருவனுடைய மனதில்/மூளையில் வலுவாக விதைக்கப்பட்டுவிட்டால் மீண்டும் அந்த கருத்தை/சிந்தனையை அழிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாதது.முழுவதுமாக உருவாகிவிட்ட/புரிந்துகொள்ளப்பட்ட ஒரு கருத்து/சிந்தனை மூளையில்/மனதில் என்றென்றைக்குமாய் தங்கிவிடும்” இந்த வசனத்தை நான் கேட்ட பொழுது எனக்கு உடனே நியாபகம் வந்தது அம்பேத்கரின் ஒரு மேற்கோள்தான்.“சாதி என்பது ஒரு மனோ நிலை. சாதி என்பது ஒரு மன வியாதி. இந்து மதத்தின் பிரச்சாரங்களும்/கருத்தாக்கங்களும் தான் அந்த நோயின் மூலம். நாம் சாதியை பின்பற்றவும், தீண்டாமையை கடைபிடிக்கவும் ஹிந்து மதம்தான் நமக்கு அழுத்தம் தருகிறது

” இதனால்தான் அம்பேத்கர் சாதி என்னும் கருத்தை/சிந்தனையை நம் சமூகத்தில் அழிக்கவே முடியாதா வண்ணம் வேதங்களின், இதிகாசங்களின், புராணங்களின் வழி ஒரு முழுமையாக உருவாகிவிட/புரிந்துகொள்ளப்பட காரணமாய் இருந்த,இருக்கிற ஹிந்து மதத்தை மூர்க்கமாய் எதிர்த்தார். ஹிந்து மதத்தின் கருத்துருவாக்கத்தில் உள்ள எல்லா மோசடிகளையும் அம்பலப்படுத்தினார். உச்சகட்டமாக அந்த மதத்தை விட்டெ வெளியேறினார். அம்பேத்கர் செய்ய முயன்றது சாதி என்னும் கருத்து இந்திய மனங்களில்/சமூகத்தில் வலுவாக அழிக்கவே முடியாத வண்ணம் விதைக்கபட்டுவிட்ட சூழலில் “சாதி” என்ற அந்த கருத்தை  சுற்றி தர்க்கரீதியான, அறிவியல்ரீதியான ஒரு குழப்பத்தை/கலகத்தை விதைப்பதன் மூலம் “சாதி” என்னும் நோயில் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியா மனங்களை விடுவிப்பது.
இப்படி சாதி என்பது ஒரு வேரூன்றி விட்ட கருத்து என்னும் அடிப்படையில், சாதி என்பது ஒரு பயங்கரமான தொற்றிக்கொள்ளும் மன நோய் என்னும் அடிப்படையில், அந்த மன நோயில் இருந்து ஒருவனை விடுவிக்க அவனை சாதி என்னும் கருத்தாக்கத்தில் இருந்து விடுவித்தல் அவசியம் என்னும் அடிப்படையில், அதை நிகழ்த்த நாம் சாதியை நம்பும் ஒருவனுடைய மனதில் சாதியை குறித்து குழப்பத்தை நிகழ்த்த வேண்டும் என்னும் அடிப்படையில்தான் சாதி மறுப்பு திருமணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது.
சாதி என்னும் இல்லாத ஒன்று, சாதி என்னும் அயோக்கியத்தனம், சாதி என்னும் மடமைத்தனம் இத்தனை காலம் பிழைத்து வந்ததற்கு மைய்ய புள்ளி என்று ஒன்று இருக்குமானால் அது நிச்சியமாக அகமண முறைதான். அகமண முறை என்பது சாதி என்னும் கருத்தாக்கத்தை மேலும் மேலும் வலுவாக்க, நிறுவ பயன்பட்டு இருக்கின்றது. எப்படி என்றால் மனிதன் ஒரு சமூக விலங்கு என்னும் அடிப்படையில் தான் அடையாளப்டுத்தப்படும் சமூகத்துடன்/குழுவுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது என்பது ஒரு மனோவியல் இயல்பு. இதன் அடிப்படையில் ஒரு வன்னியர் இன்னொரு வன்னியரை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு பிறக்கும் ஒரு குழந்தை தன்னுடைய குழு சார்ந்த அடையாளத்துடன் தான் வளர்க்கபடும். சரி,தவறு என்பதை தாண்டி தனது குழுவை தாங்கி பிடித்தல் அந்த குழந்தை வளரும் பொழுது இயல்பாக நிகழும். அதே போல ஒரு பறையருக்கும் இன்னொரு பறையருக்கும் பிறக்கும் குழந்தைக்கும் இதுவெதான் நிகழும். இந்த இரு குழந்தைகளும் வளர்ந்து இன்று பெரியவர்கள்  ஆகிவிட்டார்கள் என்று வைத்து கொண்டு அவர்களிடம் நாடக காதல் குறித்து கருத்து கேட்டால் என்ன சொல்வார்கள்? வளர்ந்து விட்ட வன்னிய குழந்தை “ஐயா சொன்ன சரியாத்தான் இருக்கும். காடுவெட்டி சொல்லி இருக்காப்ல நாங்க வேர்வ நெருப்புல விழுந்து பொறந்தவங்க.எங்க  பொண்ண தொட்ட கைய்ய வெட்டுவோம்” என்று ஆவேசப்படும். வளர்ந்து விட்ட பறையர் கொழந்தை “ராமதாஸ் குடிசை கொளுத்தி சாதிவெறியோட இப்படி சொல்லறாப்ல..டாக்டருக்கு படிச்சு என்ன பிரோயோஜனம்..அறிவு இல்லாம பேசறாப்ல” என்று ஏசும்.
இப்பொழுது நாம் வன்னியருக்கும் பறையருக்கும் பிறந்து  இன்று வளர்ந்து விட்ட சாதி சான்றிதழில் பறையர் என்று இருக்கும் ஒருவரிடம் போய் இந்த கருத்தை கேட்டால் அவர்” திருமாவும் நல்ல தலைவர் ஐயாவும் நல்ல தலைவர்..ரெண்டு சமூகமும் உழைக்கும் வர்க்கம்..ஒற்றுமையா இருக்கிறது ரெண்டு பேருக்கும் நல்லது…காதல் இயல்பானதுதுங்க” என்னும் ரீதியில் பேசுவார். இப்பொழுது இவரது குழந்தை முதலியார் சாதியில் திருமணம் செய்து அந்த குழந்தையின் சாதி சான்றிதழில் முதலியார் என்று இருந்து அந்த குழந்தை வளர்ந்த பின் அதனிடம் நாடக காதல் கேள்வியை கேட்டால் “போடா #$%^&” என்று ஏசுவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றல் அந்த குழந்தை இப்பொழுது பறையர் வன்னியர் முதலியார் என்ற மூன்று சாதிகளின் பிரதிநிதியாய் இருப்பதினால் வெவ்வோறு படிநிலையில் உள்ள இந்த மூன்று சாதிகளின் சரி தவறுகளை சாதி ரீதியாக இல்லாமல் தர்க்கரீதியாக அணுகும்.
ஆஸ்திரேலியா போன்ற வெள்ளையர்கள் குடியமர்த்தப்பட்ட நாடுகளில் “நான் ஆங்கிலேயே ஜெர்மானிய இத்தாலிய வம்சாவளி” என்று ஒருவர் சொல்வது சர்வ சாதாரணம். அதன் அர்த்தம் எனது முந்தய தலைமுறையினர் ஆஸ்திரேலியாவில் இருந்த வெவ்வேறு நாட்டினருடன் திருமண பந்தம் கொண்டனர் என்பதே. இதன் பலன் என்னவென்றால் இங்கிலாந்தும் ஜெர்மனியும் முரண்பட்டால் அதில் சரியானவர்களின் பக்கம் நிற்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுகின்றது. இதை போலவே ஒரே குடும்பத்தில் பல சாதியினர் புழங்கும்போது அங்கு வளரும் குழந்தை தன்னை ஒரு சாதி சார்ந்து அடையாளப்படுத்துதல் அவசியம் இல்லாமல் போகிறது. சாதி என்னும் கருத்து அந்த குழந்தையின் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் உயர்ந்தவர்/தாழ்ந்தவர்  என்ற கருத்தாக்கத்தை அந்த குழந்தை ஏற்கனவே கடந்துவிட்டது. எத்தனை சித்திரை திருவிழா நடத்தி ஊளையிட்டாலும் அந்த குழந்தை போடா @#$% என்றுதான் அழுத்தம் திருத்தமாக சொல்லும். இந்த புள்ளியிலும் அந்த குழந்தையின் சான்றிதழில் எதாவது ஒரு சாதி இருக்கும். எப்படி தன்னை ஆங்கிலேய ஜெர்மானிய இத்தாலிய வம்சாவளியாக உணருபவன் சான்றிதழில் ஆஸ்திரேலியனாக தன்னை அடையாளப்படுத்துகிறானோ அந்த அளவில் இருக்கும்.
ராமதாஸ் கேட்கும் “சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளும் சாதி சான்றிதழில் ஒரு சாதியை போடத்தானே செய்கிறார்கள்..அப்பறம் எங்கு சாதி ஒழிகிறது” என்ற அறிவாளித்தனமான கேள்வி காடுவெட்டி குருவிற்கு வேண்டுமானால் அறிவாளித்தனமாக படலாம். நமக்கு அப்படி தோன்றாது. சாதியை அழிப்பது என்பது சாதி பெயர்களை அழிப்பதோ, சாதி சான்றிதழ் இல்லாத நிலையை உருவாக்குவதோ இல்லை. ஏனென்றால் Smith, Butcher என்று குலத்தொழிலை இன்றும் குடும்ப பெயராக கொண்டவர்கள் இன்று மேலைநாடுகளில் தங்கள் நாட்டின் தேசிய அணிக்கு கேப்டன் ஆகும் அளவுக்கு எல்லோருடனும் கலந்து விட்டார்கள். சாதி சான்றிதலே இல்லாத காலத்திலும் இந்தியாவில் சாதி வலுவாக இருந்தது. எனவே சாதி ஒழிக்க சாதி பெயர்களை அழிப்பதோ, சாதி சான்றிதழ் இல்லாமல் செய்வதோ வழி அல்ல. மாறாக சாதி என்னும் மன நோயில் இருந்து சமூகத்தை விடுவிக்க சாதி என்னும் கருத்தாக்கத்தை வலுவிழக்க செய்ய வேண்டும்.அதை நிகழ்த்த சாதி என்னும் கருத்தாக்கத்தை சுற்றி குழப்பத்தை விதைக்க வேண்டும். அந்த குழப்பத்தை நிகழ்த்த அகமன முறை ஒழிய வேண்டும். அதை ஒழிக்க சாதி மறுப்பு திருமணங்கள் பெறுக வேண்டும்.
இதை நாம் நிகழ்த்துகிறோமோ இல்லையோ உலகமயமாக்கலும், புதிய பொருளாதார கொள்கைகளும் நிச்சயம் நிகழ்த்தியே தீரும். பெண்கள் சம்பாத்தியம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாது என்ற தற்போதைய மத்தியவர்க குடும்ப பொருளாதாரமே அகமண முறைக்கு அடிக்கப்பட்ட முதல் சாவு மணி . பெண்கள் கல்வி, வேலை நிமித்தம் நகரம் நோக்கி நகரும் பொழுது தனக்கானவனை தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவர்கள் நிச்சயம் அடைவார்கள். அவர்கள் வந்த புள்ளியை வந்தடையும் தருணத்தில் அகமனமுறைக்கு கடைசி சாவு மணி அடிக்கப்பட்டிருக்கும்..
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை…
ப.ஜெயசீலன். தமிழ் சமூக பார்வையாளர்.
முகப்புப் படம்: தலித்நேஷன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக